
சுதந்திரம் அடைந்து முதல் 20 ஆண்டுகளில் காங்கிரசும், அடுத்த 57ஆண்டுகளாகத் தொடர்ந்து மாறி மாறித் திராவிடக்கட்சிகளும் தமிழகத்தை ஆண்டு வருகின்றன!இன்றையநிலையில் ஊழலிலாகட்டும், சாலை விபத்துக்களிளாகட்டும், சர்க்கரை வியாதியிலாகட்டும், அனைத்திலும் முதலிடம் வகிப்பது தமிழகந்தான்!
அதிலும், சமீப காலங்களில் சிறுமியர்க்கு இழைக்கப்படும் அநீதிகளும், பெண்களிடம் சங்கிலி பறிப்பதும் தொடர்ந்து ஏறு முகத்திலேயே இருந்து வருகின்றன! நீர் ஆதாரங்களை ஆக்கிரமிப்பது, புறம்போக்கு நிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்பது ஆகியவையும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. ஒரு காலத்தில் ஏரிகள் மாவட்டம் என்றழைக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டமே இன்றுகுறுகிப் போன ஏரிகளால் வறண்டு போய், ஒரு வாய்த் தண்ணீருக்கே ஆலாய்ப் பறக்கும் அவலத்திற்கு ஆளாகியது எங்ஙணம்?
சென்னையில், வங்காள விரி குடாவுக்குப் போட்டியாய் கடலாகக்காட்சியளித்த ரெட்டேரி குறுகிப் போனது யாரால்? ஆங்காங்கே இருந்த ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் காணாமல் போனது எப்படி? இந்த பாதகங்களிலிருந்து நாட்டை எப்படி வெளிக் கொணர்வது என்ற பெரும் ஆதங்கத்தில் நடுநிலையாளர்களும், நல்லவர்களும், சமூக ஆர்வலர்களும், நல்ல பல பத்திரிகைகளும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், இன்னும் முழுப்பலனை எட்ட முடியவில்லை!
இவ்வளவுக்கும் தமிழகத்தின் பழம் பெருமை சாதாரணமானதன்று! மனிதர்களுக்கு மட்டுமல்லாது, பிற விலங்குகள், மரங்கள், செடி கொடிகள், பறவைகளுக்குங்கூட ஊறு விளைவிக்காத உயர்குடி தமிழ்க்குடி என்பதை எத்தனையோ நிகழ்ச்சிகள் மூலம் நமது முன்னோர்கள் உலகுக்கு உணர்த்திச் சென்றுள்ளார்கள்! தேர்க்காலில் எதிர்பாராத விதமாகக் கன்று அடிபட்டு இறந்துபோக, தண்டனையாகத் தன் மகனையே தேர்க்காலால் கொல்லச்செய்த ஆரூர் மன்னன்! கொழு கொம்பின்றி காற்றில் தவித்த முல்லைக்கொடிக்கு, தான் பயணம் செய்து வந்த தேரையே அது படரும் கொம்பாகத் தந்த பாரி வள்ளல்! பசியோடு வந்த பருந்துக்குத் தன் தொடைச் சதையையே உணவாக, உளம் உவந்து அளித்த சிபிச் சக்கரவர்த்தி! மயிலுக்குக் குளிர் போகப் போர்வை அளித்த பேகன்! இப்படி நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்!
இவர்களை அடுத்து வந்த தலைமுறையினர் எத்தொழிலைச் செய்தாலும் அதில், உண்மை, நேர்மை, நியாயம் இவற்றைக் கடைப்பிடித்து, வறுமையிலும் வளமாக, துன்பத்திலும் அமைதியுடன் வாழ்ந்து வந்தனர்! வரலாறு மட்டுமே வாழ்வைச் செம்மைப்படுத்துமா? பழம் வரலாற்றால் நிகழ்கால வாழ்வு சிறப்புப்பெறுமா? பழம் பெருமை பேசும் நாம், அதனைப் பாதுகாக்கத் தவறி விட்டோம்! உலகுக்கு நீதியைப் போதித்த நம்மால், உள்ளூரில் அதனை ஒழுங்காக நிறைவேற்ற முடியவில்லை!
ஏமாற்றுக்காரர்களின் ஏகபோக நாடாகத் தமிழகம் மாறி விட்டது! இதற்கெல்லாம் யார் காரணம்? அரசியல்வாதிகளா? அதிகாரிகளா? அல்லது அனைத்தையும் சகித்துக் கொள்ளும் மனோ நிலைக்கு வந்து விட்ட மக்களா?!
‘அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்!’ என்ற பழமொழி மன்னராட்சி முறைக்கு ஒத்துப் போகலாம்! ஆனால், மக்களாட்சி நடைபெறும்போது அது எதிர்மறையாக, அதாவது ‘மக்கள் எவ்வழி அவ்வழிஅரசு!’ என்றல்லவா இருக்க வேண்டும்! நிதர்சனம் வேறு மாதிரியாகவல்லவா இருக்கிறது!
காங்கிரஸ் ஆட்சியில், காமராஜர் தமிழகத்தை ஆண்ட போது, தன்னலங் கருதாத தனிப்பெருந்தலைவராக அவர் மிளிர்ந்தார்! தாயையும், சகோதரியையுங்கூடப் பாரமாக நினைத்தார்! படுசுத்தமான கைகள் அவருக்கு இருந்ததால், பச்சோந்திகள் அவர் பக்கத்தில் செல்லவே அஞ்சினார்கள்! அரசு அதிகாரிகளுக்குத் தாமதமில்லாமல் பதவி உயர்வுகளை வழங்கிக் கௌரவித்தார்! அவர்களும் நன்றிக்கடன் பட்டவர்களாக, அவர்களின் அதிகபட்ச உழைப்பை நல்கினார்கள்! கல்வியிலாகட்டும், பாசனத்திலாகட்டும், பலபிற துறைகளிலாகட்டும், எல்லாவற்றிலும் தமிழகம் முதன்மை பெற்று இலங்கியது! உயரிய இடத்தைப் பெற்று பெருமைபெற்றது!
