இது அதிர்ஷ்ட விளையாட்டல்ல, அறிவுப்பூர்வமான விளையாட்டு!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் நாளன்று, 'அனைத்துலகச் சதுரங்க நாள்' (International Chess Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
1924 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாளில், பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரில், உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் அமைப்பாக, 'பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு' (International Chess Federation) எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் பெயர் பிரெஞ்சு மொழியில் சுருக்கமாக, FIDE (ஃபீடே) என்று அழைக்கப்படுகிறது. “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த அமைப்பில், தற்போது 181 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்திருக்கின்றன.
இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளை அனைத்துலகச் சதுரங்க நாளாகக் கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. அதனைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டு முதல் ஜூலை 20 ஆம் நாள், அனைத்துலகச் சதுரங்க நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.
உலகில் பல விளையாட்டுகள் இருக்கின்ற போதிலும், உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான, அறிவுப்பூர்வமான விளையாட்டுக்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தச் சதுரங்க ஆட்டம் எப்படித் தொடங்கியது? என்று பார்க்கலாம்.
சதுரங்கம் (Chess) என்பது பண்டையக் காலங்களில் அரசர்களின் விளையாட்டாக இருந்தது. இவ்விளையாட்டு, இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். இவ்விளையாட்டானது, செங்களம் அல்லது வல்லாட்டம் என்று வேறு பெயர்களிலும் குறிப்பிடப்படுகிறது. இவ்விளையாட்டுக்கு, தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு.
ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக, கறுப்பு, வெள்ளை என்று இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.
செங்களம்:
அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு அன்று. இவ்விளையாட்டுக்கு மதியூகமும், தந்திரமும் முக்கியமானவையாகும். தற்போது இவ்விளையாட்டு, பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விளையாட்டுக்குப் பெரிய விளையாட்டுத் திடல்கள் எதுவும் தேவையில்லை என்பதால், வீடு, பூங்கா, தெருக்கள், மரத்தடிகள் என்று அனைத்து இடங்களிலும் விளையாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பல மில்லியன் மக்களால் விளையாடப்பட்டு வருகிறது.
செங்களம் மனித இனத்தின் முதன்மை விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது. சில வேளைகளில், இது ஒரு போர் விளையாட்டாகவும், 'மூளை சார்ந்த போர்க்கலை'யாகவும் பார்க்கப்படுவதுண்டு. பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் சியாங்கி, சப்பானின் சோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை.
சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப் போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகையப் போட்டிகள் ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, பன்னாட்டளவில் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நவீன ஊடகமான இணைய தளங்களிலும் சதுரங்கம் ஆட்ட வசதி இருக்கிறது. இதற்காக, நூற்றுக்கணக்கான தனி இணையதளங்கள் இன்று இணையப் பின்னலில் இடம் பெற்றிருக்கின்றன.
இரு நபரால் விளையாடப்படும் இந்த விளையாட்டில் தனது அரசனைப் பாதுகாத்துக் கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இவ்விளையாட்டுப் பலகையில் இரண்டு நபர்களுக்கும் தனித்தனியாக அரசன், அரசி, மந்திரி, குதிரை, யானை, படைவீரர்கள் என்று படை இருக்கிறது. இவ்விளையாட்டில் அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுகின்றார்.