

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் நாளன்று ‘தேசிய சுற்றுலா நாள்’ (January 25: National Tourism Day) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு முதன்முதலில் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று தேசிய சுற்றுலா நாளைக் கடைப்பிடித்தது. இந்தியாவிலுள்ள முக்கியமான சுற்றுலா இடங்களை மேம்படுத்துவதும், இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும் தேசியச் சுற்றுலா நாளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
சுற்றுலா என்பது புதிய இடங்களைப் பார்வையிடுவது மட்டுமல்ல, இது கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை மற்றும் மனிதத் தொடர்பைக் கொண்டாடுவதாகும். இந்தியாவின் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் பன்னாட்டு உறவுகளில் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் தேசிய சுற்றுலா நாள் கொண்டாடப்படுகிறது. தேசிய ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார விழிப்புணர்வை மேம்படுத்துவதில் சுற்றுலாவின் பங்கை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
1. சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் குடிமக்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட இடங்களை ஆராய ஊக்குவிக்கிறது.
2. சுற்றுலா என்பது பல வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, உள்ளூர் வணிகங்களை ஆதரிக்கிறது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கிறது. இதன் மூலம்பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது.
3. இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்வதையும், பாராட்டுவதையும் ஊக்குவிக்கிறது.
4. இயற்கை மற்றும் கலாச்சார வளங்களைப் பாதுகாக்க பொறுப்பான பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
5. சுற்றுலா பிராந்திய ஒருங்கிணைப்பையும் தேசியப் பெருமையையும் பலப்படுத்துகிறது.
குறிப்பாக, இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், இயற்கை அழகு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரங்களை ஆராய்வதன் முக்கியத்துவத்தை இந்தச் சுற்றுலா நாளைக் கொண்டாடுவதன் மூலம் வலியுறுத்துகிறது.
ஒவ்விரு ஆண்டும் தேசிய சுற்றுலா நாளுக்கு ஒரு கருப்பொருள் உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் சுற்றுலா நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக, "உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான சுற்றுலா" (Tourism for Inclusive Growth and Sustainable Development) என்ற கருப்பொருள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கருப்பொருளின் வழியாக,
1. சுற்றுச்சூழலையும் உள்ளூர் சமூகங்களையும் பாதுகாக்கும் நிலையான சுற்றுலா நடைமுறைகளை ஊக்குவித்தல்.
2. உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், சுற்றுலா சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிப்பதை உறுதி செய்தல்.
3. வேலைவாய்ப்பு உருவாக்கம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் பொருளாதாரச் செழிப்பு ஆகியவற்றில் சுற்றுலாவின் பங்கை எடுத்துக் காட்டுதல்.
4. இந்தியாவின் பாரம்பரியத்தையும், இயற்கை அழகையும் போற்றும் அதே வேளையில், பயணிகளைப் பொறுப்புடன் ஆராய ஊக்குவிக்கிறது.
தேசியச் சுற்றுலா நாளில் உங்களின் பங்களிப்புகள் கீழ்க்காணும் வகையில் அமையலாம்.
1. உள்ளூர் வரலாற்று நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் இயற்கைப் பூங்காக்களைப் பார்வையிடலாம்.
2. உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன் சிறு வணிகங்களை ஆதரிக்கலாம்.
3. சமூக ஊடகங்களில் புகைப்படங்கள், பயண அனுபவங்கள் மற்றும் கலாச்சாரக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
4. அருகில் நடக்கும் சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.
5. சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் நிலையான பயண விருப்பங்களை ஆராயலாம்.
6. இந்தியாவின் சுற்றுலாப் பாரம்பரியத்தைப் பற்றி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கலாம்.
7. பயண மற்றும் சுற்றுலா அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்குகள் அல்லது பட்டறைகளில் கலந்து கொண்டு, கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
அப்புறமென்ன, தேசியச் சுற்றுலா நாளில் அருகிலுள்ள ஏதாவதொரு நினைவுச் சின்னம் அமைந்த இடத்திற்குச் சென்று, அது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்து கொண்டு, தங்களது சமூக வலைத்தளப் பதிவுகளில் அதனைப் பகிர்ந்து கொண்டாடுங்கள்!