
நமது வாழ்க்கையில் வண்ணங்கள் பல இடங்களைப் பிடித்துள்ளன. ‘வண்ண நிலவே, வண்ண நிலவே’ என நிலவை வர்ணித்துப் பாடுவோம். நிலவின் வண்ணம் அனைவருக்கும் பிடிக்கும். வான வில்லின் வண்ணங்களும் அனைவர் மனதையும் ஆா்ப்பரிக்கும்! ஒவ்வொருவருக்கும் ஒருவித வண்ணம் பிடிக்கும். அது அவரவர் மனதின் எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கும். ஆக, வண்ணங்களின் வர்ணஜாலம் போல, வண்ணங்கள் மனித வாழ்வோடு பயணிக்கத்தான் செய்கின்றன.
இப்படி வண்ணங்களோடு ஒத்துப்போவதும், அதன் முக்கியத்துவம் மற்றும் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 22ம் தேதி உலக (National Color Day) வண்ண தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. வண்ணங்கள் பலரிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தவே செய்கின்றன.
வீடு கட்டும் நிலையில், அதன் உள்ளே, வெளியே அவரவருக்குப் பிடித்த வண்ணங்கள் பூசப்படுகின்றன. கிரஹ அமைப்புகளின்படியே மனிதன் அவரவர்களுக்குாிய ராசியான வண்ணங்களில் உடுத்தும் உடையும், மோதிரமும், கலர் தோ்வு செய்து போடுவதும் உண்டு. வண்ணங்களைப் பொதுவாக, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, வெள்ளை, கருப்பு என ஏழாக வகைப்படுத்தலாம்.
சிவப்பு நிறம் பொதுவாக உற்சாகம், அன்பு, வலிமையைக் குறிக்கிறது. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியையும் திறமையையும் குறிக்கிறது. பச்சை நிறம் இயற்கை, மன அமைதி நல்ல ரசனையோடு பிணைக்கப்பட்டுள்ளது. நீல நிறம் பெரும்பாலும் அமைதி மற்றும் உயர்தரமான வழியைக் காட்டுகிறது. ஊதா நிறம் அதிகாரம் மற்றும் சக்தியைக் கொடுக்கிறது. வெள்ளை நிறம் தூய்மை மற்றும் மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறம் துக்கம் மற்றும் பயத்தை வெளிப்படுத்துகிறது.
இயற்கையின் அமைப்பே அலாதியானது. அது ஒரு உன்னதமான தசாவதாரத்தின் கலை வடிவம். சமுத்திரத்தை, அதன் அலையை கவிஞர்கள் வர்ணிக்கும்போது கூட, ‘நீலச்சேலை கட்டி வந்த சமுத்திரப் பெண்ணே’ என பாடல் வரிகளில் வருமே! புகை வண்டியை நிறுத்த சிவப்பு, மீண்டும் இயக்க பச்சை, ஆக ஒரே இடத்தில் பல வண்ணங்களின் ஆதிக்கம் தெளிவாகிறது!
ஆனால், பச்சோந்திகள் போல மனித மனங்கள் மட்டும் சமயத்துக்கு ஏற்றபடி தனது வண்ணங்களை மாற்றிக்கொள்வது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது! ஆக, அவரவர்களுக்கு ஏற்ற வகையில் வண்ணங்களின் தன்மை அறிந்து அதை பயன்படுத்தி வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்துதான் பாா்ப்போம்!