
அந்நியர் ஆதிக்கம், அடக்குமுறை இவற்றையெல்லாம் கடந்து நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், பல வித துயரங்களைத் தாங்கி, சுதந்திரமே உயிா் மூச்சு என வீர முழக்கம் செய்து உயிா் நீத்தாா்கள். அப்படிப்பட்ட பல தலைவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் எனும் மாவீரனும் ஒருவர் ஆவாா். இவர் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திழ்ந்தாா். இன்றளவும் அவரது பெருமை நிலைத்து நிற்கிறது.
இவரது நினைவு தினம் இன்று அக்டோபர் 16ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் 3.1.1760ல் பிறந்து, 17.2.1790ல் 47வது பாளையக்காரராக பொறுப்பேற்று ஆங்கிலேயர்களை எதிா்த்துப் போராடிய துணிச்சல்மிகு போராளி. இவர் 16.10.1799ல் கயத்தாறு பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டாா். ஒரு மாபெரும் துணிச்சலுக்குப் பெயர்போன பெருமைக்குாியவர் இவர். இந்த சரித்திர நாயகனின் நினைவு நாளில் அவர்தம் புகழ் பாடுவோம்.
ஆங்கிலேயர்களை எதிா்த்துப் போராடிய வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவர் 18ம் நூற்றாண்டை சோ்ந்த பாளையக்காரர். ஜெகவீர கட்டபொம்மன் - சக்கம்மாள் ஆகியோருக்கு ஒரே மகனாய் பிறந்தவர். பின்னாளில் உலகமே வியக்கும் வகையில் மாபெரும் போராளியாய் திகழ்ந்து சுதந்திர வேட்கையில் திளைத்து,நோ்கொண்ட பாா்வை, நிமிா்ந்த நன்னடை, நெஞ்சினில் அசைக்க முடியா உறுதியாய் வீரத்தின் விளை நிலமாய், ஆங்கிலேயர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் என்ற பெருமைமிகு வீரர் ஆனார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் அவரது தந்தைக்கு உறுதுணையாய் 17.2.1790ல் நாற்பத்தி ஏழாவது பாளையக்காரராகப் பொறுப்பேற்றாா். அந்நாளில் ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை துவங்கிய நேரம். அதன் ஆட்சி திருநெல்வேலியில் உருவாக்கப்பட்டது. அதன் வகையில் அந்த நேரத்தில் அனைத்து பாளையக்காரர்களிடமும் கிஸ்தி வசூல் செய்யப்பட்டது. வரி கட்டாதவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது.
கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை துணிச்சலாக எதிா்த்தாா். அவரது துணிச்சல் பெரிதும் பேசப்பட்டது. அவரது விவேகம், துணிச்சல் நான்கு புறமும் பேசப்பட்டது. 1799ல் ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர். இதனால் பதவி இழந்த வீரபாண்டிய கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னரிடம் தஞ்சமடையும் சூழல் ஏற்பட்டது.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்குப் பயந்து புதுக்கோட்டை மன்னர் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுக்க, பின்னர் ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், 1799ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாளில் கயத்தாறு பகுதியில் தூக்கிலிடப்பட்டாா். ஈரம் நிறைந்த மண்ணில் வீரம் விளைவித்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு காலத்தால் அழியா காவியமாக என்றும் நிலைத்து நிற்கும்! ஆக, அவரது நினைவு நாளில் அவரது ஆற்றல் விவேகம் கண்டு பெருமைப்படுவோம்!