
என்னங்க இது? கறிகாய்க்கு எல்லாமா வருடத்தில ஒரு நாளை ஒதுக்குவாங்க, விசித்திரமா இருக்கே அப்படின்னு நினைக்கிறீங்களா? உருளைக் கிழங்கை “கறிகாய்களின் அரசன்” என்று சொல்கிறார்கள். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உருளை சாகுபடி செய்யப்படுகிறது. உலக ஜனத்தொகையில் 100 கோடி மக்கள், இந்தக் கிழங்கை புசிக்கின்றனர். நூற்றுக் கணக்கான உணவு வகைகளில் உருளைக் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தானியங்கள் அளிக்கும் புரதச் சத்தைவிட உருளைக் கிழங்கு அதிகப் புரதம் அளிக்கிறது. புரதச் சத்திற்கு மாமிசங்கள் மற்றும் பால் சம்பந்தபட்ட உணவுப் பொருட்களுக்கு மாற்றாக உருளைக்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கிழங்கை உபயோகிப்பதால், எரிசக்தி பயன்பாடு குறைவதுடன், உணவிற்காக செலவிடும் பணமும் குறைகிறது. ஆகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உருளைக்கிழங்கு சாகுபடி சிறந்தது.
டிசம்பர் 2023ஆம் வருடம் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், ஒவ்வொரு வருடமும் மே மாதம் 30ஆம் தேதி, சர்வதேச உருளைக்கிழங்கு தினமாக கொண்டாட முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அதற்கான காரணம்,
உருளைக்கிழங்கு அளிக்கும் பன்முக ஊட்டச்சத்து,
பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தில் அதன் பங்கு,
கிராமப்புறக் குடும்பங்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருளாகவும் மற்றும் குடும்பம் நிர்வகிக்க தேவையான வருமானத்தை அளிக்க உதவும் பொருளாகவும் செயல்படும் கிழங்கின் பங்களிப்பு
ஆகியவைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலாகவும் உருளைக்கிழங்கு தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த வருட உருளைக்கிழங்கு தினத்திற்கான கருப்பொருள் வரலாற்றை வடிவமைத்தல், எதிர்காலத்திற்கு உணவளித்தல்.
உருளைக்கிழங்கு நம் நாட்டில் பிறந்த காய்கறி அல்ல. இதன் பூர்வீகம் தென் அமெரிக்காவின் ஆண்டிஸ். 6000 வருடங்களுக்கு முன்பாக இன்கா பழங்குடியினர், இந்த காய்கறியை புசித்து வந்தனர். ஆண்டிஸ் வந்த ஸ்பெயின் நாட்டினர், 1537இல் இதனைக் கண்டெடுத்தனர். 1580, 1585 வருடங்களில் இந்தக் கிழங்கு ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி என்று ஐரோப்பாவில் பரவியது. 17வது நூற்றாண்டில் போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் இந்தியாவில் காலடி வைத்தது. 17ஆம் நூற்றாண்டில், கிழக்கிந்திய கம்பெனி காலத்தில், வட இந்தியா முழுவதும் பரவலாக உருளைக் கிழங்கு சாகுபடி தொடங்கியது. அதே நேரத்தில், நீலகிரியில் முதலில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது. குறைந்த காலத்தில் பலன் கொடுக்கும் காய்கறி என்பதால், இதைப் பயிரிடுவோர் அதிகமாயினர்.
இந்தியாவில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக அதிகமாக சாகுபடி செய்யப்படும் பயிர் உருளைக்கிழங்கு. 2023 ஆம் வருடம் உலகின் மொத்த உருளைக்கிழங்கு உற்பத்தி 38.3 கோடி மெட்ரிக் டன். 2030இல் உலக உற்பத்தி 75 கோடி மெட்ரிக் டன்னாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு சைனா, 9.3 கோடி மெட்ரிக் டன். இரண்டாவது இடம் இந்தியா 6 கோடி மெட்ரிக் டன். விரைவில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில், உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. 2022ஆம் வருடம் இந்தியாவின் உருளைக்கிழங்கு ஏற்றுமதி 1.8 கோடி அமெரிக்க டாலர்கள்.
உருளைக்கிழங்கு உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை வட மாநிலங்கள். உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று எல்லாவற்றிலும் உபயோகிக்கப்படும் காய்கறி உருளைக்கிழங்கு.
தென்னிந்திய மாநிலங்களில், பூரி உருளைக்கிழங்கு, மசாலா தோசை, போண்டா, பஜ்ஜி பலவற்றில் தடம் பதிக்கும் இந்தக் காய்கறி , வட மாநிலங்களில் சப்பாத்தி, பரோட்டா, சமோசா ஆகியவற்றின் உற்ற தோழனாக மிளிருகிறது.
நம்முடைய திருமணங்களில் மூன்று வேளை உணவிலும், ஏதேனும் ஒரு வகையில் உருளை தலை காட்டும். முக்கியமான உணவு வகைகளில் இல்லாவிட்டாலும் பொடாடோ சிப்ஸ், ஃபிங்கர் சிப்ஸ் என்ற பெயரில் இலையில் இடம் பிடிக்கத் தவறுவதில்லை.
இரண்டாவது உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தில், பூரி உருளைக்கிழங்கு மற்றும் மசாலா தோசையில் வெங்காயம் சேர்க்கப்படவில்லை. உலகப் போரின் போது, படை வீரர்கள் தேவைக்கு, இந்தியாவிலிருந்து உருளைக்கிழங்கு அனுப்பப்பட்டதால், பற்றாக்குறை ஏற்பட்டது. அதை ஈடு செய்ய உருளைக்கிழங்குடன், வெங்காயம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
உருளைக்கிழங்கு காரக்கறிக்கு ஏற்ற கூட்டணி, முருங்கை சாம்பாரா அல்லது வெங்காய சாம்பாரா? பட்டிமன்றம் நடத்தலாம்.