'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர் செண்பகராமனின் வீர வரலாறு!
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தியாவில் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஐரோப்பாவில் இருந்து கொண்டு நம் தாய் நாட்டின் விடுதலைக்காக வீர முழக்கமிட்டு, உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் மீது திரும்பியவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் செண்பகராமன். இவர் 1891ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் புத்தன்சந்தை கிராமத்தில் சின்னச்சாமிப் பிள்ளை, நாகம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது 14 வயதிற்குள் தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அதோடு சிலம்பம், வாள் வீச்சு முதலிய வீரக் கலைகளையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார்.
பாலகங்காதர திலகரின் வீர முழக்கத்தால் ஏற்பட்ட ஈர்ப்பால் சுதந்திர உணர்வு கொண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து சுதந்திர முழக்கமிட்டார். அதனால் அப்போதைய திருவிதாங்கூர் அரசின் வெறுப்புக்கு ஆளாகி, சர்.வில்லியம் டீக்லாந்த் எனும் ஜெர்மனிய டாக்டருடன் 1908ம் ஆண்டு ஜெர்மனி சென்றார். ஆனால், சர்.வில்லியம் விலங்கியல் மருத்துவர் அல்ல என்பதும் அவர் பிரிட்டிஷ் அரசை உளவு பார்க்க வந்த பெரும் செல்வந்தர் என்பதும் பின்னாளில் செண்பகராமனுக்கு தெரிய வந்தது.
செண்பகராமனை, ‘பெர்லிஸ் ஆப்ரலாஸ்கேஸ்’ என்ற பள்ளியில் சேர்த்தார் வில்லியம். அங்கு அவர் இத்தாலிய மொழி, விஞ்ஞானம் போன்றவற்றைப் பயின்றார். அதன் பின்னர் சுவிட்சர்லாந்து சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் பயின்றார். பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொறியியல், ராஜ தந்திரம் ஆகிய கலைகளைக் கற்றுத் தேர்ந்து டாக்டர் பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் பல நாடுகளுக்குச் சென்று பிரிட்டிஷ் அடக்குமுறை, பாரத சுதந்திரப் போராட்டம் பற்றிய விளக்கமான சொற்பொழிவுகளை ஆற்றினார். அதன் மூலம் அந்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றார். இந்திய விடுதலைக்காக ‘புரோ இந்தியா’ என்ற பத்திரிகையை நடத்தினார். ‘ஒதுக்கப்பட்டவர்கள் சங்கம்’ என்ற பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்கி, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளை உலகறியச் செய்தார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கொள்ள, ‘இந்தியன் நேஷனல் வாலண்டியர் கோட்ஸ்’ (F.N.A) என்ற படையை உருவாக்கினார். இவரின் செயல்திறத்தையும், அறிவையும் கண்டு ஜெர்மன் சக்கரவர்த்தி கெய்சரும், ஹிட்லரும் இவருடன் நட்பு கொண்டனர். இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஜெர்மனி சென்ற இந்தியர்களுக்கு எல்லா உதவிகளையும் இவர் செய்து வந்தார்.
1914ம் ஆண்டு உலகப் போர் நடைபெற்றது. அப்போது உலகப் புகழ் பெற்ற ‘எம்டன் நீர் மூழ்கிக் கப்பல்’ ஜெர்மனியில் இருந்து வந்து பிரிட்டிஷ் வீரர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டையில் குண்டை தூக்கிப் போட்டு விட்டுச் சென்றது. இது ஆங்கிலேயர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இதன் பின்னணியில் இருந்தவர் செண்பகராமன்தான் என்பதை ஆங்கிலேயர்கள் அறிந்து கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்தியப் புரட்சித் தளங்களாக பெர்லின், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், பெர்சியா, ஷங்கை, ஸ்டாக்ஹோம், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களை உருவாக்கினார். 1915ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இந்திய அரசு ஒன்றை நிறுவினார். அந்த சமயத்தில்தான் சுபாஷ் சந்திரபோஸ் நட்பு அவருக்குக் கிடைத்தது.
1931ம் ஆண்டு லட்சுமி பாய் என்ற பெண்ணை ஜெர்மனியில் திருமணம் செய்தார். செண்பகராமன், ஆங்கிலேயருக்கு எதிரான முழக்கங்களை ஆரம்பப் பருவ வகுப்பிலேயே சிறுவனாக இருந்தபோதே எழுப்பியவர். அப்படித்தான் நாட்டிலேயே ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கத்தை தனது பள்ளிப் பருவத்திலேயே முதலில் முழங்கியவர் செண்பகராமன்தான். 1933ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் இம்முழக்கத்தை முழங்கினார். இதைக்கேட்ட நேதாஜி, இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார்.
ஜெர்மனியில் ஒரு சமயம் ஹிட்லர் இந்தியத் தலைவர்களைப் பற்றி தரக்குறைவாக பேசினார். அதனால் செண்பகராமனுக்கும், ஹிட்லருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தனது வாதத் திறமையில் ஹிட்லரை வென்று இறுதியில் அவரை மன்னிப்பு கேட்க வைத்தார். அந்த மன்னிப்பை எழுத்து மூலமாகவும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி இது. இதுவே ஹிட்லரின் நாஜிகளுக்கு பொறாமையை ஊட்டியது. அதன் விளைவாக செண்பகராமனுக்கு விருந்து வைத்து அந்த உணவில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டனர். அதனால் விருந்து முடிந்து வீட்டுக்கு வந்த செண்பகராமன் படுக்கையில் விழுந்து நோயாளியாகி 1934ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி காலமானார்.
டாக்டர் செண்பகராமன் உயிர் பிரியும் முன், ‘நான் இறந்த பிறகு எனது சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்தபுரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தமது விருப்பத்தை வெளியிட்டார்.
இவரது துணைவியார் லட்சுமி தம் கணவரின் சாம்பலைப் பாதுகாத்து வைத்திருந்தார். முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சுதந்திர இந்தியாவில் 1966ம் ஆண்டு செண்பகராமன் விரும்பியபடியே அவரது சாம்பல் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு, நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவப்பட்டது.