கிறித்தவ சமயத்தில் புனிதர் பட்டம் பெறுவதற்கு நான்கு படிநிலைகள்! திருத்தந்தையால் மட்டுமே புனிதர் பட்டம் வழங்க முடியும்!

நவம்பர் 1: புனிதர் அனைவர் பெருவிழா!
All Saints' Day
All Saints' Day
Published on

கத்தோலிக்க திருச்சபை முதலிய பல மேற்கு கிறித்தவ திருச்சபைகளில் நவம்பர் 1 அன்றும், கிழக்கு திருச்சபைகளில் தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறு அன்றும் புனிதர் அனைவர் பெருவிழா (All Saints' Day) கொண்டாடப்படுகிறது. பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள், எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரேகோரியின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது.

புனிதர், அல்லது தூயர் எனப்படுபவர் சமய நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தில் பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாகக் கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

புனிதர்கள் மக்களுக்காகக் கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் எனக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதர் பட்டம் தற்போது திருத்தந்தையால் (போப்) மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இவ்வறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதனைக் குறிக்கும். புனித தோமையார், புனித சவேரியார், புனித பதுவை அந்தோணியார், புனித குழந்தை இயேசுவின் திரேசம்மாள், புனித அருளானந்தர், புனித செபஸ்தியார் போன்றவர்கள் முக்கியமான புனிதர்களில் சிலராவர்.

உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கு,

  1. இறை ஊழியர் (Servant of God) என அறிவிக்கப்படல்

  2. வணக்கத்திற்குரியவர் (Venerable) என அறிவிக்கப்படல்

  3. அருளாளர் (Blessed) என அறிவிக்கப்படல்

  4. புனிதர் (Saint) என அறிவிக்கப்படல்

என்று நான்கு படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன.

1. இறை ஊழியர்:

இறை ஊழியர் அல்லது இறைப் பணியாளர் (Servant of God) என்பது ஏதாவது ஒரு மதப்பிரிவின் நம்பிக்கையில் உறுதியாய் இருப்பவர்களைக் குறிக்கும். கிழக்கு மரபுவழித் திருச்சபையில் எல்லாக் கிறித்தவர்களையும் குறிக்கும். அரேபிய மொழியில் அப்துல்லா, எபிரேய மொழியில் ஒபதியா மற்றும் ஜெர்மன் மொழியில் Gottschalk என்பது இறை ஊழியர் எனப் பொருள்படும்.

கத்தோலிக்கப் பிரிவில், இறை ஊழியர் அல்லது இறை பணியாளர் என்பது கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு படிகளில் முதல் படியாகும். ஒருவர் இறந்து ஐந்து வருடம் ஆன பின்பே புனிதர் பட்டத்திற்கான வேலைகள் தொடங்கும். குறிப்பிட்ட இடத்தில் உள்ள இறைமக்களால் புனிதர் என நம்பப்படுகின்றவர்களை அகில உலக திருச்சபையும் ஏற்று கொள்ள ஆயரால் அளிக்கப்படும் முதல் பட்டமாகும்.

2. வணக்கத்திற்குரியவர்:

வணக்கத்திற்குரியவர் என்பது கிறித்தவச் சான்றோருக்கு வழங்கப்படும் பட்டங்களுள் ஒன்றாகும். குறிப்பாக, கத்தோலிக்கத் திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு படிகளில் இரண்டாவது படியாகும். ஆயரால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆராய்ந்தறிந்து அவர் வீரமான (மீநிலை), நற்பண்பு (Heroic Virtue), மீநிலை நற்பண்பு கொண்டுள்ளார் என்று பரிந்துரைத்தால், வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்படுவார். தலைச்சிறந்த நற்பண்புகள் என்பவை இறையியல் நற்பண்புகளான நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் இறையன்பு ஆகியவற்றையும், தலையான நற்பண்புகளான முன்மதி, அளவுடைமை, நீதி மற்றும் துணிவு ஆகியவற்றையும் உள்ளடக்கும்.

3. அருளாளர்:

அருளாளர் பட்டம் (முத்திப்பேறு பட்டம்) என்பது கிறித்தவ நம்பிக்கையைக் கடைப்பிடித்து, சிறப்பான விதத்தில் வாழ்ந்து இறந்த ஒரு மனிதர் விண்ணகத்தில் இருக்கிறார் எனவும், கடவுளிடம் இவ்வுலகில் இருப்பவர்களுக்காக பரிந்து பேசும் வல்லமை உள்ளவர் எனவும் கத்தோலிக்கத் திருச்சபையினால் வழங்கப்படும் அங்கீகாரம் அல்லது சடங்குமுறை ஆகும். இது கத்தோலிக்க வழக்கத்தில் முத்திப் பேறுபெற்ற பட்டம் (Beatification) என்றும் அறியப்படுகிறது. இச்சொல் Beatus என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்தது. இதற்கு "பேறு பெற்றவர்" என்பது பொருள். புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான வழக்கமான நான்கு படிகளில் இது மூன்றாவதாகும்.

ஒருவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கப்பட்ட பின், மக்கள் அவரிடம் தனிப்பட்ட விதத்திலும், சிற்றாலயங்களிலும் (chapel) பரிந்துரை வேண்டுதல்களை முன்வைக்கலாம். ஆனால், கோவில்களிலும் (church), பேராலயங்களிலும் (basilica) அத்தகைய வேண்டுதல்களை நிகழ்த்த மறைமாவட்ட ஆயரின் அனுமதி தேவை. புனிதர் பட்டம் வழங்கப்பட்ட பின் எல்லா வழிபாட்டு இடங்களிலும் அப்புனிதருக்கு வணக்கம் செலுத்தப்படலாம்.

கத்தோலிக்க நம்பிக்கையின் மீது இருக்கும் வெறுப்பால் (hatred for the faith) மறைசாட்சியாகக் கொல்லப்பட்டு வணக்கத்திற்குரியவர் நிலையை அடைந்தவர்களுக்கு, அருளாளர் பட்டம் அளிக்கப்பட புதுமைகள் ஏதும் நிகழத் தேவை இல்லை. தமிழகத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு இது போலவே அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆயினும் மறைசாட்சியாக இறக்காதவர்களுக்கு ஒரு புதுமை நிகழ்ந்தால் மட்டுமே அருளாளர் பட்டம் அளிக்கப்படும், அதுவரை அவர் வணக்கத்திற்குரியவர் என்றேக் கருதப்படுவார்.

இதையும் படியுங்கள்:
ஒற்றுமையே உயர்வு என்பதை வலியுறுத்தும் சிலை!
All Saints' Day

4. புனிதர்:

புனிதர் பட்டம் அளிக்கும் நிகழ்வு (Canonization) இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியளில் சேர்க்கப்படும் நிகழ்வைக் குறிக்கும். புனிதர் பட்டம் அளிக்கப்படுவதால் ஒருவர் புனிதராவதில்லை. மாறாக அவர் புனிதராகக் கடவுளோடு இருக்கிறார் என்பதனை உலகிற்கு அறிவிக்கும் செயலாகக் கருதப்படுகிறது. எவ்வகைப் புனிதராயினும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இப்பட்டம் திருத்தந்தையால் மட்டுமே அறிவிக்கப்படும். ஆனால் மரபுவழி திருச்சபைகளில்

இரத்த சாட்சியாக மரிப்பவர்களுக்கு தனிப்பட்ட அறிவிப்பு தேவையில்லை. அவர்களது மரணமே அவர்களது புனிததுவத்திற்கு சாட்சியாக ஏற்கப்படும். பிற கிறித்துவ உட்பிரிவுகளில் எவ்வகை முறையான அறிவிப்பு முறைகளும் இல்லை.

மேற்காணும் நான்கு படிநிலைகளைக் கடந்து, திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும், இவ்வகை அங்கீகாரம் பெறாமல், ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரையும் நினைவு கூறும் வகையிலேயேப் புனிதர் அனைவர் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com