

ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை பெற வேண்டும என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் இலவச மருத்துவ காப்பீடு திட்டங்கள் வழங்கி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான் ‘முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம்’. இந்த திட்டம் பின்னர் அதிமுக ஆட்சியிலும் தொடரப்பட்டது.
இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் தற்போது ஒரு ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவ காப்பீட்டு அளவை 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய்.
தமிழக சட்டப்பேரவையில் 2026 - 2027 ஆம் நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தினமும் நடைபெறும் பேரவையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான உதவித் தொகை பெரும் அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 5 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகை, இனி ரூ. 25 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புற்றுநோய் பராமரிப்பு திட்டங்களை வலுப்படுத்தும் விதமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 470 கோடி மதிப்பீட்டில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. மாநிலத்தின் 5 முக்கிய மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் புதிதாகத் தொடங்கப்படும் என்றும் சென்னை பெரம்பூரில் ரூ. 300 கோடி செலவில் 400 படுக்கைகளுடன் கூடிய 12 உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என பல அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை ரூ. 5 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகை, இனிமேல் ரூ. 25 லட்சமாக உயர்த்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவச் செலவைக் குறைத்து, தரமான சிகிச்சைகள் இலவசமாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ (CMCHIS) திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் முதலில் திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களால் 2009 ஆம் ஆண்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
பின்னர் 2012 ஆம் ஆண்டில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டது.
2018ம் ஆண்டில் இருந்து மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா) தமிழ்நாட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் ஒரு லட்ச ரூபாய் இருந்தது 5 லட்ச ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு இந்த மருத்துவ காப்பீடு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி உள்ளது.
இத்திட்டத்தினால் சுமார் 1.50 கோடி குடும்பங்கள் தமிழ்நாட்டில் பலனடைகின்றன. இந்த திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் காப்பீடு கிடைக்கும். மேலும் 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு தகுதிகள்
* இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதியதாக இணைவதற்கு, விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம்.
* அந்தந்த குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,20,000) மிகாமல் இருக்க வேண்டும்.
* குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும்.
* குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் வேறு எந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் பயனாளியாக இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
* மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை எனவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நெறிமுறைகளின்படி அவர்கள் இத்திட்டத்தில் சிறப்புத் தகுதியின் அடிப்படையில் இணைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள், தங்களது ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்குள் இருப்பதற்கான வருமானச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.
* பெறப்பட்ட வருமானச் சான்றிதழுடன், அசல் குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் எடுத்துக்கொண்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட' பதிவு மையத்திற்கு நேரில் சென்று அங்குள்ள பதிவு மைய அதிகாரிகளிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
* ரேஷன் அட்டையில் யாருடைய பெயர் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் அனைவருமே செல்ல வேண்டும்.
* இங்கே குடும்ப அட்டை, வருமான சான்றிதழ், ஆகிய தகவல்களை சரிபார்த்து உங்களின் ஆதார் மற்றும் கைவிரல் ரேகை சரிபார்க்கப்படும்.
* இறுதிச் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், பயனாளிகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
* இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள இந்த அலுவலகத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். சில சமயம் முகாம்கள் நடத்தப்பட்டால் அங்கேயும் சென்று விண்ணப்பிக்கலாம்.
* ஏற்கனவே இத்திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவோ அல்லது விவரங்களை மாற்றவோ விரும்பினால், www.cmchistn.com என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும், சந்தேகங்கள், குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் 104 அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993-ஐ தொடர்பு கொள்ளலாம்.