

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த சுந்தரமய்யர் - அழகம்மாள் இணையருக்கு முதல் மகன் நாகசுவாமிக்கு அடுத்து, இரண்டாவது மகனாக, 1879 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாளன்று வெங்கட்ராமன் பிறந்தார். மூன்றாவதாக, நாகசுந்தரம் என்பவர் பிறந்தார். வழக்கறிஞராகப் பணியாற்றிய சுந்தரமய்யர், தன் மூன்று பிள்ளைகளில் ஒருவர் பிச்சை எடுக்கப் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதற்கும் ஒரு காரணமிருந்தது.
சுந்தரமய்யரின் முன்னோர், முன்பொரு சமயம் ஒரு துறவிக்குப் பிச்சை இல்லை என்று கூறி, அவரை வாயில் வந்தபடி திட்டி அவமானப்படுத்தி அனுப்பினர். அதனால் கோபமடைந்த அந்தத் துறவி, சுந்தரமய்யரின் முன்னோரைப் பார்த்து, “என்னைப் பார்த்துப் பிச்சைக்காரன் என்று கேலி செய்யும் உனது பரம்பரையில் ஒருவன் பிச்சைக்காரனாகி, தெருத்தெருவாக சோற்றுக்கும், துணிக்கும் அலைந்து கொண்டிருப்பான்!” என்று சாபமிட்டுச் சென்றார்.
அதன் பிறகு, அந்த முன்னோரின் வழியில் வந்த ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் பிச்சைக்காரராக அலைந்தனர் என்பதால், அந்தச் சாபத்தின் வழியில் தன் குடும்பத்தில், தன் மூன்று மகன்களில் எவராவது துறவியாகச் சென்று பிச்சையெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற கவலை சுந்தரமய்யரிடம் இருந்து கொண்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், 1895ஆம் ஆண்டில் சுந்தரமய்யர் திடீரென்று காலமானார். அதன் பின்னர் நாகசுவாமி மற்றும் வெங்கட்ராமன் என்று இருவரும் மதுரையிலிருந்த சுந்தரமய்யரின் தம்பி சுப்பையரின் வீட்டில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்தனர். இருவரும் படிப்பில் சிறப்புடன் இருந்தனர். நாகசுவாமி மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் படிப்பில் அதிகக் கவனம் கொண்டிருந்தனர். அவர்களிருவரிடமும், அதிகமான இறை பக்தியோ அல்லது துறவு செல்லும் மனமோ சிறிது கூட இல்லாமலிருந்தது. அதனால், அவர்களது முன்னோர்களுக்குத் துறவி வழங்கிய சாபம் முடிவுக்கு வந்துவிடும் என்று அவர்களது உறவினர்கள் நிம்மதியடைந்தனர்.
ஒருமுறை அவர்களது உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்தார். அவர் வழியாகத் திருவண்ணாமலை பற்றித் தெரிந்து கொண்ட வெங்கட்ராமன், இறையடியார்கள் மீதும், இறைவனைப் பற்றி அறிதலிலும் ஆர்வம் கொண்டார். பெரியபுராணம் உள்ளிட்ட பல பக்தி நூல்களைப் படிக்கத் தொடங்கினார்.
நாள்தோறும் மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக்கி கொண்டார். அதனைக் கண்ட சுப்பையர் குடும்பத்தினர் வெங்கட்ராமன், தமது முன்னோர் பெற்ற சாபத்தின்படி துறவு மேற்கொண்டுவிடுவானோ என்று அச்சம் கொள்ளத் தொடங்கினர்.
இந்நிலையில், உறவினர் ஒருவர் இறப்புக்குக் குடும்பத்தினருடன் சென்ற பதினாறு வயதே ஆகியிருந்த வெங்கட்ராமனின் மனதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மரணிப்பது எது? உடல் மரணிப்பது ஏன்? என்ற கேள்விகள் அவருக்குள் எழும்பியது. நான் மரணிப்பவன் அல்ல, அப்படியானால், நான் யார்? என விசாரித்து, நான் என்பது என் உடலில்லை, ஆன்மாவில் இருக்கிறது. அந்த ஆன்மாவை அறியும் நோக்கத்துடன், 1896ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 26ஆம் நாளன்று, வீட்டில் எவரிடமும் தெரிவிக்காமல், ஒரு கடிதத்தை அண்ணனுக்கு எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறித் திருவண்ணாமலைக்குச் சென்றார்.
