National Doctors' Day
National Doctors' Day

தேசிய மருத்துவர்கள் தினம் - மருத்துவர்களின் நலனுக்காக பிரார்த்திப்போம்!

Published on

ஒவ்வொரு வருடமும் ஜூலை முதல் தேதி, இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினமாகக் (National Doctors' Day) அனுசரிக்கப் படுகிறது.

மேற்கு வங்காளத்தில், 1882ம் வருடம் ஜூலை மாதம் முதல் தேதி பிறந்தவர் டாக்டர். பிதான் சந்திர ராய். மருத்துவ சேவைக்காக தன்னை அர்ப்பணித்து, 1962ம் ஆண்டு அதே ஜூலை முதல் தேதி மறைந்தார். அவரது நினைவாக இந்த நாள் தேசிய மருத்துவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு தீம் அளிக்கப் படுகிறது. இந்த ஆண்டுக்கான தீம்...

“Behind the Mask: Who Heals the Healers?”

எந்த நோய் வந்தாலும் மருத்துவர்களிடம் செல்கிறோம். நமக்கு என்ன நோய் என்பதை சரியாக கண்டுபிடித்து, சிகிச்சை அளிப்பதிலும், தொடர்ந்து கண்காணித்து நம் உடல் நலத்தைப் பேணுவதிலும் மருத்துவர்களின் மகத்தான பணி மிகவும் போற்றத்தக்கது. நம் உடல் நலத்துக்காக தன்னலமின்றி எப்போதும் பணி புரியும் மருத்துவர்களுக்கு நம் அன்பையும் நன்றியையும் தெரிவித்து வணங்குவோம்.

நோயாளிகளின் நலனுக்காக, தன் நலனையும் பொருட்படுத்தாது எப்போதும் பணியாற்றும் மருத்துவர்களின் உடல் நலமும் மன நலமும் முக்கியமல்லவா? அதுதான் இந்த வருடத்திற்கான தீம்.

மருத்தவர்களின் நலனைப் பாதுகாப்பது யார்? Who Heals the Healers?

மருத்துவர்கள் தங்கள் நலனை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பது பற்றி சில டாக்டர்களிடம் பேசினோம். சுவாரசிய பகிர்வுகள் இங்கே...

Dr. Chokkalingam
Dr. Chokkalingam

டாக்டர் வி. சொக்கலிங்கம்

MD. DM . FACC (USA) D.Sc

இதய நல மருத்துவர்,

சென்னை.

கடந்த 60 ஆண்டுகளாக இதய நல மருத்துவராக இருக்கும் நான் இன்றும் 30 வயதாகவே உணர்ந்து செயல்படுகிறேன்...

உயிரெனும் தெய்வம் உடல் என்னும் ஆலயத்தில் தான் இயங்க முடியும்.

இந்த இரண்டையும் தாங்கிப் பிடிப்பது நாம் காண முடியாத மனம். அதில் நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.

உணவு, உணர்வு, உடற்பயிற்சி என்னும் மூன்று “உ” களை கடந்த 60 வருடங்களாக தவறாமல் கடைப் பிடிக்கிறேன். சீரான உணவு, நேரான உணர்வு, தவறாமல் உடற்பயிற்சி. இவை மூன்றும் என் மந்திரங்கள்.

நூறாண்டு காலம் வாழ்க என்று பொதுவாக வாழ்த்துவார்கள். நூறு ஆண்டுகள் இயங்கும் சக்தி கொண்டது இதயம்.

அது பேசினால் மனிதரிடம் என்ன கேட்கும் தெரியுமா?

“நீ என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாயா?”

மகிழ்ச்சி என்பது கொடுப்பதில் இருக்கிறது. அது நேரமாக, அறிவாக, உழைப்பாக, பணமாக எப்படி வேண்டுமனாலும் இருக்கலாம். கொடுக்கும் இடத்தில் இருப்பதுதான் மகிழ்ச்சி.

கருவறையிலும் கல்லறையிலும் மட்டுமே மனிதன் அமைதியாக இருப்பதாக சொல்வார்கள். இடைப்பட்ட காலத்திலும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாமே.

உலகில் மாரடைப்பு வந்து இறப்பவர்களில் அதிக சதவீதம் இந்தியாவில்தான். அதிலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு மணி நேரத்துக்கு 90 பேர் என்கிறது புள்ளி விபரம்.

இதையெல்லாம் எப்படி தடுப்பது?

நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, ஆனால் இன்றிருப்பதோ கையில் வீணை என்பதைப் புரிந்து கொண்டு சிரிப்புடன் வாழலாம்.

நம் வாழ்க்கையை நாம்தான் நிர்ணயிக்க வேண்டும். மற்றவரைப் பார்த்து காப்பி அடிப்பது, ஒப்பிடுவது எல்லாம் நம் மகிழ்ச்சிக்கு உலை வைக்கும்.

வாழ்க்கையை ஒரு கால்குலேட்டருக்கு ஒப்பிடலாம்... அதில் எத்தனை சிம்பல்கள் இருக்கின்றன... நல்லதைக் கூட்டி, அறிவைப் பெருக்கி, நேரத்தை வகுத்து, கவலைகளைக் கழித்து, சமநிலையில் வாழக் கற்றுக் கொண்டால் போதும்.

இவற்றையெல்லாம் நானும் கடைப் பிடிக்கிறேன். மற்றவர்களுக்கும் சொல்கிறேன்.

நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் மாரடைப்பு மட்டுமல்ல எந்த நோயையும் தவிர்க்கலாம்.

