
அனைவராலும் விரும்பப்பட்டு வரும் ஓர் இனிப்பு பொருளாக சாக்லேட்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. எந்த காலத்திலும் சாக்லெட்டுகளுக்கான மவுசுகளும் குறைவதில்லை. இதற்காகவே, ஒவ்வொரு வருடமும் ஜூலை 7ம் தேதி, உலக சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், பிரியமானவர்களும், குழந்தைகளும், ஒருவருக்கொருவர் சாக்லேட்களை பரிசாக தந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி கொள்வார்கள்.
சாக்லேட்டை மாயன் இன மக்கள் காலத்திலயே கண்டு பிடித்தாகிவிட்டது. என்னதான் மாயன் காலத்திலேயே சாக்லேட் கண்டு பிடிச்சுடாங்கனு சில வரலாற்று தகவல் சொன்னாலும் 1550 ஆம் ஆண்டு ஜூலை 7 தேதியில் தான் ஐரோப்பியர்கள் உலக மக்களுக்கு சாக்லேட்டை அறிமுகப்படுத்தினதாக சில ஆய்வு தகவல்கள் சொல்கி ன்றன. அதனால தான் அந்த தேதியிலயே உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
சாக்லேட் கூட உலக சாதனை படைத்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? கின்னஸ் உலக சாதனையின்படி, இங்கிலாந்தில் உள்ள தோர்ன்டன்ஸ் பிஎல்சி நிறுவனம் 07 செப்டம்பர், 2011 அன்று உலகின் மிகப்பெரிய சாக்லேட் பார் தயாரித்து சாதனை படைத்துள்ளது. அதன் எடை 5792.50 கிலோ (சுமார் 12,770 பவுண்டுகள்).
கடந்த 2018-ல், உலகிலேயே மிக காஸ்ட்லியான சாக்லேட் ஒன்று தயாரிக்கப்பட்டது. சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஒபிடோஸ் என்ற இடத்தில் தயாரான இந்த சாக்லேட், கண்காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தது. 23 காரட் தங்க பிளேட்டினால் ஆன இந்த சாக்லேட்டுக்கு "குளோரியஸ்" என்று பெயரிடப்பட்டது. இதன் அப்போதைய விலையோ ரூ. 6 லட்சம் ஆகும். உயர் தர வெண்ணிலா, மற்றும் தங்க செதில்களால் இந்த சாக்லேட் தயாரிக்கப்பட்டது.
டேனியல் கோம்ஸ் என்பவர், ஒரு வருடமாக இந்த சாக்லேட்டை தயாரித்து வந்தார். முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தங்க ரிப்பனால் சுற்றப்பட்டிருந்தது. இது அப்போது உலகத்தின் பார்வையை வெகுவாக ஈர்த்திருந்தது. உலகின் மிக விலையுயர்ந்த சாக்லெட்டாக 'டோஅக் (To’ak Chocolate) சாக்லெட்' பெயர் பெற்றுள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த, ஆடம்பர சாக்லெட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஈக்வடாரில் தயாரிக்கப்படும் உயர் ரக சாக்லெட் பிராண்ட் இது. மிகவும் அரிதான, விலைமதிப்பற்ற 'அரிபா நசினோயல்' என்ற பீன்ஸ் இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாக்லெட் ஒயின், விஸ்கி போல சில ஆண்டுகள் மர பீப்பாய்களில் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு சாக்லெட் பாரும் மிகவும் திறமையாக தயாரிக்கப்படுகிறது. இந்த சாக்லெட்டில் எந்தவிதமான ரசாயனங்கள், சர்க்கரையும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த சாக்லெட் சிறப்பு பேக்கேஜிங்கில் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு சாக்லெட்டும் 50 கிராம் பார், கைவினைப் பொருட்களால் ஆன மரப் பெட்டியில், 24 காரட் தங்க இலையால் அலங்கரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. டோ'அக் 50 கிராம் சாக்லேட் பாரின் விலை $3,850 அதாவது 50 கிராம் சாக்லேட் பார் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம்.
ஆனால், இப்போது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள சாக்லேட், பலரது கவனத்தை பெற்று வருகிறது.காரணம், இந்த ஒரே ஒரு சாக்லேட், 1 கோடி ரூபாயாம். பென்சில்வேனியா - மாநிலத்தில் பிட்ஸ்பர்க்கில் SARRIS CHOCOLATE என்ற தொழிற்சாலை மிகவும் பிரலமானது. இங்கு சாக்லேட்டுடன் விதவிதமான ஐஸ்கிரீம்கள் தயாராகும். அதுமட்டுமல்லாமல், நாம் அன்றாடம் பயன்படுத்தும், சோப்பு, சீப்பு, செருப்பு போன்ற பொருட்களின் உருவங்களிலேயே சாக்லேட்கள் தயார் செய்து, காட்சிப்படுத்துவது வாடிக்கையாகும்.
இந்நிலையில், 1,180 கிலோவில், 12 அடி உயரம், 8 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் 8 பேர் கொண்ட குழு இந்த சாக்லேட்டை தயாரித்துள்ளது. இதன் விலை ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர்கள்.அதாவது, நம்ம ஊர் மதிப்பில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல். 1 கோடி ரூபாய் சாக்லேட்டை கேள்விப்பட்டதுமே, அதனை பார்ப்பதற்காகவே, ஏராளமானோர் சாக்லேட் தொழிற்சாலைகளுக்கு திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த விலையை கேட்டதுமே பலரும் ஆச்சரியப்பட்டு திகைத்து நிற்கிறார்கள். விலையை கேட்டதுமே தெறித்து ஓடிவிடுவார்கள் என்று பார்த்தால், இதையும் 'பெருமையுடன்' வாங்கிச்செல்ல போட்டா போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த சாரீஸ் கேன்டீஸ் நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுவை மற்றும் தரத்தில் சிறந்து விளங்கும் சாக்லேட் நிறுவனம். இதன் நிறுவனர் பிராங்க் சாரீஸ் தன்னுடைய காதலியை மயக்க விதவிதமான சாக்லேட்கள் செய்து வழங்குவாராம். பின்னர் அந்த காதல் ஜோடி சாக்லேட் செய்வதையே தொழிலாக மாற்றி புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.