
உலக வரலாற்றில் அதிகக் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison). பிப்ரவரி 11, 1847 அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தின் மிலன் நகரில் பிறந்தவர். மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி படிப்பு. ஆனால், பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன். ஆர்வ மிகுதியின் காரணமாக ‘பெஞ்சமின் பிராங்கிளினின் மின்சார கண்டுபிடிப்பு பற்றி படித்தார். அந்நாளில் தந்தி கருவி மட்டுமே மின்சாரத்தில் இயங்கியது. எனவே, அதனை முழுமையாக தெரிந்துகொள்ள தந்தி அலுவலகத்தில் இரவு நேரப் பணியாளராகச் சேர்ந்தார்.
எடிசனின் முதல் கண்டுபிடிப்பு 1864ம் ஆண்டு கண்டுபிடித்த ‘டெலிகிராப் ரிபீட்டர்’ எனும் கருவிதான். 1869ல் எலெக்ட்ரிக் ஓட்டு ரிக்கார்டர் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை பெற்றார். அதன் பின்னர் தொழிற்சாலையை நிறுவி அதில் கேட்கப்படும் கருவிகளை புதிதாகக் கண்டுபிடித்துத் தந்தார். அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் எலெக்ட்ரிக் பல்பு.
பாஸ்டன் நகரில் ஒரு புத்தகக் கடையில் மைக்கேல் பாரடே எழுதிய மின்சார ஆராய்ச்சி நூல்களைப் படித்து மின்சாரத்தை பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டார். தன்னுடைய 21 வயதில் மின்சார பல்பு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மற்றவர்கள் எலெக்ட்ரிக் ஆர்க்கை வைத்து மின்சார வெளிச்சத்தை ஏற்படுத்தி வந்தார்கள். இதனால் புகை கிளம்பியது. பல்பின் அளவும் பெரிதாக இருந்தது. அந்த மாதிரி பல்புகள் தொழிற்சாலைகள் மற்றும் ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டது. சிறிய அளவிலான பல்பை கண்டுபிடிக்க முடியவில்லை.
மின்சார விளக்குகளை பற்றிய முழு தகவல்களையும் திரட்டினார். அதன் விளைவாக முந்தையவர்கள் செய்த தவறுகளைக் கண்டுபிடித்தார். 1878ம் ஆண்டு எடிசன் எலெக்ட்ரிக் பல்பு கம்பெனியை உருவாக்கினார். அதுதான் பின்னர் புகழ் பெற்ற ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி ஆனது.
மின்சாரத்தை எதில் செலுத்தினால் அது பளிச்சென்று வெளிச்சத்தைத் தரும் என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக உலோக கம்பிகள், மூங்கில், மரங்களின் பட்டை, நார்கள், தலைமுடி என விதவிதமான பொருட்களைப் பயன்படுத்தி பார்த்தார். இதற்குத் தேவைப்பட்ட பொருட்களை சேகரிக்க தனது உதவியாளர்களை அமேசான் காடுகள் தொடங்கி, ஜப்பானின் கடற்கரை வரை பல நாடுகளுக்கு அனுப்பினார்.
அவர்கள் கொண்டு வந்த பொருட்களில் மின்சாரத்தை செலுத்தி ஒரு நாளைக்கு 20 மணி நேரம் சளைக்காமல் சோதனை, பரிசோதனை என செய்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறையும் அவருக்குக் கிடைத்தது தோல்வி மட்டுமே. ஆனாலும், முயற்சியை அவர் விடுவதாக இல்லை. போதாக்குறைக்கு இந்த பரிசோதனை செய்யும்போது ஒரு முறை சோதனைசாலையில் இருந்த ஸ்டவ் திடீரென்று வெடிக்க, மொத்த பரிசோதனை கூடமும் எரிந்து சாம்பலானது.
இதைக் கண்டு எடிசன் கலங்கவில்லை! மீண்டும் புதிதாக ஒரு சோதனை சாலையயை அமைத்தார். தொடர்ந்து முயற்சித்தார். முயற்சி தோல்வி அடையவில்லை. கனவு நனவாகியது. 1200 முறை மின்சார பல்பை எரிய வைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்த எடிசன் 1201வது முறையில் நடந்த சோதனையில் சில ரசாயன மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்ட பருத்தி நூலை வைத்து பரிசோதனை செய்தபோது கண்ணாடி பல்புக்குள் அந்த நூல் பிரகாசமாக எரிந்தது. உலகிற்கு இரவை பகலாக்கும் மாயவித்தை நடந்தது 1879ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி.
எடிசன் எரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்க அயராது உழைத்துக் கொண்டிருந்தார். பல ஆண்டுகள் இரவும் பகலுமாக அரும்பாடுபட்டு கடைசியில் ஒரு நாள் தனது முயற்சியில் முழு வெற்றியும் பெற்றார். அப்போது அதிகாலை 3 மணி. மின்சார பல்பு பிரகாசமாக எரிவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவர்.தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை தட்டி எழுப்பினார். ‘ஏய்! பார் இந்த அதிசயத்தை’ என்றார். ‘என்ன?’ என தூக்கக் கலக்கத்தில் அவர் மனைவி கேட்டார்.
‘இருட்டை வெளிச்சமாக்கி விட்டேன்’ கண்களைத் திறந்த அவர் மனைவி சட்டென்று மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். ‘என்ன இது ஒரே வெளிச்சம்! கண்கள் கூசுகின்றன. தூக்கம் கெடுகிறது. உடனே விளக்கை அனைத்து விட்டு பேசாமல் படுங்கள்!’ என்று கூறி விட்டு திரும்பப் படுத்துக் கொண்டாள். தாமஸ் ஆல்வா எடிசன் அசைவற்று நின்றார். பிறகு மெல்லிய புன்னகை புரிந்தார்.
பிராக்டிகல் மின்சார பல்பு 1879ம் ஆண்டு காப்புரிமை பெற்றது. 1882ம் ஆண்டு 5000 மின்சார பல்புகள் தயாரித்து அவருடைய கம்பெனி விற்றது. 1890ல் 20,000 பல்புகள் தயாரித்து விற்கப்பட்டது.
எடிசன் 1931ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி 84 வயதில் மறைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின்பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.