

நமது பாரத தேசம் மிகப் பொியது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் அரும்பாடு பட்டு பல துயரங்களைச் சந்தித்து, சொல்ல முடியா தண்டனைகளை ஏற்று உயிா் நீத்தவர்கள் பலர். அவர்களின் தியாகம், பல்வேறு போராட்டம், சிறை தண்டனைகளை குறிப்பிட்டுச் சொல்ல வாா்த்தைகளேது. அதுபோல, பல்வேறு தியாகங்களைச் செய்து, மிகப்பொிய சாதனைகளைச் செய்து முடித்த பலருள் இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தாா் வல்லபாய் படேலும் ஒருவர்.
அவரது பிறந்த நாளான அக்டோபர் 31, தேசிய ஒற்றுமை தினமாக (National Unity Day) அனுசரிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு முதல் மேற்படி தினம் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசின் அரசியல் ஒருங்கிணைப்பில் சர்தாா் வல்லபாய் படேலின் பங்கு முக்கியமானது.
1947 - 49க்கு இடைப்பட்ட காலங்களில் சுமாா் 550 க்கு மேற்பட்ட சுதந்திர மன்னர் மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியாவை வலுவான நாடாக்கிய பெருமை சர்தாா் வல்லபாய் படேலையே சாரும். துண்டு துண்டாகப் பிாிந்திருந்த சமஸ்தானங்களை தனது பெரும் முயற்சியால் ஒருங்கிணைத்தவரும் அவரே!
ஆங்கிலேயர்களுக்கு எதிரான அறவழிப் போராட்டத்தை மேற்கொண்ட பெருமையும் இவரையே சாரும். மிகப் பொிய சுதந்திர வேட்கை கொண்ட ஆர்வலர் என்றே இவரைச் சொல்லலாம். அவரைப் போற்றும் வகையில் 2016ல் அவரது நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ 1991ல் இவருக்கு வழங்கப்பட்டது. அதோடு, படேல் இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பெருமைக்குரியவர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தாா் வல்லபாய் படேலின் தேசப் பற்றை நினைவு கூா்ந்து அவரை கெளரவப்படுத்தும் விதமாக குஜராத் மாநிலம், கெவாடியா அருகில் நர்மதை பள்ளத்தாக்கில் 597 அடி உயர பிரம்மாண்டமான சிலை 31.10.2018ல் (ஒற்றுமை சிலை) மைய அரசால் நிறுவப்பட்டது பெருமைக்குாிய விஷயமாகும். ஆக, அவரது பிறந்த நாளில் அவரது கொள்கைகளைப் பின்பற்றுவோம். அவரை வணங்குவோம், அவர் புகழ் வாழ்க!
