
மெட்ராஸ் தினம்: 1639 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி மதராஸ்பட்டணம் கிராமத்தை வாங்கி, மெட்ராஸ் நகரமாக (இப்போதைய சென்னை) நிறுவியதை நினைவுகூரும் வகையில் சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பர்யங்களை வெளிப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தென்னிந்திய ஆன்மீகத் தலங்களில் ஒன்றான புகழ்பெற்ற மிக மிகப் பழமையான மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரமிக்க வைக்கும் திராவிட கட்டடக்கலை பாணியில் கம்பீரமான நுழைவாயில் கோபுரத்துடன் வரலாற்று சிறப்புமிக்கதாகிறது. சிவன் தலங்களில் சுவாரஸ்யமான புராண வரலாறுக்கு சான்றாக இருக்கிறது.
சுதந்திர போராட்ட வரலாறு நிறைந்த இடமாக மட்டுமின்றி உலகின் மிக நீளமான இயற்கை நகர்ப்புற கடற்கரைகளில் ஒன்றாகவும் மெரினா கடற்கரை திகழ்கிறது. பொழுதுபோக்கு இடமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்தியாவின் முதல் மீன்வளத்திற்கான தளம் என்பது சிறப்பு.
இந்தியாவின் முதல் ஆங்கிலேயர் கோட்டையாக செயல்பட்ட பழமையான செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத் தலைமையகம் என்ற சிறப்பு பெற்றது. தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தின் தளமாகவும் இராணுவ தளமாகவும் உள்ளது.
இந்தியாவிற்கு கிறிஸ்தவத்தை கொண்டு வந்ததாகக் கூறப்படும் செயிண்ட் தாமஸின் கல்லறையில் கட்டப்பட்ட அற்புதமான செயிண்ட் தாமஸ் மலை சர்வதேச முக்கியத்துவம் கொண்ட புனித இடமாகும். மலையின் உச்சியில் உள்ள பழங்கால தேவாலயம் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் வங்காள விரிகுடாவில் போர்த்துகீசிய, ஆர்மீனிய கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாக செயல்பட்டது சிறப்பு.
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு நினைவுச்சின்னமாக கருப்பு கிரானைட் மற்றும் சலவைக்கற்களால் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் தமிழ் இலக்கியத்திற்கு குறிப்பாக திருக்குறளுக்கு பெருமை சேர்க்கிறது. 1330 குறள்களும் விரிவான விளக்கங்களும், கலை நிகழ்வுகளுக்கான அரங்கம், நூலகம் என குழந்தைகளின் மொழி அறிவுக்கு விருந்தாகிறது.
சென்னையின் புறநகரில் உள்ள வண்டலூர் மிருகக்காட்சி சாலை ஆசியாவின் மிகப்பெரிய சரணாலயமாக வரலாறு கொண்டது. தற்போது அறிஞர் அண்ணா பூங்காவாக 1,490 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, 172 இனங்களைச் சேர்ந்த 2,300க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு புகலிடமாக அமைந்துள்ளது.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் முகலாய மற்றும் ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை அம்சங்களை ஒருங்கிணைக்கும் இந்தியன் சாரசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம், சென்னைப் பல்கலைக்கழக செனட் இல்லம் மற்றும் சேப்பாக்கம் அரண்மனை உள்ளிட்ட பல பழமையான கட்டிடங்கள் குறிப்பிடத்தக்கது.
1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமான எழும்பூர் அருங்காட்சியகத்தில் கல் சிற்பங்கள், வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருட்கள், வெண்கலச் சிலைகள் மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த சேகரிப்புகள் வரலாறு ஆர்வலர்களுக்கு உதவுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் ஆன்மீக இல்லமாக கருதப்படும் கிரிக்கெட் மைதானமாக சென்னையின் (சேப்பாக்கம் கிரவுண்ட்) எம்.ஏ.சிதம்பரம் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் விளங்குகிறது. 1916 முதல் கிரிக்கெட்டின் மையமாக சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று தற்போது மகளிர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக புனரமைக்கப்பட்டுள்ளது.
