அலை அலை அலை அலையலை... 'துறைமுக அலை' என்பது என்ன?

நவம்பர் 5: உலக சுனாமி விழிப்புணர்வு நாள்!
World Tsunami Awareness Day
World Tsunami Awareness Day
Published on

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் நாளன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day) கடைப்பிடிக்கப்படுகிறது. சுனாமியின் அபாயகரமான விளைவுகள், சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் சுனாமியின் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், அதனால் ஏற்படும் பாதிப்பைப் பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.

சுனாமி என்பது ஜப்பானியச் சொல்.

'சு' என்றால் துறைமுகம். 'நாமி' என்றால் அலை. எனவே சுனாமி என்றால் 'துறைமுக அலை' என்று பொருள். சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami) என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம் பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று. நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக்கூடிய மூல காரணிகளாக இருக்கின்றன.

‘அலை' என்ற வார்த்தைக்கு 'போல' அல்லது 'அதே தன்மை கொண்ட' என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு.

தமிழில் 'ஆழிப்பேரலை' என்று உள்ளது. ஆக்கினசு மொழியில் சுனாமியை 'பியுனா' அல்லது 'அலோன் புலூக்' என்பர். 'அலோன்' என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்சு மக்களின் மொழியில் 'அலை' என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் 'சுமாங்' என்றும் சிகுலி மொழியில் 'எமாங்' என்றும் அழைக்கின்றனர்.

2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். 2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26-ஆம் நாளன்று, யுரேசியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள், இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது.

சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது ஜப்பான் நாடுதான். ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு, பொதுமக்களிடம் சுனாமி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என ஐ.நா. சபை வலியுறுத்தியது. இதற்காக அனைத்து உலக நாடுகளையும் ஒங்கிணைத்த ஐ.நா.சபை கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டில், உலக சுனாமி விழிப்புணர்வு நாள் 22 டிசம்பர் 2015 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் மூலம் நிறுவப்பட்டது. அமாகுச்சி கோரியாவின் செயல்களை நினைவுகூரும் தி ஃபயர் ஆஃப் ரைசு சீவ்சு என்ற பாரம்பரிய சப்பானியக் கதையின் நாள் என்பதால், ஜப்பானியப் பிரதிநிதிகளால் இந்த நாள் குறிப்பாகக் கோரப்பட்டது.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகளைப் போற்றும் இனிய நன்னாள்!
World Tsunami Awareness Day

ஜப்பானில் பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் தலைவர் யுகி மட்சுவோகா, மார்ச் 11 அல்லது டிசம்பர் 26 போன்ற ஒரு நினைவு நாள் அல்லது சோகமான நாளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, செயல்திறனுள்ள செயல்களால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்ட நவம்பர் 5 ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார். அதன் பிறகு, 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில், ‘உலக சுனாமி விழிப்புணர்வு நாள்’ கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறுவப்பட்டது.

இந்த நாளில் பல்வேறு நாடுகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இவை சமூக ஊடகங்களில் விழிப்புணர்வைப் பரப்புவதற்கு மக்களை ஊக்குவிக்கின்றன. கடந்த 100 ஆண்டுகளில் மொத்தம் 58 சுனாமிகள் ஏற்பட்டு 2,60,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதால் சுனாமி விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது. 1998 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுனாமியால் 200 பில்லியன் டாலர் எனும் அளவில் இழப்பு ஏற்பட்டது. கடலோரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகளால் எதிர்காலத்தில் சுனாமி இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதே வேளையில், கடலை எல்லைகளாகக் கொண்ட நாடுகள் அனைத்தும் உலக சுனாமி விழிப்புணர்வு நாளைக் கடைப்பிடிப்பதுடன், கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி, அதன் வழியாக முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் செய்யும் போது, உயிரிழப்புகள் பெருமளவில் குறையும் வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com