

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் நாடு முழுவதும், ‘தேசிய ஒற்றுமை தினம்’ அல்லது ‘ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்’ என்று கொண்டாடப்படுகிறது. குஜராத்தின் கேடா மாவட்டத்தின் நாடியாத் கிராமத்தில் லெவா படிதார் வகுப்பைச் சேர்ந்த நில உரிமையாளர் குடும்பத்தில் 1875ல் அக்டோபர் 31 அன்று வல்லபாய் படேல் பிறந்தார். ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய அரசு 2014ம் ஆண்டு இந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாட அறிவித்தது.
புதிதாக சுதந்திரம் பெற்ற நாட்டின் ஒருங்கிணைப்புக்கு சர்தார் பட்டேல் உறுதி பூண்டார். அது அவருக்கு ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. அவரது பிறந்த தினமான இன்று அவரது சிறந்த உத்வேக மேற்கோள்கள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* இந்த மண்ணில் தனித்துவமான ஒன்று உள்ளது. அது பல தடைகள் இருந்தபோதிலும் எப்போதும் சிறந்த ஆன்மாக்களின் இருப்பிடமாக இருந்து வருகிறது.
* ஒற்றுமை இல்லாத மனித சக்தி அது முறையாக ஒன்று சேர்ந்து ஒன்றிணைக்க படாவிட்டால், அது ஒரு பலம் அல்ல. அது ஒரு ஆன்மிக சக்தியாக மாறும்.
* ஒருசிலரின் அலட்சியம் ஒரு கப்பலை எளிதில் தரை மட்டமாக்கிவிடும். ஆனால், அதில் உள்ள அனைவரும் முழு மனதுடன் ஒத்துழைத்தால் அதை பாதுகாப்பாக துறைமுகத்திற்குக் கொண்டு வர முடியும்.
* வலிமை இல்லாதபோது நம்பிக்கை தீயதல்ல. நம்பிக்கை மற்றும் வலிமை இரண்டோடும் எந்த ஒரு காரியத்தையும் நிறைவேற்றுவது அவசியம்.
* ஒவ்வொரு இந்தியனும் இப்போது ஒரு ராஜபுத்திரன். சீக்கியன் அல்லது ஜாட் என்பதை மறந்து விட வேண்டும். தான் ஒரு இந்தியன் என்பதையும் தனது நாட்டில் தனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால், சில கடமைகளும் உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
* பொதுவான முயற்சியால் நாட்டை ஒரு புதிய மகத்துவத்திற்கு உயர்த்த முடியும். அதே நேரத்தில், ஒற்றுமையின்மை நம்மை புதிய பேரழிவுகளுக்கு ஆளாக்கும்.
* மகாத்மா காந்திஜி தொடங்கிய அறப்போர் இரண்டு விஷயங்களுக்கு எதிரானது. ஒன்று ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிரானது. இரண்டாவது. மனிதர் தமக்கு எதிரானது. முதல் வகை போர் முடிந்து விட்டது. ஆனால், இரண்டாவது போர் ஒருபோதும் நிற்காது. இது சுய சுத்திகரிப்புக்கானது.
* அஹிம்சையை சிந்தனை, சொல் மற்றும் செயலில் கடைபிடிக்க வேண்டும். நமது அகிம்சையின் அளவுகோல் நமது வெற்றியின் அளவுகோலாக இருக்கும்.
* எனது ஒரே ஆசை இந்தியா ஒரு நல்ல உற்பத்தியாளராக இருக்க வேண்டும். நாட்டில் யாரும் பசியால் வாடி உணவுக்காக கண்ணீர் வடிக்கக் கூடாது என்பதே!
