

மனிதனை மனிதன் மதிப்பதும், சகோதரத்துவத்தோடு ஒற்றுமையாய் வாழ்வதும், மனிதாபிமானம் கடைபிடித்து சகோதர உணர்வோடு வாழ்வதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மனிதனை மனிதன் அடிமையாக்கி வைத்து சித்ரவதை செய்வதும் ஆதிகாலம் தொட்டே நிகழ்ந்து வருகிறது.
முக்கியமாக, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து பஞ்சத்தில் வாழ்ந்து வந்த, வாழ முடியாமல் பரிதவிக்கும் ஏழை எளிய பாமர மக்களை அவர்களுடைய பலவீனங்களை மையப்படுத்தி, தன்னுடைய தோட்டங்களில், வயல்வெளிகள், செங்கல் சூலைகளில் குறைவான ஊதியமோ அல்லது வட்டிக்கு பணம் கொடுத்து கடனாளியாக்கியோ அவர்களை அல்லும் பகலும் வேலை வாங்கி அவர்களது உழைப்பைப் பயன்படுத்தி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த மற்றும் வாழ்ந்துவரும் கிராமத்து ராஜாக்கள், பண்ணையாா்கள், மைனர்கள் என பலரும் இந்த பஞ்சமா பாதகச் செயலை செய்து வந்திருக்கிறாா்கள்.
இதனிடையில், அதுபோன்ற நிலைகளில் இருந்து ஏறக்குறைய 90 விழுக்காடுகளுக்கு மேல் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாா் அமைப்புகளும் அடிமைத்தனம் ஒழிய வழிவகை செய்துள்ளன. அந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் சர்வதேச அடிமைத்தனம் ஒழிப்பு நாளாக (International Day For The Abolition Of Slavery) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச நாளாகும்.
நவீன அடிமைத்தனத்தின் வடிவங்களான ஆள் கடத்துதல், கட்டாயத்தாலி, பாலியல் பலாத்காரம், குழந்தைத் தொழில், குழந்தைகளை கட்டாயப்படுத்தி உடலில் அங்க ஹீனங்களை ஏற்படுத்தி பிச்சை எடுக்க வைத்தல் போன்ற கொடுமையான அக்கிரமங்களும் அரங்கேறிய நிலையும் உண்டு.
ஆக, இந்த நிலைப்பாடுகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான ஐக்கிய நாடுகளின் சபை 1949ல் மேற்கொண்ட மாநாடு வழிவகை செய்த நாளே டிசம்பர் 1ம் தேதியாகும். முதல் முறையாக 1965ல் இந்த நாள் அனுசாிக்கப்பட்டது.
கட்டாயக் கல்யாணம், கந்துவட்டி கடன், அளவுக்கு மீறிய உழைப்பு, அச்சுறுத்தல், வன்முறை, பெண்களுக்கு எதிரான தொல்லைகள் இவற்றுக்கு ஓரளவு முடிவு கட்டப்பட்டாலும் இன்னமும் விட்டகுறை தொட்டகுறையாக சிற்சில இடங்களில் அடிமைத்தன நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், பாலியல் தொல்லைகளுக்கு ழுழு அளவில் தீா்வு எட்டப்படவேண்டும் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது. அதேபோல, கந்துவட்டிக்கு தீா்வு காண சட்டம் கொண்டு வந்தாலும் திரை மறைவில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், உலகையே அச்சுறுத்தும் கொலை, கொள்ளைகளோடு குழந்தை மற்றும் ஏனையோா்களுக்குக் கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு நிரந்தரத் தீா்வு கண்டால்தான் அனைவருக்கும் நல்லதாகும். சட்டம் கடுமையாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இந்த அவல நிலை மாற வேண்டும். இதுதான் சமுதாயப் பாதுகாப்பாகும்!