
முதன் முதலில் மயக்க மருந்து கண்டுபிடிப்பதற்குக் காரணமாக இருந்த வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் (William Thomas Green Morton) என்பவர், அமெரிக்கப் பல் மருத்துவர்; அறுவை சிகிச்சை வல்லுநர். இளமைப் பருவத்தில் பால்டிமோர் பல் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், 1842 ஆம் ஆண்டில் ஹோரெல் வேல்ஸ் என்ற பல் மருத்துவருடன் கூட்டு சேர்ந்து பல் மருத்துவத் தொழிலைச் செய்து வந்தார். வேல்ஸ் உம் உணர்ச்சி மயக்க முறையில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், 1843 ஆம் ஆண்டில் இவர்களிருவருக்கு இடையிலான கூட்டுப் பல் மருத்துவத் தொழில் முடிவுற்றது.
வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் தமது மருத்துவத் தொழிலில் செயற்கைப் பற்களைப் பொருத்துவதில் தனித்திறமை பெற்றவராக விளங்கினார். செயற்கைப் பற்களைப் பொருத்துவதற்கு முதலில் பழைய பல்லின் வேரை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. பல்லின் வேர்களைப் பிடுங்குவது மிகவும் வேதனையைத் தந்தது. இதற்கு எதேனும் ஒருவகை மயக்க மருந்தைக் கண்டுபிடிப்பது இன்றியமையாததாயிற்று. 1844 ஆம் ஆண்டில் இவரின் பழைய கூட்டாளியான வேல்ஸ் 'சிரிப்பூட்டும் வாயு' எனப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடை வலி நீக்கும் மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பரிசோதனைகள் நடத்தினார். கனக்டிக்கட் மாநிலத்தில் ஹார்ட்ஃபோர்டில் மருத்துவத் தொழிலாற்றும் போது நைட்ரஸ் ஆக்சைடைப் பல் நோய் சிகிச்சையில் வேல்ஸ் பயன்படுத்தினார். ஆனால், பாஸ்டனில் இந்த முறையைப் பொதுமக்களுக்குச் செயல் விளக்கம் செய்து காட்ட இவர் முயன்ற போது தோல்வியுற்றார்.
மோர்ட்டோன் தமது நோக்கங்களுக்கு நைட்ரஸ் ஆக்ஸைடு போதிய அளவுக்குப் பயனுடையதாக இராது என்பதை உணர்ந்தார். அதை விட ஆற்றல் வாய்ந்த ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். சார்லஸ் டி. ஜேக்சன் என்பவர் ஒரு மருத்துவ வல்லுநராகவும், விஞ்ஞானியாகவும் விளங்கியவர். அவர் மோர்ட்டோனிடம் ஈதரை (Ether) மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பார்க்கும்படி ஆலோசனை கூறினார். ஈதருக்கு உணர்ச்சி மயக்கமூட்டுகிற பண்பு உண்டு என்பதை 300 ஆண்டுகளுக்கு முன்னரே பாராசெல்சஸ் (Paracelsus) என்ற புகழ் பெற்ற சுவிஸ் மருத்துவர் கண்டுபிடித்திருந்தார்.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இது பற்றிய ஓரிரு அறிக்கைகள் வெளியாகி இருந்தன. ஆனால், ஈதர் பற்றி எழுதிய ஜாக்சனோ வேறு எவருமோ இந்த வேதிப்பொருளை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தியதில்லை. 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மோர்ட்டோன் ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையில் நோய் உணரா வண்ணம் செய்து புகழ் பெற்றார். வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்நாளையேத் தற்போது உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) என்று நினைவு கூரப்படுகிறது.
விழிப்புநிலை தடுமாறுதல் (Sedation) என்பது தன்னுணர்வு நிலையிலிருந்து வேறுபடும். விழித்தெழ முடியாத அரைத் தூக்கநிலை அல்லது விழிப்புநிலை தடுமாறுதல், கை கால் அசைவுகள் மந்தமாகிப் போதல், வாய்குழறுதல், எழுந்திருக்க முடியாமல் கிடத்தல், மூளையில் கார்ட்டெக்ஸின் செயல்பாடுகள் முடங்குதல் போன்ற நிலைகளைக் குறிக்கும். இந்நிலையில் தூக்கம், நினைவு இழப்பு (Unconsciousness), உடல் கட்டுநிலை (Immobility) மற்றும் வலி உணர்வு/வலி இழப்பு (Analgia) ஆகிய விளைவுள் ஏற்படும். இந்நிலையை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்ததுதான் மயக்க மருந்து (Anaesthesia) எனப்படுகின்றது.
மயக்க மருந்து (Anesthetic) என்பது அறுவை சிகிச்சைகளின் போது வலி தெரியாமல் இருப்பதற்காகவும் மயக்கமடையச் செய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஆகும். இம்மருந்து மனித உடலின் சுவாசம், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இதயத்தின் செயற்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது. மயக்க மருந்தானது தோலில் உரோஞ்சுவதன் மூலமும், மருந்து ஊசியின் மூலமும், வாயுவாகவும் மனித உடலினுள் உட்செலுத்தப்படுகின்றது. மயக்க மருந்துப் பயன்பாட்டினை அனஸ்தீசியா (Anaesthesia) என ஆங்கிலத்தில் அழைப்பர். ஜோசப் லிஸ்டர் என்பவரே நவீன மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர். கோக்கைன், மதுசாரம் ஆகியவையும் வேறுசில போதைப் பொருட்களுமே முற்காலத்தில் மயக்க மருந்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.
அறுவைச் சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருப்பதும், நடந்தது எதுவும் பிற்பாடு நினைவுக்கு வராமல் போவதும் கூட அந்த மருந்துகளின் செயலால்தான். ஒவ்வொரு மருந்தும் குறிப்பிட்ட நரம்புத் தொகுப்புகளை (குடும்பங்கள்) இடைமறிக்கின்றன. தெளிவாகவும், துல்லியமாகவும் அவற்றின் செய்முறை தெரிந்துவிட்டால் அவை ஏன், எப்படி பக்கவிளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது புரியும். பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் மருந்துகளை வடிவமைக்க முடியலாம். மயக்க மருந்து கொடுக்கும் போது மருத்துவரோ, மருத்துவ உதவியாளரோ அருகில் இருப்பது அவசியம். எதிர்பாராத பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக நோயாளரைக் கவனிக்க அவர்களில் யாராவது ஒருவர் உடனிருத்தல் அவசியமாகும். முனைப்புக் கவனிப்புப் பிரிவில் (Intensive Care Unit) தூக்க/மயக்க மருந்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.