திருவண்ணாமலைக்குச் சென்று, அங்கிருந்த கோயிலில் இறைவனை வணங்கினார். அவருக்குள்ளிருந்த மண், பெண், பொன்னாசை அனைத்தும் மாயை என்பதை உணர்ந்தார். அம்மூன்றையும் ஒழித்து, ஞானம் பெறுவது என்று முடிவு செய்து கோயிலை விட்டு வெளியில் வந்தார். தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, அதிலிருந்து சிறிய துண்டாகக் கிழித்துக் கோவணம் கட்டிக் கொண்டார்.
கிழிந்த வேட்டியையும், சட்டையையும் அங்கிருந்த குளத்தில் வீசியெறிந்தார். தலை முடியை மொட்டையடித்துக் கொண்டார். கோயிலுக்குள் சென்று, அங்கிருந்த பாதாள அறைக்குள் சென்று, ஒரு இடத்தைத் தேர்வு செய்து அவ்விடத்தில் தியானம் செய்யத் தொடங்கினார்.
பாதாள அறைக்குள் இளம் வயதில் தியானித்துக் கொண்டிருந்த அவரைப் பார்த்த சிலர், அவரைப் பாலயோகி என்று அழைத்தனர். சிலர் அவரைக் கேலி பேசினர். ஆனால், அவர் எதையும் கண்டுகொள்ளாமல் தியானத்திலேயே அமர்ந்திருந்தார். அந்தப் பாதாள அறையிலிருந்த பூச்சிகள் அவரைக் கடித்துக் கொண்டிருந்ததையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரது தியானம் தொடர்ந்தது. அதனைக் கண்ட அங்கிருந்த சிலர், அவரை அங்கிருந்து வெளியே தூக்கிக் கொண்டு கோபுர சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குக் கொண்டு வந்தனர். அங்கிருந்த மௌனசாமி என்பவர் அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளித்து அவரைக் குணப்படுத்தினர். இருவருக்குமிடையில் நட்பு ஏற்பட்டது.
இந்நிலையில் குன்றக்குடி மடத்தைச் சார்ந்த மடாதிபதி அண்ணாமலைத் தம்பிரான் என்பவர் கீழாநத்தூர் பூந்தோட்டம் ஒன்றில் தங்கி தம்முடைய இறை வழிபாடுகளை நடத்தி வந்தார். அவர் திருவண்ணாமலை வழிபாட்டுக்கு வந்த போது, மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்த பாலயோகியான வெங்கட்ராமன் மீது கவனம் செலுத்தினார். அவர், பாலயோகி வெங்கட்ராமனிடம் தனது இடத்திற்கு வந்து தியானம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். வெங்கட்ராமனும் அதனை ஏற்றுக் கொண்டு, அங்கு சென்று தியானத்தைத் தொடர்ந்தார்.
தொடக்கத்தில் அவரது செயல்பாட்டைக் கேலி செய்தவர்கள், அவருடைய கடுமையான தியானத்தைக் கண்டு போற்றினர். அவருடைய பார்வை கிடைக்கப் பெற்றவர்களுக்கு நன்மை கிடைத்தது. அவர்கள் வேண்டியது நடந்தது. அவரைத் தெய்வமாக மதிக்கத் தொடங்கினர். அவரைத் தேடி வரும் கூட்டமும் அதிகரித்தது. அங்கு வந்தவர்கள் அனைவரது வேண்டுதல்களும் நிறைவேறியதால், அவருடைய புகழ் பரவியது.
பால சந்நியாசியைப் பார்க்க வரும் படித்த கல்விமான்கள் அவர் மீது சில அற்புதங்களை எழுதினார்கள். வேறு சிலர் சுவாமி மீது பாடல்களைப் பாடினர். அவை சிறு சிறு புத்தகங்களாகவும் வெளி வந்து கொண்டிருந்தன. செல்வந்தர்கள் அவருக்குரிய நிதியை உருவாக்கினார்கள். பால துறவியான வெங்கட்ராமனைப் பற்றிக் கவிஞர்கள் எழுதும் போற்றிப் பாடல்களும், கல்விமான்கள் கற்பிக்கும் அருட்சம்பவங்களும், அண்ணாமலைத் தம்பிரான் செய்யும் பாலாபிஷேக, தூப தீபங்களும் ரமணருக்கு மன அதிருப்தியை உண்டாக்கியது. இவையெல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதுவும் குறிப்பாக, தம்பிரான் செயல்களை அவர் அறவே வெறுத்தார்.
