
மும்பையில் சித்தி விநாயகர் கோயில் பெரும் புகழ் பெற்று விளங்குவதைப்போல ஜெய்பூரில் மோத்தி டங்ரி விநாயகர் கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக விளங்குகிறது. மோத்தி என்றால் முத்து. டங்ரி என்றால் சிறியமலை. இந்த சிறிய மலையின் மீது ஒரு கோட்டை அமைந்துள்ளது. மோத்தி டங்ரி மலையின் அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
ஆலயத்தின் மூலவர் உதயப்பூரில் இருந்து மகாராஜா முதலாம் மாதோ சிங்கால் கொண்டு வரப்பட்டவர். இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் மகாராஜாவிடம் பணிபுரிந்த சேத் ஜெய்ராம் பாலிவால் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தன் மேற்பார்வையில் இந்த ஆலயத்தை கி.பி.1761 ல் கட்டி முடித்தார்.
செந்தூர நிறத்தில் விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். விநாயகரை தரிசித்தவாறு அவருடைய வாகனமாக எலி அமர்ந்துள்ளது. விசேஷ தினங்கள் மற்றும் திருவிழா காலங்களில் விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு புதன்கிழமையும் உள்ளுர் மக்கள் இக்கோயிலுக்கு அதிக அளவில் வருகிறார்கள். புதிதாக மணமானவர்கள், புதிதாக வாகனங்களை வாங்குபவர்கள், புதிதாக வீடு கட்டுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து விநாயகரின் அருளைப் பெற்றுச் செல்லுதை வழக்கமாக வைத்துள்ளார்கள். கோயிலின் அருகில் நிறைய இனிப்புக்கடைகள் உள்ளன. இங்கு பாசிப்பருப்பு லட்டு விற்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த லட்டை வாங்கி விநாயகருக்குப் படைத்து எடுத்துச் செல்லுகிறார்கள்.
மோத்தி டங்ரி விநாயகர் கோயிலில் அதிகாலை நான்கரை மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெறும். இதைத் தொடர்ந்து காலை ஏழேகால், ஒன்பதேகால், பதினொன்று, மாலை ஆறரை, ஏழேகால் மற்றும் இரவு ஒன்பதேகால் மணிக்கு சயன ஆரத்தி என தினந்தோறும் ஏழு ஆரத்திகள் நடைபெறுகின்றன.
மோத்தி டங்ரி விநாயகர் திருக்கோயிலில் வருடந்தோறும் விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோவர்த்தன் பூஜை, பௌஸ் படா விழா என நான்கு முக்கிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. விநாயக சதுர்த்தி விழா கணேஷ் சதுர்த்தி என்ற பெயரில் ஆண்டு தோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து ”கணபதி பப்பா மோரியா” என்று கோஷமிட்டு விநாயகருக்கு லட்டைப் படைத்து வழிபட்டுச் செல்வர். இதையடுத்து கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இங்குள்ள ராதே கிருஷ்ணா விக்கிரகங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்படுகிறது. பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து கிருஷ்ணரின் அருளைப்பெற்றுச் செல்லுகிறார்கள். மேலும் தீபாவளிக்கு மறுநாள் இத்திருக்கோயிலில் கோவர்தன் பூஜை விழா கொண்டாடப்படுகிறது.
அடுத்ததாக பௌஸ்படா திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது. பௌஸ் என்பது பத்தாவது மாதமாகும். நம்மூர் மார்கழிபோல அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரிக்கு இடைப்பட்ட குளிர் மாதமாகும். இம்மாதத்தில் பௌஸ்படா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த காலத்தில் விவசாயிகள் அறுவடை செய்து தானியங்களைப் பெறுவதன் காரணமாக இம்மாதம் வடமாநிலங்களில் ”சௌபாக்கிய லஷ்மிமாதம்” என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த திருவிழாவில் பாசிப்பருப்பு, பச்சைப்பயறு, மிளகாய், கறுப்புமிளகு, தனியா, பெருஞ்சீரகம் போன்றவற்றைக் கொண்டு ”பௌஸ்படா” என்ற பெயரில் ஒரு சிறப்பான பிரசாதம் தயாரிக்கப்பட்டு சூடாக அது இந்த திருவிழாவின்போது பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆலயம் ஜெய்பூரின் பிரதான பகுதியான திலக்நகரில் மோத்தி டங்ரி சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் ஜெய்பூர் நகரின் புகழ் பெற்ற பிர்லாமந்திர் லஷ்மிநாரயணன் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த விநாயகர் கோயிலின் அருகில் பஞ்சமுக் அனுமன்ஜி வைஷ்ணவோதேவி கோயிலும் அமைந்துள்ளது.
இந்த கோயில் காலை ஐந்தரைமணி முதல் மதியம் ஒன்று முப்பது வரையிலும் மாலை நான்கரை மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திறந்திருக்கும்.