
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ந் தேதி அன்று உலக ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது. 2005-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து இந்த தினத்தை கடைப்பிடிக்க முடிவெடுத்தன. ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிகமான மக்களை ரத்த தானம் செய்ய வலியுறுத்தவும், ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
1868-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி, ரத்தக் குழு அமைப்பைக் கண்டுபிடித்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்தநாளாகும். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் நினைவாக ஜூன் 14-ந் தேதி அன்று இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
கருப்பொருள்:
2025-ம் ஆண்டு உலக ரத்த தான தினத்தின் கருப்பொருள் ‘ரத்தம் கொடுங்கள், நம்பிக்கை கொடுங்கள், ஒன்றாக நாம் உயிர்களைக் காப்பாற்றுவோம்’ என்பதாகும். இந்த கருப்பொருள் ரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் மக்களுக்கு வலியுறுத்துகிறது.
ரத்தம் தானம் செய்வதால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்கும் செயலாகும். இது சமூகங்களை வலுப்படுத்துவதோடு, மக்களிடையே ஒற்றுமையின் உணர்வை ஏற்படுத்துகிறது. ரத்த தானம் செய்வதால் பெறுபவர் மட்டுமல்லாமல், கொடையாளர்களும் பயன்பெறுகிறார்கள். ரத்த தானம் செய்வதால் உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். இந்த தினத்தில் ரத்த தானம் செய்வது குறித்த முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலங்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன.
ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.
யார் ரத்த தானம் செய்ய முடியாது?
சில நேரங்களில், உடல்நிலை ரீதியான சில காரணங்களுக்காகவும், சில மருத்துவ காரணங்களுக்காகவும் சிலர் ரத்த தானம் செய்ய முடியாது.
* எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
* மூன்று மாதத்திற்கு முன் மலேரியாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
* ரத்த தானம் செய்ய உங்கள் எடை 45 கிலோவிற்கு குறைவாக இருக்கக்கூடாது.
* உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு குறைவாக இருக்கக் கூடாது.
* உடலில் tattoo குத்தியவர்கள், முதல் 6 மாதங்களுக்கு தானம் செய்ய முடியாது.
* புற்றுநோய்கள், இதய நோய், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்பவர்கள் ரத்த தானம் செய்ய முடியாது.
இன்றைய காலகட்டத்தில், இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவது மிகவும் முக்கியம், மக்கள் உயிரின் மதிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இரத்த தானம் செய்ய வேண்டும். அது யாருடைய உயிரையாவது காப்பாற்ற உதவும். இந்த நாளில், ரத்த தானம் செய்வது பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, மேலும் பலருக்கு ரத்த தானம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.