ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாளன்று உலக பக்கவாத நாள் (World Stroke Day) கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தின் தீவிரத் தன்மையையும் அதிக விகிதங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும், அந்த நிலையின் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உயிர் பிழைத்தவர்களுக்குச் சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதும் உலகப் பக்கவாத நாள் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கங்களாக இருக்கின்றன.
பக்கவாத நோய் மனிதனுக்கு உண்டாகும் நோய்களில் ஆபத்தானது. இரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பதைத்தான் பக்கவாதம் என்கிறார்கள். எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஓர் ஆபத்தான நோய் பக்கவாதமாகும். மூளையின் ஒரு பகுதிக்கு இரத்தம் மிகவும் குறைவாகச் செல்லும் போது, பக்க வாதம் என்ற மருத்துவ அவசர நிலை உருவாகிறது. மூளைத் திசுக்கள் சிதைவடைகின்றன. ஒருவரின் தோற்றம், பேச்சு, பார்வை மற்றும் உடல் செயல்பாடுகள் பாதிப்படைகின்றன.
பக்கவாதம் உலகளவில் பரவலான ஒரு நோயாக தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போது இயலாமைக்கான மிகப் பெரிய காரணமாகவும், உலகளவில் இறப்புக்கான இரண்டாவது பெரிய காரணமாகவும் பக்கவாதம் உள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் இறப்பு மற்றும் இயலாமையால் இழந்த 116 மில்லியன் மக்களுக்கு பக்கவாதம் காரணமாக இருந்தது. பக்கவாதத்தின் தனிப்பட்ட வாழ்நாள் ஆபத்து தற்போது 4 இல் 1 ஆகும். மேலும் 5.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உண்டு. விழிப்புணர்வு நாளை உருவாக்கும் யோசனை 1990 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய பக்கவாத அமைப்பின் முன்முயற்சியால் தொடங்கியது. நிதி வரம்புகள் காரணமாக இந்த முயற்சி ஐரோப்பாவில் மட்டுமே இருந்தது. ஐரோப்பிய பக்கவாத அமைப்பு இந்தத் திட்டத்தைத் தொடர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் மே 10 ஆம் நாள் அன்று விழிப்புணர்வு நாளை கொண்டாடுகிறது.
அக்டோபர் 29 அன்று உலகப் பக்கவாத நாள் அனுசரிக்கப்படும் என்று உலகப் பக்கவாத நிறுவனம் 2004 ஆம் ஆண்டு கனடாவின் வான்கூவரில் நடந்த உலகப் பக்கவாத காங்கிரசில் நிறுவியது. மருத்துவர் விளாடிமிர் அச்சின்சுகியின் வழிகாட்டுதலின் கீழ் பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அக்டோபர் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலகப் பக்கவாதம் பிரகடனத்துடன் இணைக்கப்பட்டது. அதே நேரத்தில், பன்னாட்டுப் பக்கவாதச் சங்கமும் உலகப் பக்கவாதக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து உலகப் பக்கவாத அமைப்பை உருவாக்கின. உலகப் பக்கவாத நாளின் நிர்வாகத்தை இந்த அமைப்பு எடுத்துக் கொண்டது.
2009 ஆம் ஆண்டில், உலக பக்கவாத நிறுவனத்தின் தலைமையானது, இந்த ஒற்றை விழிப்புணர்வு நாளை மையமாகக் கொண்டு, பக்கவாதம் கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சையில் உள்ள முக்கிய பிரச்சனைகள் பற்றிய பொது விழிப்புணர்வை மேலும் நீட்டிக்கும் அணுகுமுறையாக உருவாக்க ஆண்டு முழுவதுமான பிரச்சாரத்திற்குத் திட்டமிட்டு மாறியது. பக்கவாதத் தடுப்பு, சிகிச்சை ஆகியவற்றில் உள்ள முக்கிய பிரச்சனைகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கருப்பொருள்களுடன் பிரச்சாரத்திற்குத் திட்டமிடப்பட்டது. தொடர்ந்து, எதிர்கால பிரச்சாரங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.
பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார் எனப் பட்டியலிட்டுள்ளது. பக்கவாதத்துக்கான இடர் காரணிகளில் சில மரபுவழியினால் ஏற்படுவனவாகவும், இயற்கை செயல்முறைகளால் ஏற்படுவனவாகவும் இருக்கின்றன. அப்படியானவற்றை நாம் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியாது. வேறு சில இடர் காரணிகள் வாழ்க்கை முறை மற்றும் சூழல் போன்ற நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய, அல்லது மாற்றக் கூடிய காரணிகளாக இருக்கின்றன. அவற்றைத் தகுந்த உடல்நலப் பாதுகாப்பு முறைகளால் நாம் மாற்றியமைக்கலாம்.
கட்டுப்படுத்த முடியாத இடர் காரணிகள்:
வயது 55 வயதுக்கு மேல், ஒவ்வொரு பத்தாண்டும் இந்நோய் வருவதற்கான சாத்தியம் இரட்டிப்பாவதாகின்றது. வயது முதிர்ந்தவர்களிலேயே அதிகளவில் இந்நோய் ஏற்படுகின்றதாயினும், 65 வயதுக்குட்பட்டவர்களிலும் பக்கவாதம் ஏற்படுகின்றது.
மரபு வழியாகவும் இந்நோய் வருவதாக அறியப்பட்டுள்ளது.
