மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்ட மண்டேலா! உலகை உலுக்கிய அவரது விடுதலை!

ஜூலை 18: பன்னாட்டு நெல்சன் மண்டேலா நாள். நோபல் பரிசு மட்டுமின்றி, 250-க்கும் அதிகமான உலகின் உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஒரே தலைவர் நெல்சன் மண்டேலா
Nelson Mandela
Nelson Mandela
Published on

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 ஆம் நாளன்று, ‘பன்னாட்டு நெல்சன் மண்டேலா நாள்’ (Nelson Mandela International Day) என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாளன்று, 192 நாடுகளை உறுப்னர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில், மோதல்களைத் தீர்ப்பதற்கும், இன உறவுகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் நாளன்று, மறைந்த தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த நாளில் அவர் நினைவு கூரப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண் - பெண் சமம் என்ற நிலை ஏற்படவும், மண்டேலா பாடுபட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் நாள் முதல் மண்டேலா பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மைப் பொறுப்பான தலைவர் பதவிக்கு வந்த நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராகப் பல அறப் போராட்டங்களை முன்னிருந்து நடத்தினார். இவர் தலைமையில், வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 ஆம் ஆண்டில், அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு, அந்தக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மேலும் பல போராட்டங்களை முன்னெடுத்துச் செய்து வந்தார்.

அறவழிப் போராட்டத்திற்குப் பலனேதும் கிடைக்காத நிலையில், ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்குத் தலைமையேற்றதுடன் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். அதனைத் தொடர்ந்து, எரிச்சலுற்ற வெள்ளைக்கார அரசு 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாளில், இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல நீண்ட காலம் சிறையிலடைக்கப்பட்ட தலைவர்கள் எவரும் கிடையாது. பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்த தென்னாப்பிரிக்க அரசாங்கம், அவரது மனைவியைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுத்தது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்குச் சென்ற நிலையில், அவர் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

நிறவெறிக்கு எதிராகப் போராடிய மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால், தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டன. "மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தது. ஆனால், மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். அதன் பிறகு, தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் என்பவர் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன் வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது.

இந்நிலையில், பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 1990 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் நாளில் விடுதலைச் செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அந்நாளில் அவர் விடுதலை செய்யப்பெற்ற போது, அவருக்கு வயது 71. அவரது விடுதலை நிகழ்வு உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரசியாக ஒளிபரப்பப்பட்டது.

அதன் பின்னர், 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர், 1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாளன்று தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் 1999 ஆம் ஆண்டில் பதவியை விட்டு விலகினார். அதிபர் பதவிக்கான தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட அவர் மறுத்துவிட்டார்.

இதையும் படியுங்கள்:
பயத்தை வென்றவேரே தைரியமான மனிதர் - நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள் சில!
Nelson Mandela

தென்னாப்பிரிக்க நிற வெறி அரசால் மண்டேலா சிறைப்படுத்தப்பட்டுச் சிறையில் இருக்கும் போதே, அவர் உலக சமாதானத்துக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு "நேரு சமாதான விருது" வழங்கியது. அந்த விருதினை மண்டேலாவின் மனைவி வின்னி டெல்லிக்கு வந்து பெற்றார். அதன் பிறகு, இந்திய அரசு அவருக்கு 1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான 'பாரத ரத்னா' விருது அளித்துச் சிறப்பித்தது. இந்தியரல்லாத ஒருவருக்கு, பாரத ரத்னா விருது அளித்து சிறப்பு செய்யப்பெற்றது நெல்சன் மண்டேலாவிற்கு மட்டும்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவிற்கு 1993 ஆம் ஆண்டில் உலக அமைதிக்கான நோபல் பரிசு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி பன்னாட்டு விருது போன்றவை வழங்கப்பட்டன. உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டின் உயரிய விருதுகளை நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன. நெல்சன் மண்டேலா 250 -க்கும் அதிகமான உலகின் உயர்ந்த விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாடாளுமன்றச் சதுக்கத்தில், 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று நெல்சன் மண்டேலாவிற்கு ஒரு வெண்கலச் சிற்பம் வைத்துச் சிறப்பு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
Nelson Mandela Quotes: நெல்சன் மண்டேலா கூறிய 15 பொன்மொழிகள்!
Nelson Mandela

நிறவெறி ஆட்சியினை எதிர்த்துப் போராடிய நெல்சன் மண்டேலா 2013 ஆம் ஆண்டில், டிசம்பர் 5 ஆம் நாளன்று, 95 ஆவது வயதில் காலமானார். ஆனால், அவர் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அவருக்குப் பல்வேறு உலக நாடுகளின் உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டது மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அவரது பிறந்த நாளை, பன்னாட்டு நெல்சன் மண்டேலா நாள் என்று கொண்டாடப்படும் என்று அறிவித்ததும் மிகச் சிறப்பான ஒன்றாகும். இன்றைய நாளில் நாமும் அவரது அயராத சேவையைப் போற்றி, அவரை நினைவில் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com