அதன் பிறகு தமிழகத்தை ஆள வந்தவர்கள் அவர் வழி மறந்தார்கள்! புரட்சி வழி என்று சொல்லிப் பொருந்தாதவற்றையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள்! தங்கள் வழியில் தங்களுக்குச் சாதகமாக ஒத்தூதாத அதிகாரிகளை ஓரங்கட்டினார்கள்! சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டு, ஜூனியர்கள் உயர் பதவியில் அமர்த்தப் பட்டார்கள்!
அமைச்சர்களின் ஆசாபாசங்களை உணர்ந்து, அதற்குத் துணை போகும் அதிகாரிகள் மட்டுமே பொறுப்பான பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள்! உண்மையும், நேர்மையும், கண்டிப்பும் நிறைந்த அதிகாரிகளுக்கு ‘டம்மி’ போஸ்ட்கள் வழங்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள்! பல திறமையான அதிகாரிகள் கடமையைச் செவ்வனே நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, ‘நமக்கேன் வம்பு!’ என்று ஒதுங்கவும் ஆரம்பித்தார்கள்!
கமிஷன் ஆட்சியாளர்களும், அவர்களுக்குத் துணைபோகும் உயரதிகாரிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துப் பொதுப்பணத்தைச் சுருட்ட ஆரம்பித்ததுடன், புறம் போக்கு நிலங்களையும் மனைகளாக்கி விற்றுக்கோடிகளில் புரள ஆரம்பித்தார்கள்! எல்லோரையும், எல்லாவற்றையும் பணத்தால் வாங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள்! பணிகள் அனைத்துக்கும் கமிஷன்! இதனால், பணிகளின் தரம் வெகுவாகக் குறைய, இன்றைய நிலையில் அதன் உச்ச கட்டங்கள்! திறப்பு விழாவிற்கு முன்பே விரிசல் விடும்பாலங்கள்! குடியேறும் முன்பாகவே இடிந்து விழும் வீடுகள்! இப்படி பலப்பல!
‘இதற்கெல்லாம் முடிவு எப்போது?’ என்பதுதான் சாதாரண மக்களின் மில்லியன் டாலர் கேள்வி!
தமிழ் நாட்டில் வாழும் பொதுமக்கள் கடந்த அரை நூற்றாண்டாகப் பெரிய வளர்ச்சி எதையும் சந்தித்து, உயர்ந்து விடவில்லை! ஆனால், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பொருளாதார வளர்ச்சி மட்டும் வியப்பளிப்பதாக உள்ளது! அவ்வளவு பேரும் கோடீஸ்வரர்களாகவலம் வருவதும், ஒவ்வொருவரும் பல நகரங்களிலும் வீடுகள் வைத்திருப்பதும், பள்ளி, கல்லூரிகள் நடத்திக் கோடிக் கணக்கில் பணத்தை ஒவ்வொரு ஆண்டும் பார்த்து வருவதும் கண்கூடு! இவ்வளவு சொத்துக்களை அவர்கள் நேர்மையான வழிகளில் நிச்சயமாகச் சேர்த்திருக்க வாய்ப்பேயில்லை என்பது அனைவரும் அறிந்ததே!
இதில், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றுள்ளது! ஐந்தாண்டுகள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும், தேர்தல் என்று வரும்போது அரசியல்வாதிகள் மக்களின் கால்களில் விழாத குறையாக ஓட்டுக்காகத் தவங்கிடக்கிறார்கள்! ஆனால், இந்த நிலை அதிகாரிகளுக்கு இல்லை! ஒரு முறை அவர்கள் பதவிக்கு வந்துவிட்டால், மேலதிகாரிகளை உரிய முறையில் பார்த்துக் கொண்டால் மட்டுமே போதுமானது! எல்லாப் பதவி உயர்வுகளையும் பெற்று, பணிச் சுகத்தை முழுமையாக அனுபவிக்கிறார்கள்! அவர்கள் வாங்குகின்ற சம்பளங்களும், அனுபவிக்கும் சொகுசுகளும் பொது மக்கள் வரிப் பணத்திலிருந்துதான் என்பதை அவர்கள் உணர்ந்தாலே போதுமானது!
சரி! இதற்கு என்னதான் தீர்வு? எவ்வளவோ இருக்கிறது!ஆனால், அதிகாரத்திலிருப்போர் அவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும்!
- ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசியல்வாதிகளின் அனைத்துச் சொத்துக்களும் கணக்கிடப்பட்டு, வருமானத்திற்கு மேல் சேர்த்த சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்! ஆறு மாத காலத்திற்குள் இது செய்து முடிக்கப்பட வேண்டும்!
- தனியார் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்!
- அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகள், ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்! விபரீதக் குற்றம் இழைப்போர், ஆயுள் முழுமைக்கும் அரசியலிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்!
- அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது நிரூபிக்கப்பட்டால், அவர்களைப் பணியிலிருந்தே நீக்கி விட வேண்டும்!
- லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்! அந்தமானுக்கு அனுப்பலாம்!
மேற்கண்டவை பின்பற்றப்பட்டால்தான் தமிழகம் உருப்படும்! இல்லையெனில்...