
குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில் தான் இந்தியாவில் முதன் முதலில் செஸ் தோன்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ‘அஷ்டபாதா’ எனவும் ‘சதுரங்கா’ எனவும் இது அழைக்கப்பட்டது. அஷ்டபாதா என்ற வார்த்தைக்கு ‘எட்டுக்கு எட்டு கட்டங்களைக் கொண்ட சதுரப் பலகை’ என அர்த்தம். இந்த விளையாட்டு மெதுவாக வளர்ந்து 9ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நுழைந்தது. ரஷ்யர்கள் இந்த விளையாட்டை பெரிதும் விரும்பி, மிகத் தீவிரமான முறையில் விளையாடத் துவங்கினர். அவர்களது பள்ளி பாடத்திட்டத்தில் கூட செஸ் இடம் பெற்றுள்ளது.
15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் காலூன்றியது. அங்கு பல்வேறு மாறுதல்களுக்கு பிறகு, செஸ் உலகமெங்கும் பரவியது. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த விளையாட்டில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிறைய மாற்றங்கள் செய்யப் பட்டன. உலகளவிலான செஸ் போட்டி 1851ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் வரலாறு:
செஸ் ஒரு தனி நபர் விளையாடும் விளையாட்டு என்பது தெரிந்ததே, அதை ஓர் அணியாக விளையாடுவதே "செஸ் ஒலிம்பியாட்". ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள், நாலு வெவ்வேறு செஸ் போர்டில் ஒரே நேரத்தில் விளையாடுவார்கள். ஒருவர் ரிசர்வில் இருப்பார் மொத்தம் 5 பேர். குறிப்பிட்ட நேரத்தில் விளையாட வேண்டும். வென்றால் இரண்டு புள்ளிகள், சமன் மற்றும் தோல்விக்கு புள்ளிகள் கிடையாது. செஸ் ஒலிம்பியாட் ஓபன் மற்றும் பெண்களுக்கு என இரு பிரிவுகளாக நடக்கிறது.
1924 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சதுரங்கத்தைச் சேர்க்க முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, தொழில்முறை சதுரங்க வீரர்களிடமிருந்து அமெச்சூர்களை வேறுபடுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக அது தோல்வியடைந்தது. அதன் பின்னர் பாரீஸ் மெஜஸ்டிக் ஹோட்டலில் ஜூலை 12 முதல் 20 வரை அதிகாரப்பூர்வமற்ற செஸ் ஒலிம்பியாட் முதல் முறையாக நடந்தது. இதில் 18 நாடுகளின் 54 செஸ் வீரர்கள் கலந்து கொண்டனர்.
முதல் அதிகாரப்பூர்வமற்ற சதுரங்க ஒலிம்பியாட் முடிவு சதுரங்க வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியது, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 அதிகாரிகள் இணைந்து இண்டர்நேஷனல் செஸ் பெடரேசனை தொடங்கினார்கள். உலக சதுரங்க கூட்டமைப்பு (FIDE-Fédération Internationale des Echecs) அதன் நிறைவு நாளான ஜூலை 20, 1924 அன்று பாரிஸில் உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்று நாள் FIDE இன் பிறந்தநாள் மட்டுமல்ல, சர்வதேச சதுரங்க நாளாகவும் மாறியது.
1926 ஆம் ஆண்டு இரண்டாவது செஸ் ஒலிம்பியாட் போட்டியும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏற்பாடு செய்யப்பட்டன. FIDE முதல் அதிகாரப்பூர்வ ஒலிம்பியாட் போட்டியை 1927 இல் லண்டனில் ஏற்பாடு செய்தது. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு 'ஹமில்டன்-ரசூல் 'என்ற பெயரில் கப் வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் வரை ஒலிம்பியாட்கள் அவ்வப்போது மற்றும் ஒழுங்கற்ற இடைவெளியில் நடத்தப்பட்டன.1939 முதல் 1950 வரை நீண்ட இடைவெளி இருந்தது. ஆனால், 1950 முதல் அவை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தவறாமல் நடத்தப்பட்டு வருகின்றன. "ஒலிம்பியாட்" என்ற பெயர் 1952 இல் மட்டுமே அதிகாரப்பூர்வமானது. 1956 ம் ஆண்டு நடந்த மாஸ்கோ ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 4 செஸ் வீரர்கள் முதல் முறையாக தங்களது சொந்த பணத்தில் சென்று போட்டியில் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 1, 1957 அன்று FIDE முதல் முறையாக பெண்கள் செஸ் ஒலிம்பியாட்டைத் தொடங்கியது, இது "ஓபன்" செஸ் ஒலிம்பியாட்டிலிருந்து தனியாக நடத்தப்பட்டது. இது எம்மெனில் (ஹாலந்து) நடந்தது. முதல் முறையாக ஓபன் மற்றும் மகளிர் ஒலிம்பியாட்கள் 1972 இல் ஸ்கோப்ஜியில் ஒன்றாக நடத்தப்பட்டன. அந்த இரண்டு போட்டிகளும் 1974 இல் மீண்டும் பிரிக்கப்பட்டன.
லண்டனில் நடந்த முதல் செஸ் ஒலிம்பியாட் 16 அணிகளைக் கொண்டிருந்தது; 2014 இல் நார்வேயின் டிராம்சோவில் நடந்த 41 வது செஸ் ஒலிம்பியாட்டில், ஓபன் பிரிவில் அவர்களின் எண்ணிக்கை 176 ஐ எட்டியது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தான் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
2020 ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் கொரோனா காரணமாக "ஆன்லைன்" மூலம் நடந்தது. அந்த முறை ஒலிம்பியாட் சாம்பியன்ஷிப்யை ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து பெற்றது. 44 வது செஸ் ஒலிம்பியாட் நமது சென்னை மகாபலிபுரத்தில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற்றது.
1927 முதல் 45 ஒலிம்பியாட்கள் நடைபெற்றுள்ளன. செஸ் ஒலிம்பியாட்டின் 45வது போட்டி ஹங்கேரியின் புடாபெஸ்டில் 2024 செப்டம்பர் 10 முதல் 22 வரை நடைபெற்றது. இதில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. மாஸ்கோ, இஸ்தான்புல், தெசலோனிகி மற்றும் பியூனஸ் அயர்ஸ் உட்பட 4 நகரங்கள் மட்டுமே இரண்டு முறை ஒலிம்பியாட்களை நடத்தியிருக்கின்றன. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், ரஷ்யா 18 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது. இதுவே, அதிக பதக்கங்கள் வென்ற நாடு என்ற சாதனையை பெற்றுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா 20 பதக்கங்களை பெற்றுள்ளது.