

குஜராத் மாநிலம், கரம்சாத் என்ற ஊரில், 1875 அக்டோபர் 31ம் நாளில் பிறந்தவர் வல்லபாய் படேல். பால்ய வயதிலிருந்தே இவர் கொண்டிருந்த நல்ல உடலுறுதிக்குக் காரணம், அவருடைய தந்தையார்தான். ஆமாம், தினமும் 20 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த சுவாமி நாராயணன் கோயிலுக்கு மகனை நடத்தி அழைத்துச் செல்வார். அங்கே பிரார்த்தனை முடிந்ததும் வீடு திரும்ப, மீண்டும் 20 கி.மீ. நடை! அந்த நடைப்பயிற்சி, பட்டேலின் உடலை கட்டுக்கோப்பாகவும், வலிமையாகவும் உருவாக்கியது. அதோடு, கோயிலில் அவர் மேற்கொண்ட உள்ளார்ந்த பிரார்த்தனையால் மனமும் தீர்க்கமடைந்தது.
பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்ட படேல், தன்னுடைய 22வது வயதில் மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சியுற்று, அடுத்து இங்கிலாந்தில் வழக்குரைஞர் படிப்பையும் முடித்தார். ஆஜானுபாகு தோற்றம், எதிரே நிற்பவரின் உள்ளத்தை ஊடுருவும் கூரிய பார்வை, கணீரென்ற குரல் இவற்றாலேயே, இவரால் மிகச் சிறந்த வழக்குரைஞராக விளங்க முடிந்தது.
இவருடைய மனவுறுதி அசாத்தியமானது. இவர் பம்பாய் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்காக வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய உதவியாளர் ஒரு சீட்டைக் கொடுத்தார். அதைப் பார்த்துவிட்டு, பிறகு கோட்டுப் பையில் போட்டுக் கொண்ட படேல் குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தார். சில நிமிடங்களில் அந்த வழக்கில் அவர் தனது கட்சிக்காரருக்கு சாதகமாகத் தீர்ப்பையும் வாங்கிக் கொடுத்தார். நீதிமன்றத்தில் அனைவருக்கும் அந்தச் சீட்டில் என்ன எழுதியிருந்தது என்று தெரிந்து கொள்ள பேரார்வம். அவர்களிடம் படேல், ‘மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த எனது மனைவி இறந்து விட்டாளாம்‘ என்று சீட்டிலிருந்த விவரத்தை கணீரென்று சொன்னார் அவர்!
தேச விடுதலைக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்டார். முக்கியமாக ஒரு கோயிலின் விடுதலை! குஜராத்திலுள்ள சோம்நாத் கோயிலை கஜனி முகமது முதல் அவுரங்கசீப் வரை, ஆறு முறை சூறையாடினார்கள். ஓவ்வொரு முறையும் அந்தப் பகுதி மக்கள் மற்றும் மன்னர்களின் அரிய முயற்சியால் மீண்டும் மீண்டும் சோமநாதர் கோயில் புனரமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கோயில் அமைந்திருந்த பகுதியை பாகிஸ்தானுடன் சேர்க்க சிலர் முயன்றார்கள். படேல் அதைத் தீவிரமாக எதிர்த்து, இந்தியப் பகுதியாகவே அதை நிலைநிறுத்தினார்.
வெகுவாக சிதிலமடைந்திருந்த அந்த சோமநாதர் ஆலயத்தை புதிதாக நிர்மாணிக்க முயற்சிகள் மேற்கொண்டார். ஓர் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் புனரமைக்கப்பட்ட இந்தக் கோயில் நிர்மாணம் முழுமையாக நிறைவடைந்தபோது (1995) அதைக் காணும் பேறு கிட்டாமல், 1950, டிசம்பர் 15லேயே அவர் விண்ணுலகம் சென்று விட்டார்.
பர்டோலி என்ற பகுதியில் ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட பிரச்னைக்கு விவசாயிகளுக்குத் தலைமையேற்று போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். இதனாலேயே மக்கள் அவரை ‘சர்தார்‘ (தலைவர்) என்று அழைத்தார்கள். இந்த சம்பவம் தவிர, வேறு பல எதிர்ப்பு நிகழ்ச்சிகளால் பலமுறை சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ஒரு சமயம் மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள எரவாடா மத்திய சிறையில் காந்திஜியுடன் அடைக்கப்பட்டபோதுதான் இருவருக்குமிடையே நட்பு மலர்ந்தது.
சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய், விவசாயிகளின் ஆன்மா என்றெல்லாம் போற்றப்பட்ட படேலின் மனசுக்குள் ‘ஒன்றாயிணைந்த அகண்ட பாரதம்‘ என்ற ஏக்கம் நிறைந்திருந்தது. இதனாலேயே, சுதந்திர இந்தியாவில் முதல் உள்துறை அமைச்சராகவும், பிறகு துணை பிரதமராகவும் பதவியேற்ற இவர், தனித்தனியே பிரிந்து கிடந்த 565 சமஸ்தானங்களை வழிக்குக் கொண்டு வந்தார். சில இடங்களின் மென்மையான கோரிக்கை போதவில்லை; அதனால் அதிகாரக் கடுமையைக் காட்ட வேண்டியிருந்தது. இந்த ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்க முனைந்த தேச துரோகிகள் பலரை, இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார் படேல்.
அந்த இரும்பு மனிதரின் திட சிந்தனை, உயரிய நோக்கம், தேசியத்தைக் கொண்டாடிய நற்பண்பு எல்லாம், பாரதத்தின் அனைத்து மக்களின் உள்ளத்திலும் பதிய வேண்டும் என்பதற்காகவே குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 12 சதுர கி.மீ. பரப்பளவுள்ள ஏரியில் 182 மீட்டர் உயரமுள்ள ‘ஒற்றுமைக்கான (சர்தார் வல்லபாய் படேல்) சிலை‘ நிறுவப்பட்டு, 2018, அக்டோபர் 31 அன்று திறந்து வைக்கப்பட்டது.