அனைத்து வயது மனிதர்களையும் கருத்தில் கொள்கையில், பெண்களை விட ஆண்களிடம் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனாலும், நோய்த் தாக்கத்துக்குட்பட்டவர்களில் இறப்பு ஏற்படுவது பெண்களிலேயே அதிகமாக உள்ளது. பெண்களில் பிறப்புத் தடுப்பு மருந்துகள், கர்ப்ப நிலைகள் இடர் காரணிகளாக அமையும்.
முதலிலேயே இந்நோய்த் தாக்கம் ஏற்பட்டவர்களிலும், மாரடைப்பு ஏற்பட்டவர்களிலும் பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.
கட்டுப்படுத்தக்கூடிய இடர் காரணிகள:
உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்துக்கான முதன்மைக் காரணியாக உள்ளது. இவ்வுயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும் போது அதிகளவில் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு குறைகின்றது.
புகைப்பிடிப்பவர்களில் அதிகளவில் பக்கவாத நோய் ஏற்படுவதாக அண்மைய காலங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வாய் மூலம் எடுக்கும் பிறப்புத் தடை மருந்து பாவிப்பவர்கள், புகை பிடிப்பவர்களாயிருந்தால், மேலும் அதிகரித்த இடர் காரணியாக அமைந்து விடுகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்களில் இந்நோய்த் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிமகாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களில் உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ரோல், மற்றும் அதிக உடற் பருமனும் இருப்பின், இந்நோய் ஏற்படுவதற்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது.
அதிகரித்த உடற்பருமன் உடையவர்களில் உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ரோல், நீரிழிவு நோய், மேலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது.
உயர் கொலஸ்திரோல் அளவுள்ளவர்களில் இந்நோய்க்கான நிகழ்தகவு அதிகரிக்கும்.
அதிகக் கொழுப்பு உணவுகள், உடலில் கொலஸ்திரோல் அளவை அதிகரிப்பதாலும், சோடியம் (உப்பு) கூடிய உணவுகள் உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணமாக இருப்பதாலும், அதிகரித்த கலோரி கொண்ட உணவுகள் உடற்பருமனை அதிகரிப்பதாலும், பக்கவாதத்திற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன. பழவகைகள், மரக்கறி வகைகளைக் கொண்ட உணவு இந்த நோய்த் தாக்கத்தை குறைக்கிறது.
கரோட்டிட், சில நாடி நோய்கள், ஏட்ரியக் குறு நடுக்கம் (Atrial fibrillation), அரிவாளணு நோய் (Sickle cell disease), மேலும் சில இதய நோய்கள் இருப்பின், இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
சரிவர நிறுவப்படாத சில இடர்க் காரணிகள்:
பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பக்கவாத நோய் அதிகளவில் காணப்படுகிறது. அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அதிகளவில் இந்நோய் இருக்கிறது.
வறிய குடும்பங்களில் இந்நோய் அதிகளவில் இருப்பதாக அறியப்படுகிறது.
அளவுக்கதிகமான மதுபாவனை பக்கவாதம் உட்பட, பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
கொக்கெயின், ஹெரோயின் போன்ற போதை மருந்துக்கு அடிமையானவர்களில் இந்த பக்கவாத நோய்த்தாக்கம் அதிகரிக்கிறது. இது இப்படி அடிமைப்படும் இளையோரில் ஏற்படுகிறது. இம்மருந்துகள் சமூக, உடல் நலப் பிரச்சனைகளைத் தருவதுடன், பலவகை நோய்களுக்கும் காரணியாகின்றன.
பக்க வாத அறிகுறிகளை அறிந்து உடனடியாக மருத்துவ உதவி செய்தால் விளைவுகளைக் குறைக்கலாம்.
முகம், கை, கால்களில் திடீரென தளர்வும், உணர்வற்ற தன்மையும் ஏற்படல். இது பொதுவாக உடலின் ஒரு பக்கம் மட்டும் ஏற்படல்.
வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளல், விழுங்குதல் கடினமாதல்
திடீரென ஏற்படும் குழப்பம், பேச முடியாமையும், கிரகிக்க முடியாமையும்.
திடீரென ஒரு கண்ணிலோ, இரண்டிலுமோ பார்வைப் புலன் குறைவடைதல், அல்லது முற்றாக அற்றுப் போதல்
திடீரென நடக்க முடியாமல் போதல், உடற் சமநிலை குழம்புதல்,
காரணம் தெரியாமல் திடீரென ஏற்படும் தீவிர தலைவலி, மற்றும் மயக்க உணர்வு ஏற்படல் இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுமாயின், உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லல் வேண்டும்.
பக்கவாதத்திற்கான பொதுவான அறிகுறிகளை F.A.S.T என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் நினைவில் வைக்கலாம்.
F என்பது முகத்தைக் (Face) குறிக்கிறது - நோயாளியைச் சிரிக்கச் சொல்லவும். முகத்தின் ஒரு பகுதி தொய்வு அடைந்திருக்கிறதா என்று பார்க்கவும்.
A என்பது புயத்தைக் (Arms) குறிக்கிறது - நோயாளியிடம் இரு கரத்தையும் உயர்த்தச் சொல்லவும். ஒரு புயம் வெளிப்புறமாகச் சாய்கிறதா என்று நோக்கவும்.
S என்பது பேச்சைக் (Speech) குறிக்கிறது - ஒரு எளிய சொற்றொடரைச் சொல்லுமாறு நோயாளியைக் கேட்கவும். பேச்சு குழறுகிறதா என்று கவனிக்கவும்.
T என்பது மருத்துவ ஊர்தியை அழைக்க வேண்டிய நேரத்தைக் (Time) குறிக்கிறது - மேற்கண்ட அறிகுறிகளைக் கண்டால் உடனே 102 அல்லது 108 ஐ அழைக்கவும்.