

LIC யின் அடையாளமாக உயர்ந்து நிற்கும் இந்தியாவின் முதல் வானளாவிய கட்டிடத்தின் கதை தெரியுமா?
1956 -ல் இந்திய நாடாளுமன்றம் ஆயுள் காப்பீடு சட்டத்தை இயற்றியபோது 245 தனியார் காப்பீடு நிறுவனங் களையும் ஒருங்கிணைத்து அரசு நிறுவனமாக 1956 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி அரசு தன் கீழ் கொண்டு வந்தது. அதே ஆண்டு 1956 செப்டம்பர் 1 ம் தேதி உருவாக்கப் பட்டதுதான் எல்.ஐ.சி நிறுவனம். அதனால்தான் செப்டம்பர் 1 ம் தேதியை அந்நிறுவனம் எல்ஐசி தினமாக கொண்டாடுகிறது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்.ஐ.சி 14 நாடுகளில் தன்னுடைய தொழில் செயல்பாடுகளைத் தற்போது கொண்டுள்ளது.
காப்பீடு சேவைகள் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எல்.ஐ.சியின் தாரக மந்திரமாக இருந்தது. 1956 -ல் வெறும் ரூ.5 கோடியில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி 70 ஆண்டுகளில் ரூ.60 லட்சம் கோடி மதிப்பு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் காப்பீடு துறையில் நுழைந்திருந்தாலும், காப்பீடு துறையில் 63.25 சதவிகித பங்களிப்புடன் அசைக்க முடியாத ஜாம்பவனாக எல்.ஐ.சி திகழ்கிறது.
எல்.ஐ.சி கட்டிடம் வரலாறு: சென்னையின் வளர்ச்சிப் பயணத்தில் உயரமான கட்டிடங்களின் தொடக்கமாக திகழ்வது அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடம். இன்று சென்னையின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த வானுயர்ந்த கட்டிடம், 1950களில் தொடங்கிய நகர்ப்புற நவீனமயத்தின் பிரதிபலிப்பாக உருவானது.
நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தின் உயரமான கட்டிட அமைப்பில் ஆர்வமடைந்து, அதேப்போல தனது எம்.சி.டி குரூப் நிறுவனங்களான யுனைட்டெட் இந்தியா லைப், யுனைட்டெட் இந்தியா பயர் அன்ட் ஜெனரல் மற்றும் நியூ கார்டியன் லைப் இன்சூரன்ஸ் அலுவலக கட்டிடங்களை பிரமாண்ட அலுவலக வளாகமாக கட்ட வேண்டுமென்பதே சென்னை தொழிலதிபர் சிதம்பர செட்டியாரின் எண்ணம். அந்த எண்ணத்தில் தொழிலதிபர் எம். சிதம்பரம் செட்டியார் தொடங்கிய திட்டமே பின்னர் இந்த புகழ்பெற்ற கட்டடமாக மாறியது.
1953ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டிட திட்டத்தின் வடிவமைப்பை லண்டனைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்கள் ஹெச்.ஜே. பிரவுன் மற்றும் எல்.சி. மௌலின், மேற்கொண்டனர். இந்த கட்டடத்திற்காக தரையிலிருந்து 35 அடி ஆழம் வரை வலுவான அடித்தளங்கள் அமைக்கப்பட்டன.
சுமார் 1,000 டன் எஃகு, 3,000 டன் சிமெண்ட் மற்றும் 26,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கண்ணாடி முகப்பு பயன்படுத்தப்பட்டது .வெளிநாட்டு வடிவமைப்பாளர்கள் விலகியதையடுத்து, சென்னையைச் சேர்ந்த சிட்டாலே & சன் என்ற கட்டிடக்கலை நிறுவனத்தின் நிறுவனரான எல்.எம். சிட்டாலேயின் நிறுவனங்கள் பணிகளைத் தொடர்ந்தது அது 1959ஆம் ஆண்டு கட்டுமானத்தை நிறைவு செய்தன.
