‘தேசிய கண் தான வாரங்கள்’: உலகின் ஒவ்வொரு நான்காவது பார்வை இழந்தவனும் இந்தியன்! கண் தானம் செய்வோம்!

மரணத்திற்கு பிறகும் நாம் செய்யக்கூடிய ஒரு புண்ணிய காரியமாக கண் தானம் அமைந்துள்ளது.
National Eye Donation Day
National Eye Donation Day
Published on

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆகஸ்ட் 25-ம்தேதி முதல் செப்டம்பர் 8-ம்தேதி வரை தேசிய கண் தான வாரங்களாக அறிவித்துள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 8-ம்தேதி தேசிய கண் தான நாளாக கொண்டாடப்படுகிறது.

அதனையொட்டி “கண் தானம்” எனும் ஒப்பற்ற காரியத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நமது பிறப்பு, வாழ்க்கை மற்றும் மரணம் என அனைத்து சூழ்நிலைகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்கிறோம். அந்த வகையில் மரணத்திற்கு பிறகும் நாம் செய்யக்கூடிய ஒரு புண்ணிய காரியமாக கண் தானம் அமைந்துள்ளது.

eyes
eyes

உலகின் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிகமான அளவில் தாங்கிக் கொண்டிருக்கும் தேசம் நமது தேசம். உலகின் ஒவ்வொரு நான்காவது பார்வையிழந்தவனும் இந்தியன். நமது நாட்டைப் பொருத்தமட்டில் பார்வையிழப்பிற்கு முதல் காரணம் கண் புரை, இரண்டாவது அல்லது மூன்றாவது காரணமாக இருப்பது கார்னியல் பார்வைக் கோளாறுகள்.

கார்னியா என்பது நமது கண்களின் முன்புறம் கண்ணுக்கு ஒரு கண்ணாடி ஜன்னலைப் போல அமைந்துள்ள நிறமேயில்லாத, ஒளி ஊடுருவி செல்லக்கூடிய, இரத்தக்குழாய்கள் ஏதுமேயில்லாத மெல்லிய திசு. ஆறு அடுக்குகளைக் கொண்ட ஒரு மெல்லிய திசுவாகும். இதுதான் நாம் பார்க்கும் பொருளிலிருந்து ஒளிக்கதிர்களைப் பெற்று நமது கண்ணுக்குள் அனுப்பி பார்வை என்னும் புலனைப் பெறுவதற்கு ஆதாரமாக இருப்பது. இது கண் சார்ந்த விபத்துகள், தொற்று நோய்கிருமிகள், ஊட்டச்சத்துக்குறைவு, கண் பராமரிப்புக் குறைபாடு மேலும் மரபியல் மற்றும் மூலக்கூறியல் குறைபாடு காரணங்களால் பாதிக்கப்படுகிறது. கார்னியா பாதிக்கப்படும் நிலையில், பார்வை என்னும் புலனைப் பெறுவதற்கான முதல் செயலான ஒளிக்கதிர்களைப் பெற்று கண்ணுக்குள் செலுத்தும் பணி தடைப்படுகிறது. இதுவே கார்னியல் பார்வைக்கோளாறு எனப்படுகிறது. இதனை கார்னியா மாற்று ஆபரேஷன் மூலம் சரி செய்ய முடியும்.

கார்னியா மாற்று ஆபரேஷன் என்பது பாதிக்கப்பட்ட கார்னியாவை அல்லது கார்னியாவின் பகுதியை / பாதிக்கப்பட்ட அடுக்கினை நீக்கிவிட்டு தானமாகக் கிடைத்த கண்ணின் கார்னியாவை அல்லது கார்னியாவின் பகுதியை / அடுக்கினை பயன்படுத்தி செய்யும் ஆபரேஷன். இதன் வெற்றி விகிதம் மிக அதிகம். இந்த ஆபரேஷனுக்கு தேவையான அளவு கண்கள் தானமாகக் கிடைப்பது இல்லை. எனவே பலருக்கும் ஆபரேஷன் நடைபெறுவது தாமதமாகிறது அல்லது பார்வை கிடைப்பது நிறைவேறாமல் போகிறது. மரணமடைபவர்களது கண்கள் தானமாக வழங்கப்படும் பட்சத்தில் பலருக்கும் பார்வை கிடைக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

கண் தானம்: எவ்வாறு செய்யப்படுகிறது?

கண்ணாடி அணிந்திருந்தாலும், கேட்டராக்ட் ஆபரேஷன் செய்திருந்தாலும் அவர்களும் தாராளமாக கண் தானம் செய்யலாம்.

கண் தானம் செய்ய, ஒருவர் மரணமடைந்த ஆறு மணி நேரத்திற்குள் அவரது கண்களை அகற்றியாக வேண்டும். அப்போதுதான் அந்தக் கண்களை ஆபரேஷனுக்கு பயன்படுத்த முடியும். எனவே எவ்வளவு விரைவாக கண்களை அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக அதற்குரிய விஷயங்களைச் செய்து தானமாக அளிப்பது நல்லது.

