இசைக்கு மொழி தேவையில்லை... ரஃபியின் குரல் ஒன்று போதும்!

டிசம்பர் 24 முகமது ரஃபி பிறந்தநாள்
Mohammad Rafi's birthday
Mohammad Rafi's birthday
Published on

ந்தியத் திரையுலகமான பாலிவுட்டில் புகழ் பெற்ற இந்தி மொழிப் பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் முகமது ரஃபி. இவர் இந்தி மொழியில் மட்டுமின்றி, இந்தியாவின் பயன்பாட்டிலுள்ள கொங்கணி, போச்புரி, ஒடியா, பஞ்சாபி, மராத்தி, சிந்தி, கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, மாகாகி, மைதிலி, அசாமிய மொழி மற்றும் உருது மொழிகளிலும் பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆங்கிலம், பார்சி, அரபி, சிங்களம், டச்சு மற்றும் கிரியோல் என்று பிற மொழிகளிலும் இவர் பாடியிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகிலுள்ள கோட்லா சுல்தான் சிங் எனும் ஊரில் பிறந்தவர் முகமது ரஃபி. இவர், ஃபீக்கோ என்ற புனைப்பெயரில் கோட்லா சுல்தான் சிங்கின் தெருக்களில் சுற்றித்திரிந்த ஒரு பக்கீரின் பாடல்களைப் பின்பற்றிப் பாடத்தொடங்கினார். ரஃபியின் தந்தை 1935 ஆம் ஆண்டில் லாகூருக்குக் குடிபெயர்ந்தார். ரஃபி உஸ்தாத் அப்துல் வாஹித்கான், பண்டிட் ஜீவன் லால் மட்டு மற்றும் ஃபிரோஸ் நிஜாமி ஆகியோரிடம் பாரம்பரிய இசையைக் கற்றுக் கொண்டார்.

அவருக்குப் பதின்மூன்று வயதாக இருந்தபோது, லாகூரில் கே. எல். சைகல் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பொது மேடையில் பாடினார். 1941 ஆம் ஆண்டில், ரஃபி இசையமைப்பாளர் ஷியாம் சுந்தர் இசையில், பஞ்சாபி மொழித் திரைப்படமான குல் பலோச்சில் ஜீனத் பேகத்துடன் இணைந்து "கோரியே நீ, ஹீரியே நீ" என்ற பாடலைப் பாடி பின்னணிப் பாடகராக லாகூரில் அறிமுகமானார். இந்தப் படம் 1944 ஆம் ஆண்டில் வெளியானது. அதே ஆண்டில், அகில இந்திய வானொலியின் லாகூர் நிலையம் அவரைத் தங்களுக்காகப் பாடுவதற்கு அழைத்தது. 1945 ஆம் ஆண்டில் 'காவோன் கி கோரி' திரைப்படத்தின் மூலம் அவர் இந்தித் திரைப்படங்களில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:
கிறிஸ்துமஸ்: மரமும் பாட்டும் சொல்லும் மங்கலச் செய்திகள்!
Mohammad Rafi's birthday

அதனைத் தொடர்ந்து, 1945 ஆம் ஆண்டில் வெளியான ‘லைலா மஜ்னு’ திரைப்படத்தில் "தேரா ஜல்வா ஜிஸ் நே தேகா" மற்றும் 1947 ஆம் ஆண்டு வெளியான ‘ஜுக்னு’ திரைப்படத்தில் "வோ அப்னி யாத் திலானே கோ" ஆகிய பாடல்களுக்காக அவர் திரையில் தோன்றினார்.

இந்திப்பட உலகில் முன்னணி பாடகராக உருவான ரஃபி, இந்திய விடுதலைக்குப் பின் மனைவி பாகிஸ்தானுக்கு போக விரும்பினாலும், அவருடன் செல்லாமல் இந்தியாவிலேயே தங்கிவிட முடிவெடுத்தார். அதனால், அவர் மனைவி பஸிரா அவரை விட்டுப் பிரிந்து பாகிஸ்தான் சென்றுவிட்டார். அதன் பின்னர், பில்குஸ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

1949 ஆம் ஆண்டில் ரஃபிக்கு நௌஷாத் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் தொடர்பு கிடைத்தது. இத்தொடர்பு, இந்தி சினிமாவின் மிக முக்கியமான பின்னணிப் பாடகர்களில் ஒருவராக அவரை முன்னிறுத்தியது. 1960 ஆம் ஆண்டுகளில், அவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஓ.பி. நய்யார், ஷங்கர் ஜெய்கிஷன், எஸ்.டி. பர்மன் மற்றும் ரோஷன் இசையமைப்பில் பல அற்புதமான பாடல்களைப் பாடினார்.