இரண்டு மாதங்களில் அண்ணாமலை தம்பிரான் தனது மடத்து வேலையாக வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர், பாலயோகியைப் பாதுகாத்துப் பணிவிடையாற்றும் பொறுப்பை, நாயனார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டுப் போனார். நாயனாரும், அவரது மடத்துப் பொறுப்பைப் பார்ப்பதற்காகச் சென்று விட்டார். இந்நிலையில், பழனிச்சாமி பூசாரி என்பவர் பாலயோகியான வெங்கட்ராமனுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார்.
1896ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருவண்ணாமலை வந்தது முதல் 1907ஆம் ஆண்டு வரை, எவரிடமும் எதுவும் பேசாமல் அனைவரிடமும் மௌனமாகவே காட்சி தந்து கொண்டிருந்த வெங்கட்ராமனின் மௌன விரதத்தைக் கணபதி முனீந்தரர் என்பவர் சந்தித்து, அதனைக் கலைத்தார்.
அவருடன் இருந்த பழனிசாமியிடம், பால யோகியான வெங்கட்ராமனின் முழு விவரங்களையும் கேட்டறிந்தார். கணபதி மூனீந்திரர், அவருக்கு ‘ரமண மகரிஷி’ என்று புதிய பெயரை வைத்தார். அந்தப் பெயர் உலகம் முழுவதும் அவரை அடையாளம் காட்டும் பெயராகப் பின்னால் மாறிவிட்டது.
கணபதி முனீந்திரர் சிறிது காலம் ரமண மகரிஷியோடு தங்கியிருந்தார். அப்போது மகரிஷி அவரிடம் சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். அவை மட்டுமன்றி வேறு சில மொழிகளையும் புரியுமளவுக்குப் படித்தார். குறிப்பாக, அவர் தமிழ் மொழியில் கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்று, முதன் முதலாக ‘உள்ளத்து நாற்பது’ என்ற நூலைக் கவிதை வடிவிலே எழுதினார். அந்தக் கவிதை நூலை கணபதி முனீந்திரர் சமஸ்கிருத மொழியில் ‘சத்தரிசன்’ என்று பெயரிட்டு மொழியாக்கம் செய்தார். இந்த நூலுக்குப் பிறகு ரமண மகரிஷி பல நூல்களை எழுதினார். அவை பல உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன.
இதற்கிடையே அவரது தாய் அழகம்மை இருமுறை திருவண்ணாமலைக்கு வந்து, துறவைக் களைந்து வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ரமண மகரிஷி அதனை ஏற்க மறுத்துவிட்டார். அதன் பிறகு அவரது தாய் 1916ஆம் ஆண்டில் அவரைத் தேடி வந்து அங்கேயே தங்கிவிட்டார். அதன் பிறகு 1922ஆம் ஆண்டில் அவர் நோயுற்று இறந்து போனார். தாயாருக்கு சமாதி அமைத்த இடத்தில் தனது ஆசிரமத்தைத் தோற்றுவித்து மகரிஷி அங்கேயே தங்கித் தனது ஆன்மிகப் பணியைத் தொடர்ந்தார்.
ரமண மகரிஷி, துன்பத்தின் காரணம், கர்மா, மரண பயம் நீங்கும் வழி, மறுபிறப்பு, உலகத்தின் தோற்றம், இறையருளுக்கான குரு என்று பல போதனைகளைப் பக்தர்களுக்கு வழங்கினார். அவரது ஆசிரமத்திற்கு அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் என்று பலரும் வந்து தங்கி அவருடன் உரையாடினர். அவர்கள் எதற்காக அங்கு வந்தனர் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை, இருப்பினும் அவர்களுடன் ரமண மகரிஷி தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
அவருக்கு ஏற்பட்ட நோயின் தாக்கத்தால், 1950ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14ஆம் அன்று இவ்வுலகை விட்டு நீங்கினார். திருவண்ணாமலை என்றாலே, அங்கிருக்கும் இறைவனான திருவண்ணாமலையும், ரமணர் ஆசிரமும் தான் என்று சொல்லுமளவிற்கு ரமணரின் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது.