பணத்தை மட்டும் சேமித்தால் போதுமா?

அக்டோபர் 30: (இந்தியாவில்) உலகச் சேமிப்பு நாள்
savings
savingsImage Credits: The Economics Times
Published on

இன்றையக் காலத்தில் சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே வருங்கால வாழ்வில் சிறப்படையமுடியும் எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் முன் கூட்டியே கணித்துதானோ என்னவோ திருவள்ளுவர், 

‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ 

என்ற குறள் வழியாகச் சேமிப்பின் அவசியத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்துரைத்திருக்கிறார். 

பிலிப்போ ரவிசா என்ற இத்தாலியப் பேராசிரியர் 1924 ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டுச் சேமிப்பு வங்கிக் கூட்டத்தில் அக்டோபர் மாதக் கடைசி நாளை (அக்டோபர் 31) பன்னாட்டுச் சேமிப்பு நாள் என்று கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். 

உலகின் பல பகுதிகளிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் உலகச் சிக்கன நாள் அல்லது உலகச் சேமிப்பு நாள் (World Savings Day) கொண்டாப்பட வேண்டும் எனவும், இந்நாளில் சேமிப்பு மற்றும் சிக்கனம் போன்றவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகவும் பிரபலமான இந்நாள் மக்கள் தங்கள் பணத்தை வீட்டிற்குள் வைத்துக் கொண்டிருப்பதை விட, வங்கியின் சேமிப்பில் வைப்பது நல்லது என்பதும் வலியுறுத்தப்பட்டது. இதுவே பிற்காலத்தில், உலக நாடுகள் அனைத்தும் உலகச் சேமிப்பு நாளைக் கொண்டாடக் காரணமாகவும் அமைந்தது. பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக, சிக்கனம், மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, "இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு" என்பதும் முன்னெடுக்கப்பட்டது. 

உலகம் முழுவதும் உலகச் சேமிப்பு நாள், அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், அக்டோபர் 31 ஆம் நாள், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்த நாள் என்பதால், இந்தியாவில் சிக்கன நாள் அக்டோபர் 30-ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும் என்ற முதுமொழிக்கேற்ப தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தைத் தன் குடும்பத்திற்கும், நாட்டுக்கும் பயன்படும் வகையில் ஒவ்வொரு மனிதனும் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தின் ஒரு சிறு பகுதியைச் சேமிக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

ஒருவருடைய வருமானத்தில் குறைந்தது 10 விழுக்காட்டையாவது கட்டாயம் சேமிக்கும் பொழுது, எதிர்பாராமல் ஏற்படும் அவசரத் தேவைகளின் போது அச்சேமிப்பு நமக்கு கைகொடுத்து உதவுகின்றது. சேமிப்பின் அவசியத்தைச் சுட்டிக்காட்டுவதில் எறும்புகள், தேனீக்கள் போன்றவை மனிதனுக்கு உதாரணமாக இருக்கின்றன.

குடும்பத்தில் உள்ள அனைவரும் வரவு செலவுகளை திட்டமிட்டு சிக்கனமாக செயல்படும் போது, அதிகமாகச் சேமிக்க முடிவதுடன்,  குழந்தைகளும், சேமிப்பின் அவசியத்தை உணர்கின்றனர். பெற்றோர் குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை சொல்லிக் கொடுத்திட வேண்டும். சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையின் அடிப்படைக் கூறுகளாக மாறுகின்றன. சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்வதால் மட்டுமே, பொருளாதார ரீதியில் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பதைச் சிறு வயதிலிருந்தே அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தர்மம் தலைகாக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்! எப்படி?... இந்த உண்மைக் கதையை படித்தால் புரியும்!
savings

சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படையாக, எளிமை, போதுமென்ற மனம் என்பதுடன் செலவுகளை நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதாகவே இருக்கிறது. வரவை மீறிச் செலவு செய்தால், நம் கடன் அதிகரிக்கக் கூடும். கடன் அதிகரித்தால், நம்முடைய நல்ல பண்புகள் ஒவ்வொன்றையும் படிப்படியாக இழக்க நேரிடும். உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியர், ‘கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே’ என்கிறார். ஏனெனில், கடன் என்பது பண இழப்போடு, நமக்கான நண்பனையும் இழக்கச் செய்து விடும் என்கிறார்.  

எதிர்காலச் செலவுகளான குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுக்கால செலவுக்கு என்று பல வழிகளில் சேம்ப்பின் தேவையை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். பணம் ஒன்று மட்டும் நம் சேமிப்பு என்றிருப்பதை மாற்றி, மனித வாழ்விற்கு அவசியத் தேவையான மழை நீர், குடிநீர், மின்சாரம், எரிசக்தி என்று பல இருக்கின்றன. அனைத்துத் தேவைகளிலும் சிக்கனத்தையும், சேமிப்பையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று இன்றைய நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com