முழுக் கண்ணையும் அப்படியே வேறொருவருக்கு மாற்றி ஆபரேஷன் செய்வது கிடையாது.

தானமாகப் பெறப்பட்ட கண்களில் கார்னியா எனப்படும் விழி வெண் படலம் மட்டுமே கார்னியா மாற்று ஆபரேஷன் எனப்படும் கார்னியல் டிரான்ஸ்ப்ளாண்டேஷன் ஆபரேஷனுக்கும், ஸ்க்ளீரா எனப்படும் விழி வெளிப்படலம் கிளைகோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மால்ட்டினோ இம்ப்ளாண்ட் எனப்படும் ஆபரேஷனுக்கும் கண்களில் செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கும், மற்ற பகுதிகள் கண் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

கண்ணின் தர மதிப்பீட்டிற்காக மரணமடைந்தவரின் உடலிலிருந்து 10 சிசி அளவு வரை இரத்தமும் சேகரித்துக் கொள்ளப்படும். தரமான கண்கள் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்படும். தரம் குறைந்த கண்கள் மருத்துவ மாணவர்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும். முழுமையான கண்கள் தர மதிப்பீடு என்பது கண்களை தானமாகப் பெற்று வந்த பிறகு கண் வங்கியிலும் ஆய்வுக்கூடத்திலும் மட்டுமே சாத்தியம்.

மரணமடைந்தவர்களின் கண்களை தானமாக அளிப்பதற்கான முக்கியமான குறிப்புகள் : நாம் என்ன செய்யணும்?

நமது கண்களை தானமாக வழங்க உறுதி மொழி எடுத்துக் கொள்வோம். https://www.sankaranethralaya.org/eye-pledge.html என்ற வலைத்தளத்திலும், கண் வங்கிகளில் படிவங்களைப் பெற்றும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம்.

நமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்து விட்டால் அவர் கண் தானம் செய்ய உறுதி மொழி எடுத்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது நெருங்கிய உறவினரை சந்தித்து ஊக்குவித்து மரணமடைந்தவரின் கண்களை தானமாக வழங்கலாம்.

நமக்கு தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால், அந்த வேளையில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி, "அவரது கண்களை தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே" என்று ஊக்குவித்து, பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களது சம்மதம் பெற்று கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம்.

கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண்/பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி மற்றும் லேண்ட்மார்க் (அருகில் உள்ள இடத்தின் அடையாளம் உ.ம். கோயில், திரையரங்கு, கடைகள், போன்ற விவரங்கள்) ஆகியவற்றுடன், தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும்.

மரணமடைந்தவரின் கண்களை மூடி இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சினை வைப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
கண் நரம்பியல் சம்மந்தப்பட்ட 'நிஸ்டாக்மஸ்'... அப்படீன்னா என்ன? தெரிஞ்சுக்கலாமே...
National Eye Donation Day

மரணமடைந்தவரின் தலையை இரண்டு தலையணைகளை வைத்து சுமார் 6 அங்குலம் உயர்த்தி வைக்க வேண்டும். இது கண்களை அகற்றும்போது உதிரம் வெளியேறுவதைத் தவிர்க்கும்.

கண் வங்கியிலிருந்து மருத்துவர் குழு வரும் முன்பே அருகில் உள்ள நர்சிங் ஹோம் அல்லது குடும்ப மருத்துவரிடமிருந்து மரண சான்றிதழ் பெற்று வைத்துக் கொள்வது நல்லது. கண் வங்கி மருத்துவர் குழுவினருக்கு மரண சான்றிதழ் வழங்க உரிமை கிடையாது.

கண்களை மிகவும் நாகரீகமான முறையில் அதிகபட்சம் 20 முதல் 30 நிமிடத்தில் அகற்றி விடுவார்கள். கண்களை எடுத்த பிறகு கண்களை எடுத்த அடையாளமே தெரியாது என்பதே உண்மை.

இதையும் படியுங்கள்:
கண்ணே நலமா? கண் பாதுகாப்புக்கு உதவும் பயிற்சிகள்!
National Eye Donation Day

சென்னையில் கண் தானம் வழங்குவதற்கான தொலைபேசி எண்கள் : 044 28281919 மற்றும் 044 28271616.

இ-மெயில் முகவரி : eyebank@snmail.org

முகவரி: சியுஷா கண் வங்கி,

சங்கர நேத்ராலயா,

21 டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத் சாலை (பைகிராஃப்ட் கார்டன் சாலை),

சென்னை 600 006.

மற்ற ஊர்களில் அருகில் உள்ள கண் மருத்துவமனைகள் / கண் மருத்துவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com