செப்டம்பர் 5: பன்னாட்டுத் தொண்டு நாள் (International Day of Charity) அன்னை தெரசா நினைவு நாள்!

International Day of Charity
International Day of Charity
Published on

ஐக்கிய நாடுகளின் அவை, உலகளவில் தொண்டு மற்றும் இரக்கத்தை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் செப்டம்பர் 5 ஆம் நாளை ‘பன்னாட்டுத் தொண்டு நாள்’ (International Day of Charity) என்று அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.  

1979 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா அவர்களின் கருணை, வறுமையை எதிர்த்துப் போராடும் அயராத முயற்சிகளை முன்னுதாரணமாகக் கொண்டு, அன்னை தெரசாவின் நினைவு நாளையே “பன்னாட்டுத் தொண்டு நாள்” என்று ஐக்கிய நாடுகள் அவை 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களை கருணை மற்றும் இரக்கச் செயல்களில் ஈடுபட இந்நாள் ஊக்குவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதன் வழியாக, இயலாத நிலையிலிருக்கும் அனைவருக்கும் உதவும் நோக்கத்துடன் தொண்டு செய்வது குறித்து உலகெங்கிலும் பல நிகழ்வுகள், முன்முயற்சிகள் மற்றும் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும், தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றன. மிகவும் இரக்கமுள்ள மற்றும் பச்சாதாபமுள்ள உலகத்தை வடிவமைப்பதற்கு இரக்கம், பெருந்தன்மை மற்றும் ஒற்றுமை ஆகியவை தேவையாக இருக்கின்றன என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது. 

தொண்டுகளுக்கான இச்சிறப்பு நாளில், அல்பேனியா நாட்டில் பிறந்து, இந்தியாவிற்குக் கிறித்தவ சமய ஆன்மிகப் பணி செய்திட வந்து, இந்தியாவில் குடியுரிமை பெற்று, தனது சமூக சேவைகளின் வழியாக, உலகம் முழுவதும் நற்பெயர் பெற்று வாழ்ந்து மறைந்த, ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியான அன்னை தெரசா அவர்களை நினைவில் கொள்வதுடன் அவரைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். 

ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இயற்பெயர் கொண்ட இவர், 1950 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் சபை (Missionaries of Charity) என்ற கத்தோலிக்கத் துறவறச் சபையினை நிறுவி, நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றினார். கொல்கத்தாவைத் தொடந்து இந்தியா முழுவதும், இவ்வமைப்பை விரிவுபடுத்திய இவர், பின்னர் அயல்நாடுகளுக்கும் இந்த அமைப்பைக் கொண்டு சென்றார். 

அன்னை தெரசாவின் இச்சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவையும் அடங்கும்.  

இந்த அமைப்பின் வழியாகச் செய்த சேவைகள், இவருக்கு 20 ஆண்டுகளுக்குள்ளாகவேச் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரால் உருவாக்கப்பட்ட ‘கடவுளுக்கு அழகான ஒன்று’ (Something Beautiful for God) என்ற ஆவணப்படம் அன்னை தெரசாவை உலகம் முழுவதும் அறியச் செய்ததில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதையும் படியுங்கள்:
'The Indian Institute Of Science' உருவானது எப்படி தெரியுமா?
International Day of Charity

இவரது சமூகச் சேவையினைப் பாராட்டிப் பல்வேறு அமைப்புகளால் பல விருதுகள் இவருக்கு வழங்கப் பெற்றிருக்கின்றன. அவற்றுள் 1979 ஆண்டில் வழங்கப் பெற்ற ‘அமைதிக்கான நோபல் பரிசு’, 1980 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப் பெற்ற சிறந்த குடிமக்கள் விருதான ‘பாரத ரத்னா விருது’, 1982 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அரசால் வழங்கப் பெற்ற ‘கௌரவத் தோழர் விருது’, 1983 ஆம் ஆண்டில்  இங்கிலாந்து அரசால் வழங்கப்பெற்ற ‘ஆர்டர் அப் மெரிட் விருது’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

அல்பேனியாவில் பிறந்த இவருக்கு, இந்தியா மட்டுமின்றி ஓட்டோமா, செர்பியா, பல்கேரியா, யுகோஸ்லேவியா நாடுகளும் குடியுரிமை அளித்துச் சிறப்பித்தன. 1996 ஆம் ஆண்டில் அமெரிக்கா, இவருக்குச் சிறப்புக் குடியுரிமை வழங்கிச் சிறப்பித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் கிறித்தவ சமய ஆன்மிகப் பணியாற்ற வந்த இவர், தனது அளவற்ற சமூக சேவைகளால், உலகம் முழுவதும் போற்றும் அருளாளரானர். இவரது சமூகப் பணிகளோடு இணைந்த ஆன்மிகப் பணிகளைப் போற்றும் வகையில், இவரது மறைவுக்குப் பின்பு இவருக்கு முக்திப்பேறு நிலை (அருளாளர் மற்றும் புனிதர்) அளிக்கும் முயற்சிகள் தொடங்கப் பெற்றன. இவரது பல அற்புதச் செயல்களை அங்கீகரித்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று இவருக்கு அருளாளர் எனும் நிலையினை அளித்துச் சிறப்பித்தார். 

இதையும் படியுங்கள்:
இயற்கை தந்த சுகாதாரப் பணியாளர்கள்! யார் இவர்கள்?
International Day of Charity

அதன் பிறகு, திருத்தந்தை பிரான்சிஸ் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று அவரது அருட்பணிகள் அனைத்தும் ஏற்புடையது என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று இவருக்குக் கிறித்தவ சமயத்தின் உயர்வும், மதிப்பும் மிக்க ‘புனிதர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com