
காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை அனைத்திற்கும் நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். சில தினங்களுக்கு பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்கு பின்னால் வரலாறே உண்டு. மே தினம் என்று அழைக்கப்படும் சர்வதேச உழைப்பாளர் தினத்துக்கு ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு.
உலகின் முதல் தொழிற்சங்கம் :
1800-ம் ஆண்டில் தொழிற்துறை வளர்ச்சி அடைய தொடங்கிய காலகட்டம். 20 மணி நேரம் வரை வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை என தொழிலாளர்கள் பல வகை இன்னல்களை சந்தித்தனர். இந்த சுரண்டலை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 1806-ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகர தொழிலாளர்கள் போராட தொடங்கியபோதே, அவர்கள் கடினமாக வேலை வாங்கப்பட்டது உலகுக்கு தெரியவந்தது.
பிலடெல்பியா நகர எந்திர தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதல் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான 2 ஆண்டுகளுக்கு பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாக தொடங்கின. அதேபோல 10 மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக வைத்த பெருமையும் இச்சங்கத்துக்கே உண்டு. தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசு, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 10 மணி நேர வேலை நாள் அறிவித்தது.
8 மணி நேர வேலை
இதையடுத்து, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் 10 மணி நேர வேலையை வலியுறுத்தி போராடி அதில் வெற்றியும் கண்டனர். இதனைத் தொடர்ந்து குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் எல்லா வளரும் நாடுகளிலும் பரவ தொடங்கியது. 1858-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கட்டிட தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி அதில் வெற்றியும் பெற்றனர். 1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களே மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தது.
1886-ம் ஆண்டு மே 1-ந் தேதி சிகாகோ நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர வேலைக்காக போராடினர். இதனை தொடர்ந்து போராடியவர்களை கைது செய்தும், அடக்குமுறையை கையாண்டும் போராட்டத்தை கலைக்க அரசு முயன்றது.
இந்த அடக்கு முறையை எதிர்த்து மே 4-ம் தேதி வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் ராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட, இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 7 போலீஸ்காரர்களும், 4 தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். 1886-ம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் தொழிலாளர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
மே தின கொண்டாட்டம்
கடந்த 1889-ம் ஆண்டு மீண்டும் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. 1889-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற மாநாட்டில், எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி போராட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன. 1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மே தினக் கொண்டாட்டம் சிறிது சிறிதாகப் பல்வேறு நாடுகளில் பரவியது.
தற்போது 80 நாடுகளுக்கும் மேல் மே 1-ந் தேதியை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளன. இந்தியாவின் மே தினம் முதல் முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில்தான். அதேபோல் இந்தியாவில் முதன்முதலில் மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது கேரளாவில்தான். உழைப்பை மதிப்போம். உழைப்பாளர்களை போற்றுவோம்.