1968 ஆம் ஆண்டு வெளியான, ரவி இசையமைத்த நீல் கமல் திரைப்படத்தின் "பாபுல் கி துவான் லெட்டி ஜா" பாடலுக்காக முஹமது ரஃபிக்கு தேசிய விருது கிடைத்தது. திருமணம் ஆகி மணமகன் இல்லம் செல்லும் மகளைப் பிரியாமல் தந்தை பாடுவதாக அமைந்த இந்தப்பாடலைக் கேட்கும் யாரும் அழுதுவிடுவார்கள் அல்லது மனம் கலங்குவார்கள். இந்தப் பாடலைப் பாடும்போதே முகமது ரஃபியும் அழுதுவிட்டார்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் முதுகெலும்பைப் போற்றுவோம்!
Mohammad Rafi's birthday

பின்னர் லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இரட்டையர் இசையமைப்பில் பல அற்புதமான பாடல்களை ரஃபி பாடினார். அவரது திரை வாழ்க்கையில் அதிக பாடல்கள் இவர்களுக்காகத்தான் பாடியுள்ளார். கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைப்பிலும் பல அற்புதமான பாடல்களை ரஃபி பாடியுள்ளார். கிஷோர் குமார், மன்னா டே, ஆஷா போஸ்லே மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோருடன் ரஃபி அதிக எண்ணிக்கையிலான டூயட்களைப் பாடியிருக்கிறார்.

அமர் அக்பர் அந்தோணி படத்துக்காக "ஹம்கோ தும்சே ஹோ கயா ஹை பியார்" பாடலில், பாலிவுட்டின் மிகவும் புகழ் பெற்ற பாடகர்களான கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் மற்றும் முகேஷ் ஆகியோருடன் இணைந்து பாடலைப் பாடினார். அவர்கள் அனைவரும் ஒரே பாடலுக்காக குரல் கொடுத்த ஒரே பாடல் இதுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு இவருக்கு 1967 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

1970 ஆம் ஆண்டில், ரஃபி நீண்ட காலமாக தொண்டை நோய்த் தொற்றால் துன்புற்றார். அதன் பிறகு, அவர் பாடல்கள் பாடுவதை வெகுவாக குறைத்துக்கொண்டார். இருப்பினும், பல பாடல்கள் அவருக்குச் சிறப்பாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரஃபி மீண்டும் கூடுதலாகப் பாடத்தொடங்கினார். ரிஷி கபூருக்கு அவர் குரல் வெகுவாக பொருந்தியதால் அவரது படங்களுக்கு பாடல்களைப் பாடினார். 1977 ஆம் ஆண்டில், ஆர்.டி. பர்மன் இசையமைத்த ‘ஹம் கிசிசே கம் நஹீன்’ திரைப்படத்தின் "க்யா ஹுவா தேரா வாதா" பாடலுக்காக பிலிம்பேர் விருது மற்றும் தேசிய விருது என்று இரு விருதுகளைப் பெற்றார்.

அவரது பாடல்கள் ஃபாஸ்ட் பெப்பி பாடல்கள் முதல் தேசபக்தி பாடல்கள், சோகமான பாடல்கள், காதல் பாடல்கள், கவ்வாலிகள் முதல் கசல்கள் மற்றும் பஜன்கள் முதல் பாரம்பரிய பாடல்கள் வரை பல வகைப்பட்ட பாடல்களை இவர் பாடியிருக்கிறார். பிரபல இசையமைப்பாளர், படத்தயாரிப்பாளர் மன்மோகன் தேசாய், "கடவுளின் குரல் யாருக்காவது இருந்தால் அது முகமது ரபிதான்" என்று ரஃபியின் குரல் பற்றி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

1980 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி இரவு முகமது ரஃபி, லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இசையில் ரஃபி கடைசியாக, ‘ஆஸ் பாஸ்’ படத்திற்காகப் பாடினார். பாடல் பதிவை முடித்துக் கிளம்பிய சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு தனது 55 வது வயதில் காலமானார். அவரது நினைவாக இந்திய அரசு இரண்டு நாள் பொது துக்கத்தை அறிவித்தது.

முகமது ரஃபி மறைந்து 45 ஆண்டுகள் கடந்து போய்விட்டாலும், ரஃபியின் தாக்கம் இன்னும் இந்தித் திரைப்படப் பாடல்களில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவரது தனித்துவமான மென்மை கலந்த கம்பீரக் குரல் எவராலும் மறக்க முடியாததாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டுப்பற்று, சோகம், காதல், வீரம், சந்தோஷம் என ரஃபி ரசிகர்கள் மனதில் தினம் தினம் அவரது ரசிகர்களிடம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com