

ஆந்திர மாநிலம், ஏலூரு என்ற இடத்தில் 1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாளன்று பிறந்த விஜயலட்சுமி, குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். இவரது சிறு வயதிலான அழகிய தோற்றம், இவரைப் பல தொல்லைகளுக்குள்ளாக்கியது. அதனால் கவலையடைந்த இவரது பெற்றோர், சிறு வயதிலேயே இவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு துன்பத்தின் காரணமாக, ஆந்திராவிலிருந்து சென்னைக்குப் பிழைப்பு தேடி ஓடி வந்து உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தார்.
சென்னையில் திரைத்துறையில் இரண்டாம் நிலை நடிக, நடிகைகளுக்கான ஒப்பனைக் கலைஞராகப் பணியைத் தொடங்கிய இவரை, தமிழ் நடிகரும் இயக்குநருமான வினுச்சக்ரவர்த்தி, 1979ம் ஆண்டில் வெளியான ‘வண்டிச்சக்கரம்’ என்கிற தமிழ்த் திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்பனை செய்யும் பெண்ணாக, சுமிதா என்ற பெயரில் அறிமுகம் செய்தார்.
வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் இடம் பெற்ற இவரது கதாப்பாத்திரமும், அவரது கவர்ந்திழுக்கும் கண்களும் அன்றையக் காலத்து இளைஞர்கள் மட்டுமின்றி, அனைத்து வயது ஆண்களையும் அவர் பக்கமாக ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, 1979ம் ஆண்டிலேயே ‘இணையே தேடி’ என்கிற திரைப்படம் மூலம் மலையாளத் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.
இவரது கவர்ச்சியான தோற்றத்தினாலும், மூன்று முகம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த துணிவான கதாபாத்திரத்தினாலும் இவர் தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் வாய்ப்புகளைப் பெற்றார். வினுச்சக்கரவர்த்தியின் மனைவி இவருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். அதேவேளையில், சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுக் கொண்டார். அதன் பிறகு, இவரது நடனம் இடம் பெறாத திரைப்படங்களே இல்லை என்று ஆனது.
17 ஆண்டுகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். 1981ம் ஆண்டில் வெளியான அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார். இருப்பினும், நாளிதழ்களும் சில திரைப்படங்களும் இவரைக் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருந்தன.
ஆனால், 1989ம் ஆண்டில் வெளியான ‘லயனம்’ என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம், இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்துக் காட்டியது. இந்தப் படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்தப் படம் இந்தியிலும் ‘சத்மா’ என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.
1989ம் ஆண்டிலிருந்து 1996ம் ஆண்டு வரையிலான 17 ஆண்டு காலம், இளைஞர்களைத் தனது கண்களால் கவர்ந்திழுத்த கனவுக் கன்னி சில்க் சுமிதா, 1996ம் ஆண்டில் சென்னையில் அவருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். சில்க் சுமிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது.
இந்த நிகழ்விற்கு முன்பு, இவர் திரைப்படத் தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும், அதில் ஏற்பட்ட கடனாலும், மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட குடிப்பழக்கத்தினாலும், மன இறுக்கத்திற்கு ஆளாகித் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டது. ஆனாலும், இவரது மரணத்தினைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்து கொண்டுதானிருக்கின்றன.
சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘தி டர்டி பிக்சர்’ என்ற திரைப்படம், 2011ம் ஆண்டில் இவர் பிறந்த நாளான டிசம்பர் 2ம் நாளன்று வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.