சிறு குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகம் பாதிக்கும் நிமோனியா (Pneumonia)!

நவம்பர் 12: உலக நுரையீரல் அழற்சி நாள்!
World Pneumonia Day
World Pneumonia Day
Published on

உலகம் முழுவதும் நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் நாளில், உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் நாளில் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளைக் கொண்டாடின. 2010 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 12 ஆம் நாளுக்கு மாற்றம் செய்யப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நுரையீரல் அழற்சி (Pneumonitis) அல்லது நிமோனியா (Pneumonia) என்பது சுவாச நோய். வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் நுரையீரலில் தொற்றுகள் நேரிடுகின்றன. நிமோனியா என்பது லேசான பாதிப்பாகவோ அல்லது சில நிகழ்வுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் பெரிய பாதிப்பாகவோ இருக்கும். உடலில் அல்வியோலிவின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாகும். சுவாச செயல்பாடுகளில் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு ஆகியவற்றின் பரிமாற்றங்கள் நுரையீரலின் சிறிய காற்றுப்பைகள், ரத்தம் வாயிலாகவே நடைபெறுகிறது. அல்வியோலி வாயிலாக ஆக்சிஜன், உடலின் அனைத்து செல்களுக்கும் அனுப்பப்படுகிறது.

மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி, பாக்டீரியா தொற்றுகள் காரணமாக, அல்வியோலிவில் தண்ணீர் அல்லது சீழ் கோர்க்கிறது. இது, அதன் செயல்பாட்டைக் குறைப்பதால் நிமோனியா ஏற்படுகிறது. இது சுவாசத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. காற்றுப்பைகளில் நீர் கோர்ப்பதால் ஆக்சிஜனின் தரம் குறைந்து ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கும் செயல்முறையைத் தடுக்கிறது.

நுரையீரல் அழற்சிக்குப் பெரும்பாலும் பாக்டீரியா அல்லது தீ நுண்மங்கள் முதன்மைக் காரணியாக இருக்கின்றன. பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவையும் இதற்கடுத்தாற்போல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. 100-க்கும் அதிகமான தொற்று நோய்க்காரணிகள் அடையாளம் காணப்பட்டாலும், அவற்றுள் சில மட்டுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய்க்காரணியாக இருக்கின்றன. கவனமுடன் நடத்தப்படும் சோதனைகளில் கூட நோய்க்கான முதன்மைக்காரணியைத் தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை.

புகைப்பழக்கம், நோயெதிர்ப்புத் திறன் குறைபாடு, மதுபானப் பழக்கம், நாள்பட்ட நுரையீரல் சுவாச நோய், ஆஸ்துமா, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்றவை நோய் நிலையையும் தீவிரத் தன்மையையும் நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன.

சுவாசிப்பதில் தடை, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மேலோட்டமான சுவாசம், இதயதுடிப்பு அதிகரித்தல், காய்ச்சல், குளிர்ச்சி மற்றும் அதிக வியர்வை, இருமல், நெஞ்சுவலி, குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை நிமோனியா அறிகுறிகளாகும். முதியவர்களிடம் இத்தகைய அறிகுறிகள் குழப்பமானதாக இருக்கக்கூடும். நோய் அறிவதற்கான செயல் முறைகளில் எக்ஸ்-கதிர் மற்றும் சளிப் பரிசோதனை ஆகியவை உதவுகின்றன.

காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சு வாங்குதல் போன்றவை ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவாக அறிகுறிகளாகும். இருப்பினும், காய்ச்சல் அறிகுறி மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறி அல்ல. ஏனெனில், பல பொதுவான நோய்களிலும் காய்ச்சல் இருக்கக்கூடும். குழந்தைகளில் நீலத் தோல், அருந்துவதில் சிரமம், தொடர் வாந்தி, குறைந்த நனவு நிலை, மயக்கம் உள்ளிட்ட மிகக் கடுமையான அறிகுறிகள் காணப்படலாம். 

பாக்டீரியாவால் ஏற்படும் நுரையீரல் அழற்சிக்கு பாக்டீரியாக்கள் முக்கியக் காரணமாக இருக்கிறது. இது மக்களிடம் தொற்றுவதுடன் பரவவும் செய்கிறது. 50 சதவிகித நுரையீரல் அழற்சிப் பாதிப்புகளில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்பது பொதுவாக காணப்படுகிறது. உலகச் சுகாதார மையத்தின் கூற்றுப்படி, இது சிறுவர்களிடம் பொதுவாக அதிகம் காணப்படும் பாக்டீரியா தொற்று என்பது தெரியவருகிறது. ஹீமோபிலஸ் நிமோனியா, கிளமிடோபிலா நிமோனியா மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா ஆகியவையும் நுரையீரல் அழற்சியின் இதர சில வகைகளாகும். இதே போன்று, பாரா இன்ஃப்ளூயன்ஸா, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், கொரோனா வைரஸ் மற்றும் ரைனோவைரஸ் ஆகியவற்றின் காரணமாகவும் நுரையீரல் அழற்சி ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இளம் பிள்ளைகளுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள் எவை தெரியுமா?
World Pneumonia Day

நுரையீரல் அழற்சி நோயால் உலகளவில் சுமார் 450 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளால், நுரையீரல் அழறிசியினால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளன. இருப்பினும், வளரும் நாடுகளில் மிக இளம் வயதினர் மற்றும் முதியவர்களுக்கும், தீராத நோய்த் தொற்றுள்ளவர்களுக்கும் நுரையீரல் அழற்சியானது மரணத்திற்கான முன்னணிக் காரணியாக இருக்கிறது.

குறிப்பிட்ட வகை நுரையீரல் அழற்சி நோய்களைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. கைகழுவுதல் மற்றும் புகைப்பிடிக்காமை போன்றவை மற்ற தடுப்பு முறைகளாகும். நோய்த்தாக்கம் கடுமையாக இருந்தால் பாதிக்கப்பட்டவர், பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். ஆக்சிசன் அளவு குறைவாக இருப்பின் செயற்கைச் சுவாசச் சிகிச்சை அளிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com