தேசிய நடைப்பயிற்சி தினம்: உடல்நலம் காக்கும் 8 வடிவ வாக்கிங்! 

8 வடிவ வாக்கிங்
8 வடிவ வாக்கிங்

இன்று தேசிய நடைப்பயிற்சி தினம். இந்த நன்னாளில் 8 வடிவ நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாகவே நடைப்பயிற்சி என்பது எளிதாக செய்யக்கூடிய ஒரு பயனுள்ள உடற்பயிற்சியாகும். இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மனநலத்தையும் மேம்படுத்துகிறது. பலருக்கு நேரான பாதையில் அல்லது ஒரு வட்டமான வடிவத்தில் நடப்பது பொதுவான விருப்பமாக இருந்தாலும், 8 வடிவ உருவத்தின் மேல் நடப்பது, பல நன்மைகளை வழங்குவதாக சொல்லப்படுகிறது. 

8 வடிவ நடைப்பயிற்சி: 8 வடிவம் என்பது கணிதத்தில் இன்ஃபினிட்டியைக் (∞) குறிக்கும் குறியீடு. இந்த வடிவத்தில் நடப்பதற்கான ஒரு வடிவத்தை அமைத்து, அதன் மீது தொடர்ச்சியாக நடப்பதே 8 வடிவ நடைப்பயிற்சி. இந்த வடிவத்தின் மேல் நடக்கும்போது உடலுக்குத் தேவையான எல்லா அசைவுகளும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. 

8 வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள்:

அதிக உடல் அசைவுகள்: நேர்கோட்டில் அல்லது வட்ட வடிவத்தில் நடப்பதை விட 8 வடிவ நடை பயிற்சியானது உடலுக்கு வெவ்வேறு வழிகளில் சவால் விடுகிறது. மாறுபட்ட திருப்பங்கள் மற்றும் வளைவுகள் உங்கள் கோர், இடுப்பு மற்றும் கால்கள் உள்பட பல்வேறு தசைகளுக்கான அசைவுகளைக் கொடுக்கிறது. இதன் மூலமாக உடலின் முக்கிய தசைகள் செயல்படுவதால், ஒட்டுமொத்த உடல் வலிமையும் மேம்பட உதவுகிறது. 

நல்ல மனநிலை: 8 வடிவத்தில் நடப்பது உங்கள் உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் பலம் சேர்க்கும். ஒவ்வொரு திசையாக திரும்பும்போது மாறுபட்ட சுற்றுச்சூழல் இயற்கைக் காட்சிகளை நீங்கள் காண்பதால், உங்கள் மனம் சளிப்படையாமல் நடைப்பயிற்சியில் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறது. இதன் மூலமாக கவனம், படைப்பாற்றல் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாடும் மேம்படும். 

அதிக கலோரி எரிப்பு: 8 வடிவத்தில் நீங்கள் தொடர்ச்சியாக நடப்பதால், அதிக திருப்பங்கள் மற்றும் வளைவுகள் காரணமாக உங்கள் இதயத்துடிப்பு அதிகரித்து, நடைப்பயிற்சியின் தீவிரத்தன்மை அதிகரிக்கும். இது நேரான பாதையில் நடப்பதை விட அதிக கலோரி எரிக்க வழிவகுக்கிறது. 8 வடிவ நடைபயிற்சியை சரிவான பகுதிகளில் செய்யும்போது இதன் பலன் மேலும் அதிகரிக்கும். 

மூட்டுகளுக்கு நல்லது: மூட்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு 8 வடிவ நடைப்பயிற்சி ஒரு மென்மையான உடற்பயிற்சி விருப்பமாகும். திசையை அவ்வப்போது மாற்றி நடப்பதால், மூட்டுகளில் ஒரே இடத்தில் தாக்கம் ஏற்படுவது குறைகிறது. இருப்பினும் மூட்டுகளில் காயம் ஏற்படுவதன் அபாயத்தைக் குறைக்க, சரியான காலணிகள் அணிவது அவசியம். 

8 வடிவ நடை பயிற்சி செய்வதற்கான வழிமுறைகள்:

  1. முதலில் சரியான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். முடிந்தவரை வெளியிடங்களை தேர்வு செய்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. நீங்கள் நடைபயிற்சி செய்யும் இடம் பாதுகாப்பானதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். 

  2. இடத்தைத் தேர்வு செய்ததும் அங்கே 8 வடிவத்தை வரைந்து கொள்ளவும். உங்கள் விருப்பம் போல, வடிவத்தை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ உருவாக்கிக் கொள்ளலாம். குறிப்பாக நடக்கும்போது GPS செயலி பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்பதை கண்காணிக்கவும். 

  3. நடைப்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன், வாம் அப் செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலமாக தசைப்பிடிப்புகள் மற்றும் சுளுக்கு போன்ற பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

  4. நடக்கும்போது உங்கள் தலையை உயர்த்தி, தோள்களை தளர்வாக வைத்து, நடைப்பயிற்சி முழுவதும் நல்ல தோரணையை பராமரிக்கவும். குறிப்பாக நடக்கும்போது கைகளை அசைத்து நடக்கவும். 

  5. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது நீங்கள் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம். கையில் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ளுங்கள். சோர்வாக இருக்கும் சமயத்தில் அவ்வப்போது தண்ணீர் குடியுங்கள்.

இதையும் படியுங்கள்:
Black Swan Events: வாழ்க்கையை மாற்றும் நிகழ்வுகள் - சவால்களை சமாளிப்பது எப்படி?
8 வடிவ வாக்கிங்

எட்டு வடிவ நடை பயிற்சி என்பது உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். இந்த அனுபவத்தை ரசித்து, நடைப்பயிற்சியின் முழு ஆற்றலையும் உணருங்கள். உங்களை சுற்றி இருக்கும் விஷயங்களை கவனித்து மனதை மகிழ்ச்சகரமாக வைத்திருங்கள். இது உங்களுக்கு நல்லதொரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இந்த தனித்துவமான நடைப்பயிற்சியை உங்கள் உடற்பயிற்சி முறையுடன் இணைத்துக் கொள்வதால், பல விதங்களில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்தலாம். உடலும், மனமும் நன்றாக இருந்தாலே வாழ்க்கை இன்பம் தானே? நீங்கள் ஏன் இன்றே இந்த நடைப்பயிற்சியைத் தொடங்கக்கூடாது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com