

தற்போது இளைஞர்களிடம் பேங்க் பாஸ் புக் இருக்கிறதோ இல்லையோ, அவசியம் பேஸ் புக் அக்கவுண்ட் உள்ளது. இளைஞர்கள் மட்டுமல்ல, முதியோர் வரை பேஸ் புக் அக்கவுண்ட் வைத்துள்ளனர். உலகில் பல கோடி மக்களை கட்டிப் போட்டிருக்கும் பேஸ் புக் எப்படி உருவானது என்பது தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பேஸ் புக் என்பது ஒரு சமூக வலைப்பின்னல் தளமாகும். இது ஆன்லைனில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைவதையும் பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்குகிறது. பேஸ் புக் என்பதை தமிழில், ‘முகநூல்’ என்கிறார்கள். முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் மார்க் சூக்கர் பெர்க் என்பவர்தான் பேஸ் புக்கை கண்டுபிடித்த பிதாமகன். இவர் கல்லூரியில் பயின்றபோது ஒரு பெண்ணை காதலித்தார். என்ன பிரச்னையோ... அவர்களது காதல் பிரேக் அப்பாகி மார்க்கை விட்டு இந்தப் பெண் விலகிச் சென்றார். பிரிந்த காதலியின் நினைவுகளில் இருந்து மீள்வதற்கு மார்க் மிகவும் சிரமப்பட்டு வந்தார். அப்போது ஒரு ஐடியா அவர் மனதில் தோன்றியது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகம் கொடுக்கப்படும். அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ‘பேஸ் புக்’ என்று அழைப்பார்கள். ‘பேசாமல் இந்த மாணவர், ஆசிரியர் உபரி மாற்றங்களை ஏன் இணையதளத்தில் உருவாக்கக் கூடாது’ என்று யோசித்தார், உடனே களத்தில் இறங்கினார்.
முதல் முறையாக 2003ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி பேஸ் மாஸ் (face mash) என்ற ஒன்றை உருவாக்கினார். இதில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் சக மாணவர்களை உறுப்பினராக்கினார். அவர்களின் படங்களையும் பயன்படுத்தினார். இதனால் பெரிய சர்ச்சை உருவெடுத்தது. அதனால் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் 2004ம் ஆண்டு ஜனவரியில் ‘தி பேஸ் புக் (the face book)’ என்று ஒன்றை உருவாக்கினார். இதனால் அவரின் ஹார்வர்டு பல்கலைக்கழக சீனியர் மாணவர்கள் இது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் திருடியது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே தன்னுடன் படித்த எட்வர்டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ் மற்றும் கிறிஸ் ஹியூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு 2005ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பேஸ் புக் என்ற இணையதளத்தை உருவாக்கினார். இதற்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற கல்லூரி மாணவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டார். பிக்கப் ஆகியது.
அதன் பின்னர் 13 வயது நிரம்பிய பள்ளி மாணவர்களும் பேஸ் புக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதிலிருந்து பேஸ் புக்கில் பல்வேறு நபர்களும் உறுப்பினராக சேர்ந்தனர். அது ஒரு காலகட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
2009ம் ஆண்டுகளுக்கு பிறகுதான் ‘பேஸ் புக்’ ஒரு லாபம் கிடைக்கும் நிறுவனமாக தன்னை அறிவித்தது. பின்னர் உலகப் புகழ் பெற்ற மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் கூட பல கோடிகள் பேஸ் புக் நிறுவனத்தில் முதலீடு செய்தது. இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த சட்டப்படி, இந்தியாவில், 18 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைத்தளத்தில் உறுப்பினராக முடியாது என்பதால் 18 வயதுக்கு மேல்தான் முகநூல் பக்கத்தில் இணைய முடியும்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பேஸ் புக் நிறுவன தலைமையிடம் உள்ளது. பேஸ் புக்கில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 கோடி புகைப்படங்கள் ‘அப்லோடு’ செய்யப்படுகின்றன. உலகின் அனைத்து நாடுகளிலும் வரவேற்பைப் பெற்ற உலகின் முதன்மையான வலைதளம் பேஸ் புக்.