

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட எம்.ஜி.ஆர் இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தவர்.
அதனையடுத்து தமிழ்நாடு வந்து நாடகக் கம்பெனியில் இணைந்து நாடகத்தில் தொடர்ந்து நடித்து வந்த அவர் சதிலீலாவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் போது அவர் வயது 20 என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வயதிலேயே பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் திரையுலகையே கட்டி ஆண்ட எம்.ஜி.ஆர், மக்கள் செல்வன், மக்கள் திலகம், புரட்சித் திலகம் , புரட்சி நடிகர், பொன்மனச் செம்மல் என்ற பல செல்ல பேர்களால் ரசிகர்களாலும் மக்களாலும் அழைக்கப்பட்டார்.
வாசிப்பை நேசித்தவர்:
எம்.ஜி.ஆருக்கு வரலாற்று விஷயங்கள் யாவும் அத்துப்படி. தீவிர படிப்பாளியான அவர், தனது வீட்டில் பெரிய நூலகத்தை நிறுவி அதில் உள்ளூர் முதல் உலக அளவிலான அரிய நூல்களை சேமித்து வைத்திருந்தார்.
தொல் பொருள் துறையினருக்கு தெரியாத விஷயம்:
ஒரு முறை தஞ்சை அரண்மனைக்கு சென்றிருந்த முதல்வர் எம்.ஜி.ஆர், அங்கு சுரங்கப்பாதை ஏதேனும் உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டார். இல்லை என உறுதியாக தெரிவித்தனர் அவர்கள். தர்பார் ஹால் அருகே ஒரு சுரங்கப்பாதை உள்ளது என தெரிவித்த எம்.ஜி.ஆர், அந்த இடத்தை தோண்டும்படி உத்தரவிட்டார். வேண்டா வெறுப்போடு அந்த இடம் தோண்டப்பட்ட போது ஒட்டுமொத்த அதிகாரிகளும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றனர்.
எம்.ஜி.ஆர் குறிப்பிட்டபடி அங்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தது. தொல்பொருள் துறையினருக்கு தெரியாத, ஒரு வரலாற்று விஷயம் முதல்வருக்கு தெரிந்தது என அனைவரும் ஆச்சரியத்துடன் நின்றனர்.
கேமரா பிரியர்:
எம்.ஜி.ஆர் தேர்ந்த புகைப்பட கலைஞர் மட்டுமல்ல... கேமரா பிரியர் என்பது பலரும் அறியாத தகவல். வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர் விரும்பி வாங்கும் பொருட்களின் பட்டியலில் நிச்சயம் கேமரா இடம் பெற்றிருக்கும்.
அப்படி சேர்த்த பல நூறு கேமராக்களை தன் இறுதிக் காலத்தில் நண்பர்களுக்கு பரிசாக தந்து மகிழ்ந்தார்.
அப்போது உலகிலேயே அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட நபர் என்று எம்.ஜி.ஆரை சொல்லலாம். ஆனாலும் அத்தனை எளிதில் நாம் விரும்பிய கோணத்தில் அவரை படம் எடுத்து விட முடியாது.
புகைப்படக்காரர் தன்னை எந்த கோணத்தில் படம் பிடிக்கிறார், ரிசல்ட் எப்படி வரும் என்பதை கணிப்பதில் வல்லவரான அவர், புகைப்படத்தில் அநாகரிகமாகவோ கண்ணியமின்றியோ போஸ் தர மாட்டார். அவரது அனுமதி இன்றி அவரை புகைப்படம் எடுத்து விடவும் முடியாது.
இமேஜில் கவனம்:
பத்திரிகையாளர்கள் பேட்டி, பிரசுரம் ஆவதற்கு முன் தன்னிடம் காட்டி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றால் மட்டுமே பேட்டி அளிப்பார். தன் கருத்து மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை அது. அந்த அளவுக்கு தன் இமேஜை ஜாக்கிரதையாக கையாண்டார் எம்.ஜி.ஆர்.
உணவில் கவனம்:
எம்.ஜி.ஆர் தங்கம் போன்ற நிறத்தில் ஜொலிக்கிறார். அதற்கு காரணம் அவர் தங்க பஸ்பம் சாப்பிடுகிறார் என்று பரவலாக பேசினர். ஒரு சமயம் இதனை அறிந்த எம்.ஜி.ஆர் 'தங்க பஸ்பம் சாப்பிடுவதில்லை, என் உடலை மெருகோடு வைத்துக் கொள்ள, நாள்தோறும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்கிறேன்' என விளக்கம் தந்தார்.
முதல் பொன்னியின் செல்வன்:
கல்கியின் புகழ் பெற்ற புனிதமான பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் முயற்சியில் முதன்முதலில் ஈடுபட்டது எம்.ஜி.ஆர் தான்.
வந்தியத்தேவனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தை நடிக்க வைக்க திட்டமிட்டார். பத்மா சுப்பிரமணியம் சினிமாவில் நடிப்பதில்லை என உறுதியாக நின்றதால், பொன்னியின் செல்வன் படம் நின்றது. பொன்னியின் செல்வனை திரைப்படம் ஆக்க முடியாத ஏமாற்றம் இறுதிவரை எம்.ஜி.ஆர் மனதில் இருந்தது.
உடலில் கவனம்:
எம்.ஜி.ஆரிடம் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலையில் 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்ய தொடங்கி விடுவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்கு செல்லும் போதும் தவறாமல் உடற்பயிற்சி கருவிகளை எடுத்துச் செல்வார்.
விலங்கு ஆர்வலர்:
சினிமாவில் சிங்கம், புலிகலோடு சண்டை போட்ட எம்.ஜி.ஆர் நிஜத்தில் விலங்கு ஆர்வலர். தன் ராமாவரம் தோட்டத்தில் கரடி, சிங்கம் உள்ளிட்ட பல விலங்குகளை வளர்த்தார் என்ற தகவல் திகில் தரக்கூடியது. வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்சினை எழுப்பியதால் அவற்றை வனவிலங்கு சரணாலயத்துக்கு கொடுத்துவிட்டார்.
ஆனால், ஒரு சிங்கம் வயதாகி இறந்தபின் மத்திய அரசின் அனுமதியுடன் அதை திரும்பப்பெற்று தன் வீட்டில் பாடம் செய்து பாதுகாத்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது!
சாதாரண கிராமத்தில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தனது படங்களின் மூலம் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்து அவர்களுக்கு ஒரு நம்பிக்கையாகவும் திகழ்ந்தவர். இதன் காரணமாகவே அவரை முதலமைச்சர் பதவியில் அமர வைத்து தமிழக மக்கள் அழகு பார்த்தனர்.
இன்று அவர் நம்மிடம் இல்லை என்றாலும் அவர் தமிழ் சினிமா மற்றும் அரசியலில் ஆற்றிய பங்களிப்பை மக்களால் என்றும் மறக்க முடியாது.
எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரின் நினைவு தினத்தில் அவரை நினைத்து போற்றுவோம்!