முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட மூட்டு வலி, இளம் வயதினருக்கும் வரத் தொடங்கியிருக்கிறது!

அக்டோபர் 12: உலக மூட்டுவலி தினம்!
World Arthritis Day
World Arthritis Day
Published on

உலகம் முழுவதும் மூட்டு வலி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பன்னாட்டு மூட்டு வலி மற்றும் முடக்குவாத அமைப்பு (Arthritis and Rheumatism International) மக்களிடையே மூட்டு வலியைத் தடுக்கவும், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்கள் விரைவாக குணமடைவதற்கான உதவிக் குறிப்புகளையும் வழங்கும் நோக்கத்துடன், அக்டோபர் 12 ஆம் நாளினை உலக மூட்டு வலி நாள் (World Arthritis Day) என்று அறிவித்துக் கொண்டாடத் தொடங்கியது.

1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில், உடல் நல ஆலோசகர்கள் மற்றும் உடல் நலம் தொடர்பான நிறுவனங்கள் கீல்வாதம் குறித்தும், அது வராமல் தடுப்பதற்கான உதவிக் குறிப்புகள் குறித்தும் அனைவருக்கும் எடுத்துக் கூறுகின்றனர். இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம், அதிகமான மக்களுக்கு மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள், அதிலிருந்து விடுபடுவதற்கான மருத்துவத் தகவல்கள் போன்றவை ஆலோசனைகளாக வழங்கப்படுகின்றன.

மூட்டு வலி என்பது கை, கால், விரல், தோள்பட்டை என்று உடம்பிலுள்ள மூட்டுகள் எதிலும் ஏற்படக்கூடியது. உடல் பருமன், அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிந்து போதல், கிருமித்தொற்று, காசநோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிதல், முதுமை போன்ற பல காரணங்களால், மூட்டு வலி ஏற்படுகின்றது. முன்பு முதியவர்களை மட்டும் பாதித்து வந்த இந்த நோய், தற்போது இளைஞர்களிடமும் ஏற்படுகிறது. உலகளாவிய முடக்கு வாதம் தொடர்பான அமைப்பின் 2021 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளவில் 35 கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூட்டு வலி மற்றும் விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு அழற்சி மூட்டுக் கோளாறு ஆகும். மூட்டு வலிகளில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றுள் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் மிகவும் பொதுவானது. விழிப்புணர்வு மற்றும் ஆதரவு இல்லாததால், மூட்டு வலி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலை உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது. கீல்வாதத்திற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. கீல் வாத நோய்க்கான அறிகுறிகளை முதலிலேயேப் புரிந்து கொண்டால், அதற்கேற்ற சிகிச்சையினைப் பெற்று, அந்த நோய் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
மூட்டு வலியை கையாளும் விதங்கள் அறிவோம்!
World Arthritis Day

உலக மூட்டு வலி நாளன்று நடைபெறும் கொண்டாட்டங்களின் போது, மூட்டு வலி வருவதற்கான பல்வேறு காரணங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன. மேலும், அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த வலியிலிருந்து ஆறுதல் பெறவும், நோயை மேலும் அதிகரிக்காதபடி பார்த்துக் கொள்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் உலக மூட்டு வலி நாளுக்கான கருப்பொருள் ஒன்று அறிவிக்கப்பட்டு, அதன் வழியாக, மூட்டு வலி குறித்த பல்வேறு தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கு, 'தகவல் தெரிந்த தேர்வுகள், சிறந்த விளைவுகள்' (Informed Choices, Better Outcomes) எனும் கருப்பொருள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள், வேகமாக வளர்ந்து வரும் எண்ணிம உலகிற்கு ஏற்ற கருப்பொருளாக அமைந்திருக்கிறது. தற்போது, மூட்டு வலி குறித்தும், அதற்கு சரியான தீர்வு குறித்தும் பல்வேறு தவறான, நம்பிக்கையற்ற பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வேளையில், மூட்டு வலி தொடர்பான தகவல்களை சிறந்த மூட்டு வலி வல்லுநர்களிடமிருந்து அறிந்து கொள்வதுடன், அவர்களின் வழியாக, அதற்கேற்ற ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் பெறுவதே சிறந்தது என்று வலியுறுத்தப்படுகிறது. நம்பிக்கையற்ற பொய்யான தகவல்களும், அதன் வழியிலான சிகிச்சைகளும் தவறான விளைவுகளை ஏற்படுத்தி, வாழ்க்கையை முடக்கிப்போட்டு விடும் என்பதையும் வலியுறுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 
World Arthritis Day

இந்தச் சூழலில், கீல்வாதத்தால் ஏற்படும் மூட்டு வலியைச் சுயமாக நிர்வகிக்கக் கீழ்க்காணும் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளலாம்.

  • பச்சை இலைக் காய்கறிகள், பெர்ரி, இஞ்சி, விதைகள், பருப்பு வகைகள் மற்றும் நார்ச்சத்து போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகளுடன் நன்கு சமநிலையான உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

  • அதிக உடல் எடையைச் சுமப்பது நமது மூட்டுகளுக்கு, குறிப்பாக எடை தாங்கும் மூட்டுகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதால், மூட்டு வலியை மேலும் அதிகரிக்கும். எடையைச் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

  • மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்தும், உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்திட வேண்டும். நீச்சல், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை நாள்தோறும் செய்யக்கூடிய சிறந்த பயிற்சிகளாக இருக்கும்.

  • தசைகள் ஓய்வெடுக்க யோகா மற்றும் தியானத்தில் ஈடுபட வேண்டும்.

  • புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள், அதனை உடனடியாக நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com