
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. அதனையடுத்து, இந்நாள் உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை, 1989 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் நாளை உலக மக்கள் தொகை நாளாகக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்து அறிவித்தது. உலக மக்கள்தொகை நாள், குடும்பக் கட்டுப்பாடு, பாலினச் சமத்துவம், வறுமை, தாய்வழி உடல் நலம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பல்வேறு மக்கள்தொகைப் பிரச்சினைகளில், மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக மக்கள்தொகை நாளில், உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகையால், உலக வளங்கள் நீடித்து நிலைக்க முடியாத விகிதத்தில் குறைந்து கொண்டேச் செல்வதால், இயற்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதுடன் பல்வேறு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை முதன்மைக் கருத்தாகக் கொண்டு, விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. இதேப் போன்று, அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கான கருவுறுதல் மற்றும் குழந்தைப் பிறப்பின் போது, பெண்கள் எதிர்கொள்ளும் உடல் நலப் பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
மக்கள்தொகைப் பிரச்சனை சமூகத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாலின சமத்துவமின்மை மற்றும் மனித உரிமைகள் சார்ந்த துறைகளில், குறிப்பாக, வளரும் நாடுகளில், எப்போதும் இல்லாத அளவுக்கு கொடூரமான குற்றங்கள் நடந்து வருகின்றன. அதிகமான மக்கள் தொகை, மனிதக் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் போன்ற உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
உலக மக்கள் தொகையானது தற்போதைய நிலையில், 7.8 பில்லியன் என்று இருக்கிறது. உலகின் மிக உயர்ந்த மக்கள்தொகை கொண்ட நாடாக, 1,442,857,138 எனும் அளவில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, 1,388,712,570 எனும் எண்ணிக்கையுடன் இந்தியா இரண்டாமிடத்தில் இருக்கிறது.
மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதம் எனும் அளவில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளுக்கும் 223,098 மக்கள் தொகை வீதம், ஒரு வருடத்திற்கு 81,430,910 மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
உலகில், ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் தற்போதைய மக்கள்தொகை வளர்ச்சியானது 13 சதவிகிதத்திலிருந்து, அடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கும் என்றும், ஐரோப்பாவில் 12 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறையுமென்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் வேகம் அதிகரிக்கும் என்றும், வரும் 2057 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
உலக மக்கள்தொகை நாள், மக்கள்தொகையினைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழ்ந்திட வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பரப்புரைகளை அதிகரித்திட உதவுகிறது. மக்கள்தொகையினைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அம்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதுடன், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான விழிப்புணர்வுப் பரப்புரைகளை அரசு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவைகளுடன் இணைந்து செயல்படலாம்.