177 அடி உயரம் கொண்ட இந்த 14 மாடி கட்டிடத்தை, 1959 ஆகஸ்ட் 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் திறந்து வைத்தார். நேரு தலைமையிலான மத்திய அரசு 1956ஆம் ஆண்டு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை தேசியமயமாக்கியதால், கட்டுமானம் முடியும் நேரத்தில் இந்த கட்டிடம் அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சொத்தாக மாறியது.
ஆரம்பத்தில் எம்.சி.டி குழும நிறுவனங்களுக்கு அலுவலகமாக திட்டமிடப்பட்ட இடம், பின்னர் எல்.ஐ.சி நிறுவனத்தின் முக்கிய அலுவலகமாக உருவெடுத்தது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயுள் காப்பட்டுக் கழகத்தின் (LIC) தென்னிந்திய மண்டலத் தலைமையகமாகச் செயல்படுகிறது.
இது கட்டப்பட்ட காலத்தில் இந்தியாவின் மிக உயரமான கட்டடமாக இருந்தது.இப்பகுதியில் பாரம்பரியமான சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டுமான முறையிலிருந்து கான்கிரீட் தூண்களுக்கு மாறியதன் அடையாளமாக விளங்குகிறது. இப்பகுதியில் முதன்முறையாக 'பில் ஃபவுண்டேஷன்' (Pile foundation) நுட்பம் இந்தக் கட்டடத்தில்தான் பயன்படுத்தப்பட்டது.
சென்னையில் மின்சார லிஃப்ட் (மின்தூக்கி) மற்றும் 400 டன் எடை கொண்ட மைய குளிரூட்டும் அமைப்பு (Centralized AC system) ஆகியவற்றைக் கொண்ட முதல் கட்டிடம் இதுவாகும். 1952-ல் இதன் கருத்தாக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க, பெரும்பாலான மூலப்பொருட்கள் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியாவின் தொடக்ககால தனியார் கணினிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஐபிஎம் இயந்திரமும் இங்கு நிறுவப்பட்டது.
ஆழமான அஸ்திவாரம் இருப்பதால், இந்தக் கட்டிடம் எந்தவொரு பக்கவாட்டு விசையையும் தாங்கும். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் அதன் கதிர்கள் கட்டிடத்தினுள் ஊடுருவாதவாறு, கட்டிடத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் கான்கிரீட் சுவர்கள் வலுவாகக் கட்டப்பட்டுள்ளன.
இது உள்ளே வெப்பநிலையை நிலையாகப் பராமரிக்கிறது. அதனால், தெற்கு மற்றும் வடக்கு பக்கங்களில் கண்ணாடி ஜன்னல்கள் இருப்பது கட்டிடத்தைச் சூடாக்குவதில்லை. மின்வெட்டு ஏற்பட்டாலும் அந்தக் கண்ணாடிகள் போதுமான வெளிச்சத்தை வழங்குகின்றன.
கட்டிடம் முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை நாட்டின் உயரமான கட்டிடமாக இது பெருமை பெற்றது. பின்னர் மும்பையில் எழுந்த உஷா கிரண் கட்டிடம் இந்த சாதனையை முறியடித்தாலும், சென்னையில் அதிக உயரம் கொண்ட கட்டிடமாக இது மேலும் 35 ஆண்டுகள் நிலைத்தது. 1975 ஜூலை 11ஆம் தேதி ஏற்பட்ட பெரிய தீ விபத்து இந்த கட்டிட வரலாற்றில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அதன் பின்னரும் தனது பாரம்பரிய தோற்றத்தை இழக்காமல் நகரத்தின் வரலாற்றுச் சின்னமாக எல்.ஐ.சி கட்டிடம் திகழ்கிறது.
இந்த விரிவான பதிவின் மூலம், இந்தியக் காப்பீட்டுத் துறையின் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகத் திகழும் எல்.ஐ.சியின் தொடக்கம் மற்றும் சென்னையின் நகர்ப்புற அடையாளமாக மாறிய 14 மாடி எல்.ஐ.சி கட்டிடத்தின் மறைக்கப்பட்ட பொறியியல் சாதனைகளைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.