Dr. Haritha
Dr. Haritha

டாக்டர் P. S. ஹரிதா BDS, MDS (Orthodontics)

(Associate Professor, Assistant Dean of Students (Dental)

Department of Orthodontics Sri Ramachandra Dental College & Hospital)

ஒரு பேஷண்ட் எந்த மன நிலையில் வந்தாலும், எத்தகைய வலியுடன், பாதிப்புடன் வந்தாலும் பொறுமையாக, அமைதியாக அணுக வேண்டும்.

அவர்களுக்கு சிகிச்சை முறைகள் என்னென்ன என்று முதலிலேயே விளக்கி விட வேண்டும். இரக்கம், கனிவு இவற்றோடு துணிவோடும் நோயாளிகளுக்கு சிகிச்சை தர வேண்டியது எல்லாமே பல் மருத்துவர்களுக்கு அவசியமான ஒன்று. பல் மருத்துவரான என்னைப் பொறுத்தவரை, பல் வலி என்பது ஒரு பக்கம்... அதைத் தீர்ப்பது என்பது தவிர, அவர்களது அழகான புன்னகையை மீட்டுத் தருவதிலும், அவர்களுக்கு தன்னம்பிக்கை தருவதிலும் தான் எங்களுக்கு மகிழ்ச்சி.

சரியாக மென்று சாப்பிட முடியாமல், ஜீரணக் கோளாறுகள் வரும். அவற்றை நிவர்த்தி செய்து, சரியாக சாப்பிட முடிபவர்களைப் பார்க்கும் போது நிறைவாக இருக்கும்.

“பல்லுப் போனால் சொல்லுப் போச்சு” என்பார்கள். பற்கள் சரியாக இல்லாத போது பேச்சும் சரியாக இருக்காது. சொசைட்டியில் யாருடனும் சரியாகப் பழக முடியாமல் கூச்சம் தடுக்கும்.

சிறு வயதினருக்குக் கூட பற்கள் சரியாக இல்லையென்றால் தன்னம்பிக்கை குறையும், சமூக பழக்கங்களும் தடைபடும்.

இதற்கு சிகிச்சை அளித்து, இதன் மூலம் சிறு வயதினரின் ஐ.க்யூ அதிகரித்ததையும், அவர்கள் மற்றவர்களுடன் இயல்பாகக் கலந்து பழகுவதையும் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த சிகிச்சை பற்களின் சீரமைப்பு (Oral Rehabilitation) ஆகும்.

இதையும் படியுங்கள்:
இந்தியப் பெண்களின் உடல் நலத்துக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த அமெரிக்க பெண் மருத்துவர்!
National Doctors' Day

பல் மருத்துவர்கள், நோயாளிகளின் முகத்தருகே நெருங்கி சிகிச்சை செய்வதால் கோவிட் சமயத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது.

மாஸ்க், ஷீல்ட் என்று பல அடுக்கு பாதுகாப்போடு இருந்தோம்.

நீண்ட நேரம் குனிந்து சிகிச்சை செய்வதால், கழுத்துவலி, முதுகு வலி வரும். அதற்கான உடற்பயிற்சிகள், யோகா, தியானம் என்று நான் தினமும் செய்து வருகிறேன்.

Dr. Sudhakar
Dr. Sudhakar

டாக்டர் சுதாகர்

BPT, MPT (Sports), PhD

Managing Director

Health Line Physiotherapy Clinic & Wellness Centre

மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்துகள், வலியைக் குறைக்கும் மாத்திரைகள், அறுவை சிகிச்சை என்று பல முறைகளில் மருத்துவம் செய்து குணப்படுத்தி விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
Cardiac Arrest vs Heart Attack: அறிகுறிகள், வேறுபாடுகள்!
National Doctors' Day

ஆனால் அதற்குப் பிறகான அவர்களது நடைமுறை தினசரி நார்மல் (Functional Life) வாழ்க்கை முறைக்கு பிசியோதெரபி மிக அவசியம்.

உடல் இயக்க குறைபாடுகள் மற்றும் வலியை குணப்படுத்த உதவும் ஒரு அத்தியாவசியமான சிகிச்சை முறை.

சுதந்திரமாக, மற்றவரை எதிர்பாராமல் தானாகவே இயங்க வைப்பது (Functional Independence) ஒரு பிசியோ மருத்துவரின் பணி. பிறந்த குழந்தை முதல் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பலருக்கும் பல முறைகளில் தேவைப் படுகிறது.100 வயதைக் கடந்த இரண்டு பேருக்கு சமீபத்தில் பிசியோதெரபி செய்தேன்.

ஐ.சி.யூ, ஜெனரல் வார்ட்கள், வீடுகள் என்று பல இடங்களிலும் சென்று பாதிக்கப் பட்டவருக்கு பிசியோதெரபி செய்ய வேண்டியிருக்கும்.

நான் பிரத்தியேகமாக விளையாட்டு வீரார்களுக்கான பிசியோதெரபி செய்து வருகிறேன். அவர்களுடைய உடற்கட்டுக்கு தெரபி தர வேண்டுமென்றால் நான் நிச்சயமாக என்னை ஸ்ட்ராங் ஆக வைத்திருக்க வேண்டுமல்லவா...

இதையும் படியுங்கள்:
மருத்துவமனையில் மருத்துவர் முதலில் நமது நாக்கை ஏன் பார்க்கிறார் தெரியுமா? 
National Doctors' Day

தினம் ஒரு மணி நேரத்திற்குக் குறைவில்லாமல் உடற்பயிற்சி செய்கிறேன்.

சிறு வயதிலிருந்தே நான், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்ட ஸ்போர்ட்ஸ்மேன் என்பதால் பிசியோதெரபி தருவதற்கான நம்பிக்கை என்னிடம் உண்டு.

மருத்துவம் மூலம் குணமடைவோர், தாமாகவே சுயசார்புடன் வாழ பெரும் பங்கு வகிப்பது பிசியோதேரபி தான்.

logo
Kalki Online
kalkionline.com