
சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான புனிதமான பிணைப்பைக் குறிக்கும் பண்டிகை பாய் தூஜ் இன்று (23.10.2025) அனுசரிக்கப்படுகிறது. சகோதர அன்பு மற்றும் பாதுகாப்பின் அடையாளமாகக் கொண்டாடப்படும் இந்த பாய் தூஜ், ஐந்து நாளாகக் கொண்டாடும் தீபாவளி பண்டிகையின் முடிவைக் குறிக்கிறது. இது சகோதர, சகோதரிகளுக்கு இடையில் சிறப்பான பிணைப்பை உண்டாக்கும் விதத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்டிகை சகோதரர்களின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளையும் பதிலுக்கு அவர்களிடமிருந்து கவனிப்பு மற்றும் பாதுகாப்பின் வாக்குறுதியையும் எடுத்துக்காட்டும் விதமாகவும் கருதப்படுகிறது. ‘பாய் தூஜ்’ என்ற பெயர் இரண்டு வார்த்தைகளிலிருந்து வந்தது. ‘பாய்’ என்றால் சகோதரர் மற்றும் ‘தூஜ்’ என்றால் இந்து சந்திர நாட்காட்டியின்படி, அமாவாசைக்குப் பிறகு வரும் இரண்டாவது நாளைக் குறிக்கிறது.
இந்த நாள் உடன்பிறப்புகளுக்கு இடையிலான புனித உறவைக் கொண்டாடுகிறது. அன்பு, மரியாதை மற்றும் உணர்ச்சி ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இது மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் ‘பாவ் பீஜ்’ (Bhau Beej) என்றும், மேற்கு வங்காளத்தில் ‘பாய் ஃபோண்டா’ (Bhai Phonta) இந்தியா மற்றும் நேபாளத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ‘பாய் டிகா’ (Bhai Tika) அல்லது ‘பாய் திகார்’ (Bhai Tihar) போன்ற வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நெற்றியில் குங்குமம் மற்றும் சந்தனப் பசையால் ஆன சடங்கு திலகத்தை இட்டு அதன் நடுவில் சிறு துளி அரிசியையும் வைக்கிறார்கள். இந்தச் சடங்கு சகோதரர்களின் நீண்ட ஆயுள், நல்வாழ்வு மற்றும் தீங்குகளிலிருந்து பாதுகாப்பதற்காக செய்யும் பிரார்த்தனையாகும்.
இந்த பாய் தூஜிற்கு பின்னால் ஒரு புராணக் கதை இருக்கிறது. அதாவது, யமுனா தேவி தனது சகோதரர் எமதர்மராஜரை தனது வீட்டிற்கு அழைத்து, அவரது நீண்ட ஆயுளுக்காக திலகம் மற்றும் ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது.
எமதர்மராஜா தனது சகோதரியின் பக்தியால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இந்த நாளில் தங்கள் சகோதரிகளிடமிருந்து திலகம் பெறும் அனைத்து சகோதரர்களுக்கும் எமதர்ம ராஜா தனது ஆசீர்வாதத்தை வழங்கி, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளையும் கொடுப்பதாக நம்பப்படுகிறது.