ஜனவரி 25: தேசிய வாக்காளர் நாள் - ‘வாக்களிப்பது சிறந்தது; நிச்சயம் வாக்களிப்போம்’!

ஜனவரி 25: தேசிய வாக்காளர் நாள்
ஜனவரி 25: தேசிய வாக்காளர் நாள்
Published on

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் நாளன்று ‘தேசிய வாக்காளர் நாள்’ (National Voters' Day) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு, ஜனவரியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, தேசிய வாக்காளர் நாள் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாக இருக்கிறது.

தேர்தல் என்பது பொதுவாக, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்தியக் குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.

வாக்காளர் அடையாள அட்டையினைப் பெற்றிட, 18 வயது நிறைவடைந்த அனைத்து இந்தியக் குடிமக்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் படிவம்-6 மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெற உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பிக்கலாம். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்று, அதன் வழியாகவும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம். 18 வயதிற்கு மேற்பட்ட மன நோயாளிகள் மற்றும் வாங்கிய கடனைத் தீர்க்கப் பொருளற்று, திவாலா நிலை (Bankruptcy) அடைந்தவர்கள், வாக்காளர் அடையாள அட்டை பெறத் தகுதியற்றவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
'மக்கட் பணி மகேசன் பணி' - அப்படியா?
ஜனவரி 25: தேசிய வாக்காளர் நாள்

தேர்தல்களில் வாக்கு அளிப்பதற்கும், கடவுச்சீட்டு, அலைபேசி இணைப்பு போன்றவைகளைப் பெறுவதற்கும், வாக்காளர் அடையாள அட்டையை ஒரு அரசு ஆவணமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனில் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்க இயலாது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை தேர்தலுக்கு முன்பே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை எனில் வாக்காளர் அடையாள அட்டையுடன், உரிய அரசு அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டுகோள் மனு அளிக்க வேண்டும்.

தற்போது வாக்காளர் அட்டையுடன், ஆதார் அடையாள அட்டையின் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

வாக்களிப்பது என்பது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கிறது. வாக்களிப்பதன் வழியாக, மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. நாட்டை வடிவமைப்பதில் இந்தியா முழுவதுமுள்ள மக்களின் பங்களிப்பு இருக்கிறது. வாக்களிப்பது என்பது தேர்தல்களின் போது, தனிநபர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் உரிமையை அளிக்கிறது.

இந்தியாவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அல்லது காகித வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இது வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்கிறது.

இதையும் படியுங்கள்:
சுதந்திர இந்தியாவின் பெருமைமிக்க வாக்காளர் யார் தெரியுமா?
ஜனவரி 25: தேசிய வாக்காளர் நாள்

வாக்களிப்பதன் வழியாகக் கீழ்க்காணும் மூன்று முக்கியச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

1. ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் - குடிமக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களுக்குப் பொறுப்புக் கூறவும் அதிகாரம் அளிக்கிறது.

2. எதிர்காலத்தை வடிவமைத்தல் - தேர்தல் மூலம் எடுக்கப்படும் முடிவுகள் நாட்டின் கொள்கைகள் மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.

3. உள்ளடக்கிய ஆட்சி - வாக்களிப்பது பல்வேறு பிரதிநிதித்துவத்தையும் அனைத்துச் சமூகங்களின் பங்களிப்புகளையும் உறுதி செய்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் நாளுக்கான கருத்துரு ஒன்று உருவாக்கப்பெற்று, அதன் வழியாக பல்வேறு செயல்பாடுகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான கருத்துருவாக, ‘வாக்களிப்பது சிறந்தது; நிச்சயம் வாக்களிப்போம்’ எனும் கருத்துரு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வாக்களிப்பது நம் கடமை என்று உறுதியேற்போம்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com