சூரியன் உலகின் முக்கிய ஆற்றல் மூலமாக உள்ளது. சூரியனின் இந்த ஆற்றல், மரபு சாரா எரிசக்தியாக மட்டும் பயன்படுவது அல்லாமல் மருத்துவ துறையிலும் பயன்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் உதவும் 'வைட்டமின் டி'யை உற்பத்தி செய்ய சூரிய ஒளி உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அது எலும்புகளை வலுவாக்குவதில் தொடங்கி, வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவது, புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பது மற்றும் இதய தசைகள் வீங்குவதை தடுப்பது என்று பல வழிகளில் உதவுகிறது.
ஆனால், சூரிய ஒளியின் வெளிப்பாடு, மனநிலையை ஒழுங்குபடுத்தும் மற்றும் நல்வாழ்வு உணர்வுகளை ஊக்குவிக்கும் செரோடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இது மூளையில் ஹார்மோன்களின் வெளியீட்டைத் தூண்டி, தூக்கத்தை சீராக்க உதவுகிறது. தொழு நோயைக் குணப்படுத்துவதற்கும், சூரியனின் வெப்ப கதிர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
தற்கொலை தொடர்பாக ஆஸ்திரியா நாட்டில் ஒரு ஆய்வு நடைபெற்றது. அதில் தற்கொலைக்கும் சூரிய ஒளிக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. சூரிய ஒளியானது மூளையில் உள்ள செரோடோனின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் மூலம் செரோடோனின் ஆண்களுக்குள் எழும் மனநிலை, திடீர் உணர்ச்சிக்கு ஆளாகும் இயல்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இவையொல்லாம் தற்கொலைக்கான காரணிகள். இதனால் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
எனவே தினமும் உடலில் சூரிய ஒளி படுமாறு செயல்பட்டால், அதனால் தற்கொலை எண்ணம் குறையும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மழை காலத்தில் பலருக்கு மனச் சோர்வு, தனிமை, ஊக்கமில்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது பலருக்கு குற்ற உணர்வை தோற்றுவித்து அதனால் தற்கொலை எண்ணம் கூட தோன்றும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
இதனால் மழை காலங்களில் கொஞ்ச தூரம் வெயிலில் நடந்து வந்தால் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்கிறார்கள். சூரிய ஒளி சிறிது நேரம் பட்டால் கூட மகிழ்வோடு இருக்கக் கூடிய மனநிலை நமக்கு வந்து விடுகிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
இதற்கு மழை, குளிர் காலங்களின் போது நமது மூளையில் உள்ள பீனியல் கிளாண்ட் (Pineal Gland) என்ற சுரப்பிக்கு போதுமான அளவு சூரிய வெப்பம் கிடைப்பது இல்லை என்பது தான் காரணம். இதனால் உடலில் இராசயன மாற்றம் பாதிக்கப்பட்டு மனநிலையில் ஒரு விதமான துயர அலை ஏற்பட்டு விடுகிறது என்கிறார்கள். சூரிய ஒளி இல்லை என்றால் வீட்டிலுள்ள 100 வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில் சிறிது நேரம் நின்றால் கூட போதும் மனநிலை மகிழ்ச்சிகரமான நிலைக்கு மாறிவிடும் என்கிறார்கள்.
போதுமான அளவு சூரிய ஒளியைப் பெறுவது மனநிலைக் கோளாறுகளை எதிர்த்துப் போராட உதவும். பருவகால பாதிப்புக் கோளாரான SAD என்பது ஒரு வகையான மனச்சோர்வு ஆகும். இது பொதுவாக இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும் போது ஏற்படும்.
சூரிய ஒளியின் பற்றாக்குறை மூளையின் ஹைபோதாலமஸ் செயல்படும் விதத்தை பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. போதுமான சூரிய ஒளி பெறாதது செரோடோனின் அளவைக் குறைக்கலாம். இது மனச்சோர்வுக்கு பங்களிக்கும். எனவே அதிக சூரிய ஒளியைப் பெறுவது உங்கள் செரோடோனின் அளவையும் உங்கள் மனநிலையையும் அதிகரிக்கும்.
தெளிவான கலங்கல் இல்லாத குடிநீரை பெட் (PET) பாட்டில்களில் நிரப்பி சூரிய ஒளியில் குறைந்த பட்சம் 6 மணி நேரம் வைத்து பின் உபயோகித்தால் நீரில் எந்த விதமான கிருமியும் தங்காது என்கிறார்கள் சுவிட்சர்லாந்து எஸ்வாக் சாண்டக் நிறுவன விஞ்ஞானிகள்.
எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை செய்வது தீர்வாகாது. பிரச்சினை என்று ஒன்று இருந்தால், அதற்கான தீர்வும் நிச்சயமாக இருக்கும். தற்கொலை எண்ணம் தோன்றினால் பின்வரும் எண்களில் ஏதேனும் ஒன்றை அழைப்பதன் மூலம் உதவி மற்றும் ஆலோசனை பெறலாம்.
அகில இந்திய GOVT MH மறுவாழ்வு ஹெல்ப்லைன் - 1800-5990019
அகில இந்திய வந்தரேவாலா அறக்கட்டளை 9999 666 555
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-2464 0050