

மூன்றெழுத்தின் முத்தாய்ப்பு.
பிரகாசமாய் வாழ்ந்து மறைந்த ஒளிவிளக்கு.
மருதூா் கோபால மேனன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆா் )
எனும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆா் 17/01/1917-ல் இலங்கை கண்டியில் பிறந்தவர்.
தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஒப்பற்ற தலைவர்.
திறமைமிகு நடிகர், ஆகச்சிறந்த ஆழ்ந்த அறிவாற்றல் நிறைந்த அரசியல்வாதி.
30 ஆண்டுகளுக்கு மேலாய் திரையுலகில் கொடிகட்டிபறந்த ஜாம்பவானாகிய கலங்கரை விளக்கம்.
புரட்சி நடிகர், மக்கள் திலகம், மன்னாதி மன்னன், புரட்சித் தலைவர் என பாா் போற்ற வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆா், ஒரு வாழும் மனித தெய்வம், என்றால் அது மிகையல்ல.
இளவயதில் தந்தையை இழந்ததால் தொடக்காலம் தொட்டே வறுமைவாட்டியது. பசியில் வாடியதால் அடுத்தவர் பசி அறிந்த அன்பாலயம்.
சகோதரன் எம்.ஜி.சக்கரபாணியுடன் குடந்தை நாடக கம்பெனியில் சிறு சிறு வேடமேற்ற நடிகர்.
பிறவியிலேயே ஈகை குணம், அள்ளிக் கொடுத்த வள்ளல். இன்றும் அவரது இல்லத்தில் யாா் வந்தாலும் உணவுக்கு பஞ்சமில்லா நிலை. அந்த அளவிற்கான மனித நேயம் படைத்த மன்னாதி மன்னன்.
பின்னா் 1936ல் திரையுலக பயணம் சதிலீலாவதியில் தொடக்கம். 1977வரையில் திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்திட்ட பகலவன். மதுரை மீட்ட சுந்தரபாண்டியனாய் திரையுலகம் கண்டெடுத்த நல்லவர், வல்லவர், 138 திரைப்படங்களில் நடித்த நவரத்தின திலகம்.
அதேபோல காங்கிரஸ் கட்சியில் சோ்ந்து, பின்னர் விலகி தி.மு.கவில் அசைக்கமுடியாத ஆயிரத்தில் ஒருவனாய் கட்சியை முன்னெடுத்துச் சென்ற முத்தழிழ்காவிய நாயகன். அண்ணாவின் இதயக்கனி. கலைஞரின் உடன்பிறவா சகோதரன்.
1967ல் எம்.ஆா்.ராதாவால் சுடப்பட்டு மீன்டெழுந்து வந்து மக்கள் திலகமாய் மறு அவதாரம் எடுத்த மாா்க்கண்டேயன்.
புகழின் உச்சிக்கே சென்ற புதிய பூமி. நம் நாடு நலம் பெற தி.மு.கவிலிருந்து விலகி 1972ல் அ.தி.மு.க கட்சி துவங்கிய மாபெரும் தலைவன்.
கட்சி தொடங்கிய ஆறே மாதத்தில் திண்டுக்கல் மக்களவை தோ்தல் சந்திப்பை எதிா்கொண்டு வெற்றிவாகை சூடி மக்கள் மனதை வேட்டையாடிய வேட்டைக்காரன்.
1977 முதல் 1987 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராய்... முத்தான திட்டங்கள் தந்த முன்னோடி முதல்வராய் திகழ்ந்தவர்.
காமராஜரின் மதிய உணவு திட்டத்தை மாற்றி சத்துணவு தந்திட்ட சரித்திர நாயகன்.
இரண்டு மனைவிகள் காலமான நிலையில், வி.என் ஜானகியுடன் திருமணம்.
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரைமீட்ட சுந்தரபாண்டியன் போன்ற மூன்று வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர்.
தொட்டதெல்லாம் வெற்றி என திரைப்படம் மட்டுமல்ல அரசியல் வாழ்விலும் தோல்வியை எதிாிக்கே பரிசளித்து பழகிய பத்தரை மாற்றுத் தங்கம்.
ரிக்க்ஷாக்காரன் படத்தின் நடிப்புக்காக 1972ல் தேசிய விருது வென்ற லட்சியவாதி.
இடது கைகொடுப்பதை வலது கைக்கு தொியாமல் வழங்கிய கலியுக கர்ணன்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்ற பாடலுக்கேற்ப மக்களின் மனதில் நின்ற நிறைகுடம். அமொிக்காவில் சிகிச்சையில் இருந்தே ஆண்டிப்பட்டியில் வெற்றிவாகை சூடிய வியத்தகு தலைவர்.
முதல்வராய் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றிய நாயகர்.
நினைத்ததை முடித்தவர்.
பாா்போற்றும் தாய்மாா்கள் நலம் காத்திட அடுக்கடுக்காய் திட்டங்கள் தந்த திராவிடத்தலைவன்.
தாய்சொல்லை தட்டாதவர். தர்மம் தலை காக்கும் என்ற வரிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்திட்ட தர்ம நெறியாளா்.
முதல்வர் பதவி வகித்து வரும் நிலையில் 24/12/1987-ல் மக்கள் திலகமெனும் புரட்சித்தலைவர், பாரத ரத்னா, மறைவு செய்தி உலகையே உலுக்கிது என்றால் அது மிகையல்லவே!
அவரது பிறந்த நாளில் அவரது ஈகை குணத்தை போற்றுவோம்!