
மே 25: பன்னாட்டு காணாமல் போன குழந்தைகள் நாள்
ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாளன்று, ‘பன்னாட்டு காணாமல் போன குழந்தைகள் நாள்’ (International Missing Children's Day) கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
1979-ஆம் ஆண்டு மே 25-ம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் எனும் ஆறு வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட, புகைப்பட கலைஞராக இருந்த அக்குழந்தையின் தந்தை தன் குழந்தையின் புகைப்படத்தை எல்லா இடங்களிலும் வெளியிட்டு தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவரது தீவிரமான தேடல் அன்றைய ஊடகங்களின் கண்களில் பட, அதைத் தலைப்புச் செய்தியாக்கி குழந்தை காணாமல் போன செய்தியை நகரமெங்கும் அறிவித்தது. இந்தச் செய்தியின் தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கைகளில் 1979-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை ஆறு, குளம் போன்ற பல்வேறு இடங்களில் காணாமல் போன 29 குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஏற்படுத்திய தாக்கத்தினால் வருத்தமடைந்த அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ரொனல்ட் ரீகன், 1983-ஆம் ஆண்டு முதல் மே 25-ஆம் நாளை, அமெரிக்காவில் காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய நாளாக அறிவித்தார். அதன் பின்னர், ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டு முயற்சியாக, 2001-ஆம் ஆண்டு மே 25-ஆம் நாளிலிருந்து முதன் முதலாக, பன்னாட்டு காணாமல் போன குழந்தைகள் நாளாக அங்கீகரிக்கப்பட்டுப் பல்வேறு நாடுகளில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆபத்து மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப காணாமல் போனவர்களை வகைப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு நாடும், "காணாமல் போன குழந்தை" என்பதற்குச் சரியான வரையறை செய்யலாம்.
வீட்டை விட்டு ஓடிப் போதல்
பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர் அனுமதியின்றி, தானாக வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள்.
குடும்பக் கடத்தல்
பெற்றோர், பிற குடும்ப உறுப்பினர், பாதுகாவலர் அல்லது அவரது முகவர் ஆகியோர், அடிப்படை உரிமைகளைக் கடந்து குழந்தையினை அழைத்துச் செல்வது, தங்களுடன் வைத்துக் கொள்வது அல்லது மறைப்பது போன்றவை.
குடும்பம் அல்லாத கடத்தல்
குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவரால் கட்டாயப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படாத முறையில் குழந்தையைக் கடத்திச் செல்தல்.
காணாமல் போன குழந்தை
குழந்தை காணாமல் போனதற்கான காரணத்தைக் கண்டறிய உண்மைகள் போதுமானதாக இல்லாத நிலையில் இருக்கும் குழந்தை. பொது இடங்களில், தவறி வீட்டிற்கு வந்து சேராத குழந்தை.
கைவிடப்பட்ட அல்லது துணையின்றிச் செல்லும் குழந்தை
சட்டப்பூர்வமாகப் பொறுப்பான ஒரு பெரியவர் உடன் செல்லாத குழந்தை, அவசர நிலை காரணமாகப் பிரிக்கப்பட்டவர்கள், அகதி சூழ்நிலையில் உள்ளவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்கள் அல்லது வயது வந்தோர் கவனிப்பு இல்லாமல் விடப்பட்டவர்கள்.
-பெரும்பான்மையாக, காணாமல் போன குழந்தை என்பது மேற்காணும் வரையறைகளுக்குட்பட்டதாகவே இருக்கின்றது.
காணாமல் போகும் குழந்தைகள் தொடர்பாக அரசுசாரா நிறுவனம் ஒன்று, பொதுநல மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதற்கு இந்திய அரசு தாக்கல் செய்திருந்த பதிலில், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளில், இந்தியாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என்றும், அவர்களில் 36 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளதாகவும், பல குழந்தைகள் தாங்கள் எங்கு இருந்தோம் என்பது கூடத் தெரியாமல் இருப்பதாகவும், செவித்திறன், பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகள் மீட்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் சொந்த இடங்களுக்கு சேர்ப்பதில் சிரமம் உள்ளதாகவும் சமூக நலக்கல்வி குழுமம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகள் தொலைந்தாலோ அல்லது பொது இடங்களில் தனியாகக் குழந்தை இருப்பதைக் கண்டாலோ, அருகிலுள்ள காவல் நிலையத்தில் எவரும் புகார் அளிக்க முடியும். காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடியாத நிலையில், குழந்தைகள் நல உதவிக்கான அறக்கட்டளையின் (Childline India Foundation) கட்டணமில்லாத் தொலைத் தொடர்பு எண் 1098-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதன் மூலம், அந்தக் குழந்தையினை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.