ஆண்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்
Social pressures faced by men
Social pressures faced by men
Published on

பெண்களைப் போலவே ஆண்களும் பல்வேறு சமூக அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள். அவை என்ன என்பது பற்றியும் அவற்றை கையாளும் வழிமுறைகள் பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள்:

சமூக எதிர்பார்ப்புகள்: பொதுவாக, ஆண்கள் என்றாலே அவர்கள் வலிமையானவர்களாகவும் துணிச்சலானவர்களாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. இதனால் அவர்கள் பிறர் உதவியை நாடுவதையும், தங்களது உண்மையான இயல்பை வெளிப்படுத்துவதற்கும் தயங்குகிறார்கள்.

குடும்பத்தின் தலைவனாக ஆண்கள் கருதப்படுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளையும் பிற குடும்பத் தேவைகளையும் கவனிக்கத் தேவையான பொருளை ஈட்டுவதில் ஆண்கள் பிரதான பங்கு வகிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. இதனால் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு தாங்கள் வேலைக்குச் சென்று ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை அது உருவாக்குகிறது. சரியான வேலை அமையாமல் போனாலும் அல்லது எதிர்பார்க்கும் ஊதியம் கிடைக்காமல் போகும்போதும் மன அழுத்தம், கவலை போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். சில சமயம் பிடிக்காத வேலையில் கூட, நீடித்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

உடல் தோற்றம்: திருமணத்திற்கு தயாராகும் ஆண்களின் உடல் தோற்றத்தில் அதிக கவனம் தரப்பட வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போகும்போது ஒரு ஆண் மகன் சுயமரியாதை பாதிக்கப்படுவதாக உணர்கிறார்.

போதாமை உணர்வு: மாணவனாக மற்றும் தொழில் வல்லுநராக, செய்யும் வேலையில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. அதில் ஏதாவது குறை அல்லது சரியாக நிவர்த்தி செய்யாமல் போகும்போது போதாமை உணர்வை வளர்க்கிறது. ஒரு தந்தையாக, அண்ணனாக அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்கிற குடும்பத்தினரின் எதிர்பார்ப்பும் அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

சமூகம் தரும் அழுத்தம்: சகாக்களின் அழுத்தம், சமூக வட்டங்கள், போதைப்பொருள் பயன்பாடு அல்லது ஆக்கிரமிப்பு நடத்தை உள்ளிட்ட ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட ஆண்களுக்கு தூண்டுதல்கள் தரப்படுகின்றன. போட்டி, தொழில்முறை மற்றும் சமூக அமைப்புகளில் அந்தஸ்து அல்லது அங்கீகாரத்திற்காக போட்டியிடும் அழுத்தத்தை ஆண்கள் எதிர்கொள்கிறார்கள். இதனால் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். ஆண்கள் பொதுவாக தங்களுடைய மன வருத்தங்களை வெளிப்படையாகச் சொல்வதில்லை. மேலும், ஆண்கள் அழக்கூடாது என்கிற தவறான கருத்தும் சமூகத்தில் நிலவுவதால் தங்களுடைய கவலைகள், சோகங்கள், பிரச்னைகள் போன்றவற்றை மனதிற்குள்ளேயே போட்டு அழுத்தி வைத்து மனநல சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.

சமூக அழுத்தங்களை எதிர்கொள்ளும் வழிகள்:

உணர்ச்சி விழிப்புணர்வு: தாங்கள் அழுவது பலவீனம், பிரச்னைகளை வெளியே சொல்வது பலவீனம் என்று நினைப்பதை விட, அது உடலுக்கும் மனதிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது ஆதரவு தரும் மனிதர்களுடன் தங்களுடைய சோகங்களை பகிர்ந்து கொள்ளலாம். தனிமை மற்றும் அழுத்தத்தின் உணர்வுகளை சமாளிக்கும் திறன்களை இது தருகிறது.

இதையும் படியுங்கள்:
ஆண்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் 10 வாழ்க்கை முறைகள்!
Social pressures faced by men

சுய இரக்கம்: ஒவ்வொருவருக்கும் சுய இரக்கம் வேண்டும். தன் மீதே இரக்கமும், கருணையும் கொண்டு தன்னை நோக்க வேண்டும். பிறருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தான் நடந்து கொள்வது அவசியம் இல்லை என்ற உண்மையை ஆண்கள் புரிந்து கொண்டு, கருணை, பச்சாதாபம், ஒத்துழைப்பு போன்ற ஆண்மையுடன் தொடர்புடைய நேர்மறையான பண்புகளை தழுவி நடந்துகொள்ள வேண்டும்.

தனிப்பட்ட திருப்தி: சமூக எதிர்பார்ப்புகளை விட. தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் ஆர்வங்களில் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட திருப்தியின் அடிப்படையில் இலக்குகளை அமைப்பது வெளிப்புற அழுத்தங்களிலிருந்து தன்னை காத்துக் கொள்ளவும் கவனத்தை மாற்றவும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com