
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று, ‘உலகக் காசநோய் நாள்’ (World Tuberculosis Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
1882 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாளில் டாக்டர் ராபர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை (TB Bacillus) பெர்லினில் அறிவித்து, அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவர் எனும் விகிதத்தில் இறப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ராபர்ட் கொக்கின் இக்கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழி வகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில், காச நோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. அதனைத் தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
என்புருக்கி நோய் அல்லது காச நோய் (Tuberculosis) என்பது மைக்கோபாக்டீரியா (Mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium Tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.
மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium Bovis)
மைக்கோபாக்டீரியம் ஆப்பிரிக்கானம் (Mycobacterium Africanum)
மைக்கோபாக்டீரியம் கனெட்டி (Mycobacterium Canetti)
மைக்கோபாக்டீரியம் மைக்குரோட்டி (Mycobacterium Microti)
முதலான நுண்ணுயிரிகளாலும் தூண்டப்படலாம்.
காச நோயானது பொதுவாக, மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic System), இரைப்பை - குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.
இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது Tubercle Bacillus அல்லது Tuberculosis என்பதன் சுருக்கமாகும். சில மருந்துகள் உதவியால் நோய்த்தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.
இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது துஞ்சுநிலையில் (Latent TB) காணப்படும். அப்படி உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடில் அதில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாவர்கள் இறக்கின்றனர்.
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது. நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். காசநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பதை இந்நாளில் நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.