தனியாரின் விஜிபி யூனிவர்சல் கிங்டம், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்காவான இது 1997 ஆம் ஆண்டு முழு நீள கேளிக்கை பூங்காவாக உருவாக்கப்பட்டு தற்போது கேளிக்கை பூங்கா நீர் சவாரிகள் மற்றும் அலை நீச்சல் குளம் உள்ளிட்டவைகளுடன் குடும்பமாக சென்று வர ஏற்ற கட்டணப் பூங்காவாக உள்ளது.
அஷ்டலட்சுமிகளுக்காக அமைக்கப்பட்ட அழகான நான்கு நிலை கோபுரங்களுடன் நிழல் தரையில் விழாத சிறப்பு கொண்ட ஓம்கார வடிவ அஷ்டாங்க விமானத்தையும் தாங்கி கடற்கரை எழிலை ரசித்தவாறு இறை உணர்வு பெற ஆன்மிக ரசிகர்களுக்கு பிரியமாக உள்ளது சென்னையின் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான 'அனுபவ விவேகானந்தர் அருங்காட்சியகம்' என்று தற்போது செயல்படும் விவேகானந்தர் இல்லத்தின் படக் காட்சியகங்கள், ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி (VR) ஆகியவை ஆன்மிக வழியில் ராமகிருஷ்ணா இயக்கத்தைப் பரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களித்த சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையைப் பற்றி அறிய விரும்புவோருக்கு ஏற்றது.
சென்னை நகரின் மையப்பகுதியில் உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் தென்னிந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவமான மால் ஆகிறது எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் (EA). உலகத் தரம் வாய்ந்த பிராண்ட், சொகுசு ஹோட்டல் மற்றும் பல சிறப்புகளுடன் இந்த ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங்கிற்கு புதிய அனுபவம் தரும்.
முட்டுக்காட்டில் அமைந்துள்ள தட்சிண சித்ரா தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, கட்டடக்கலை மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை விளக்கும் கட்டண மையமாக தற்போது இயற்கை விரும்பிகளை கவர்கிறது. இங்கு பாரம்பரிய வீடுகள் மற்றும் பழங்கால நடைமுறைகளை காட்சிப்படுத்துவது சிறப்பு.
1890 ல் அடிக்கல் நாட்டி 1896 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம் பல அறிவுப் பொக்கிஷங்களை உள்ளடக்கி பெருநகரத்தின் பெருமையை பேசும் அறிவுசார் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உள்ளது. நூறாண்டுகள் கடந்தாலும் இதன் அழகிய கட்டிட அமைப்பும் அமைதியும் அறிவுக்கு விருந்தளிக்கிறது.
வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக, அழகியகோயில் கோபுரங்களும் மண்டபங்களுடன் நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் 8ம் நூற்றாண்டின் சிறப்புகளை சுமந்து வைஷ்ணவத்தின் சிறப்பு கூறும் ஆன்மீக அடையாளங்களுள் ஒன்றாகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை பரந்தூரில் கட்டப்பட்டு வரும் கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் லேட்டஸ்ட்டாக முக்கியத்துவம் பெறுகிறது.
பீட்டர்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு மசூதி, பாரம்பரிய இஸ்லாமிய வடிவமைப்பில் கட்டப்பட்டு, சென்னையின் மதநல்லிணக்கத்தின் சான்றாகிறது. புனித குர்ஆனின் வாசகங்களைக் கொண்ட அழகான கிரீம் நிற சுவர்கள், மற்றும் பல குவிமாடங்களுடன் மசூதி இஸ்லாமியரின் முக்கியமான கூடும் இடமாகிறது.
சென்னையின் தாவரவியல் சொர்க்கமாக தற்போது மக்களைக் கவர்கிறது செம்மொழிப் பூங்கா. 20 ஏக்கர் பரப்பளவுடன் உலகம் முழுவதிலுமிருந்து 500 க்கும் மேற்பட்ட தாவர இனங்களைக் கொண்டுள்ள இந்தப் பூங்காவின் இயற்கை சூழல் நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகி புத்துயிர் பெற உதவுகிறது. கல் சிற்பங்கள், நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகளுடன் காலநிலைகளிலிருந்து அரிய மற்றும் அழிந்து வரும் தாவரங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு கன்சர்வேட்டரியும் உள்ளது.