
“ஒரு நல்ல நூல் ஒரு நல்ல நண்பனுக்கு ஒப்பானது” என்பார்கள். ஒரு மனிதனை முழுமையாக்கும் வாசிப்பு நம் ஒவ்வொருவருக்கும் சிறுவயதிலிருந்தே தேவைப்படுகிறது. இதன் மூலம் நாம் நம் பொழுதினை ஆக்க பூர்வமாக போக்க முடியும்.
இன்றைய தொழில்நட்ப வளர்ச்சியின் காரணமாக, இணையதளங்களில் கூட நாம் சிறந்த புத்தகங்களை வாசிக்க முடியும். வாசிப்பு ஒரு மனிதனை பூரணப்படுத்துகிறது. சிறந்த அறிவுத்திறனையும், நுண்ணறிவினையும் படிப்பவருக்கு வழங்குகிறது. புதிய தகவல்களை அறிந்து கொள்ளவும் இந்த வாசிப்பு நமக்கு உதவுகிறது.
“நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு” என்கிறார் ஔவையார். இந்த வரிகள் ஒரு மனிதன் படிக்கும் நூல்கள் அவன் அறிவினை உயர்த்துகின்றன என்கிறது. புத்தக அறிவின் மூலம் நம்மைச் சுற்றியுள்ள சமூகம், உலகத்தின் நிலை, பொது அறிவு ஆகியவைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள முடியும். வாசிப்பு நமது மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் நமது கற்பனை ஆற்றல், பொறுமை, படைப்பாற்றல் போன்ற திறமைகளையும் வாசிப்பு நமக்கு வழங்குகிறது.
அமெரிக்காவின் தலைசிறந்த தலைவராக திகழ்ந்த ஆபிரகாம் லிங்கன் மாட்டின் லூதர் கிங், அணு விஞ்ஞானி அப்துல் கலாம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, லெனின் போன்றோர் வாசிப்பினால் உயர்ந்தவர்கள் ஆவர்.
வாசிப்பு ஒருவருக்குப் பயனுள்ள வகையில் தகவல்களைப் புரிந்து கொள்ளவும், நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. வாசிப்பு முறைகளை மேம்படுத்த, எழுத்துக்கூட்டல், உச்சரிப்பு, பொருள் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை ஆழ்ந்து பொருள் புரிந்து வாசிப்பதன் மூலம், ஒவ்வொரு வார்த்தையின் பொருள், வாக்கிய அமைப்பு மற்றும் கருத்துகளைப் நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு புத்தகத்தை விரைவாக வாசித்து, முக்கிய கருத்துகளை மட்டும் புரிந்து கொள்வது பொதுவாக பெரிய அளவிலான வாசிப்புக்கு உதவும்.
எழுத்துக்களை வார்த்தைகளாகவும், வார்த்தைகளை வாக்கியங்களாகவும் மாற்றும் திறன் எழுத்துக்கூட்டல் ஆகும். சிறு குழந்தைகளுக்கு வாசிப்பில் உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாசிக்கும் வேகத்தை அதிகரிக்க, வார்த்தைகளை வேகமாக அடையாளம் காணுதலும் வாக்கியங்களை விரைவாகப் படித்தலும் அவசியமாகும்.
பள்ளியிலும், குடும்பங்களிலும் நாம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை வாசிப்புக்கு ஒதுக்கலாம். புத்தகங்களை வாசிப்பதற்கு முன், அதன் தலைப்பு, முன்னுரை மற்றும் பின் அட்டையை வாசித்து நூலினைப் பற்றி அறிந்துக் கொள்வது அந்நூலினை படிப்பதில் ஆர்வத்தை அதிகரிக்கும். வாசிக்கும்போது, தெரியாத வார்த்தைகளை குறித்து வைத்துக் கொண்டு, அதன் அர்த்தங்களை அறிந்து கொள்ள தொடர்முயற்சியினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த நண்பர்களுடன் இணைந்து வாசிப்பு குழுக்களை உருவாக்கலாம். அவ்வாறான நிகழ்வுகளில் வாசித்த நூல்களைப் பற்றிய விவாதங்களைச் செய்யலாம். நாம் வாசிக்கும் புத்தகங்கள் கூறும் கருத்துகளை நம் வாழ்வில் பின்பற்றுவதன் மூலம், நம் வாழ்வினை செம்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
வாசிப்பு சுவாரசியமாக இருக்க வேண்டுமே தவிர அது வேலையாக இருக்கக்கூடாது. திரைப்படம் பார்ப்பது, நண்பர்களுடன் வெளியே சுற்றுவதைக் குறைத்துக் கொண்டு பள்ளி நூல்நிலையங்களிலும், உள்ளூர் பொது நூல்நிலையங்களில் நூல்களைப் படிப்பதில் அதிக நேரத்தை செலவிடலாம்.
கைப்பேசிகளையும், தொலைக்காட்சி நிகழ்வுகளையும் அதிக நேரம் பார்ப்பதால் கண்கள் சோர்வடைகின்றன. மேலும் கண்களில் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால், அதிக மருத்துவச் செலவுகளும் நமக்கு ஏற்படுகின்றன. குறிப்பாக இளம் வயதினர் இணையதளங்களில் மூழ்கி இணைய விளையாட்டுகளிலேயே தங்களது முழு நேரத்தையும் செலவழிக்கின்றனர்.
இது தவிர்க்கப்பட வேண்டும். இன்றைய உலகம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் நவீனமடைந்துள்ளது. இதில் வாசிப்பு என்பது குறைவடைந்து விட்டது. நமது சமூகத்தை சீர்படுத்த வாசிப்பு பழக்கத்தினை இளைய தலைமுறையினரிடையே மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.
வாசிப்பு எப்போதும் மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியதாகும் என்பதனை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் வாசிப்பை அதிகப்படுத்தும் முனைப்பில் இப்போதே இறங்க வேண்டும். எனவே, இனியாவது நூல்களை வாசிப்போம். வளருவோம்.