
நமக்கு பல வழிகளிலும் உதவியாக இருக்கும் விலங்குகளைப் பாதுகாப்பது மற்றும் அவற்றிற்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும் அக்டோபர் 4ம் தேதி சர்வதேச விலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது.
வன விலங்கு ஆர்வலரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருமான பிரான்சிஸ் ஆஃப் அசிசி என்பவரின் நினைவாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக விலங்கு தின விழாவின் தொடக்க விழா 1925ம் ஆண்டு பெர்லினில் ஹென்ரிச் ஜிம்மர்மேன் அவர்களால் நடத்தப்பட்டது. விலங்குகளின் நலன் குறித்த விழிப்புணர்வை பரப்பும் நோக்கில் அவர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தார். 1931ம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இத்தினம் முதல் முறையாக கொண்டாடப்பட்டது. விலங்குகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தையான ‘அனிமல்’ என்ற வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து வந்தது.
விலங்குகள் வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகள் என வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான விலங்குகள் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. நம் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை, ஆடு, மாடு ஆகியவை வீட்டு விலங்குகள் என்றும், சிங்கம், புலி, யானை, கரடி, ஒட்டகம், குதிரை, மான் உள்ளிட்டவை காட்டு விலங்குகள் என்றும் கூறப்படுகிறது.
விலங்குகளும், இயற்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன. சில விலங்குகள் காடு, கடல் உள்ளிட்ட இயற்கை வளங்களை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளது. இயற்கை வளங்களை மனிதன் சேதப்படுத்துவதால் இவற்றின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. சில விலங்குகள் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன.
காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தான் காடுகளின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் மேய்ச்சல் விலங்குகள் மட்டும் அதிகப்படியாக பெருகி காடுகளின் வளம் குறையும். இதன் காரணமாகவே வன ஆர்வலர்கள் விலங்குகள் அழிவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
உலகம் முழுவதும் பல விலங்குகள் அழிந்து வருகின்றன. சில விலங்குகள் அருகி வருகின்றன. நமது நாட்டின் தேசிய விலங்கு புலி. இதன் நிலை இன்று ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. இந்தியாவில் கங்கையில் அதிகமாக வாழும் ஒரு வகை மீன் ‘கங்கை சுறா’ இதுவும் அழிந்து வரும் நிலையில் உள்ளது.
சதுப்பு நில மழைக்காடுகளில் வாழும் உயிரினம் சுமத்ரான் காண்டாமிருகம். இந்தியா, இந்தோனேசியா, பூடான், மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகம் இருந்தது. ஆனால், அதன் எண்ணிக்கை தற்போது குறைந்து அந்த இனமே அருகி வருகிறது. மேலும், இந்திய ஓநாய், சிவப்பு கீரிட கூரை ஆமை, செம்பு மூக்கு முதலை, கங்கா ஓங்கில் போன்றவையும் அழியும் நிலையில் உள்ளன.
உலகளவில் ஆஸ்திரேலியா ஓநாய், டோடோ பறவை, கரீபிய கடல் நாய் போன்ற விலங்குகள் முற்றிலும் அழிந்து விட்டன. நீல அலகு வாத்து, சிறுத்தை புலி, சிங்கம் போன்ற உயிரினங்களையும் பாதுகாக்காவிட்டால் அதுவும் விரைவில் அழிந்து விடும் என்கிறார்கள் வன உயிர் ஆர்வலர்கள்.
தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு வகையான விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கம். உலகெங்கும் இந்நாளில் அரிய உயிரினங்கள் குறித்தும், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்தும் சிறப்பு கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன.
விலங்குகள் சில தங்களது வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள வருடத்திற்கு ஒரு முறை இடம் பெயர்தல் நிகழ்வை செய்கின்றன. தான்சானியாவின் செரெங்கேட்டியிலிருந்து கென்யாவின் அருகிலுள்ள மசாய் மாரா சரணாலயத்திற்கு வடக்கு நோக்கி மாபெரும் இடம்பெயர்வு வருடந்தோறும் நடைபெறும். ஜூலை முதல் அக்டோபர் வரை நீடிக்கும் இந்த காலகட்டத்தில், தான்சானியாவின் செரெங்கேட்டி பகுதியிலிருந்து காட்டெருமைகள் மற்றும் வரிக்குதிரைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான விலங்குகள், புதிய புல் வளர்ச்சியைத் தேடி, மாரா ஆற்றைக் கடந்து மசாய் மாராவுக்கு வந்து சேர்கின்றன.
இந்த இடப்பெயர்ச்சியின்போது 1.5 மில்லியன் காட்டு விலங்குகள் புதிய புற்களை தேடி இடம் பெயர்கின்றன. அதில் இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் 3,50,000 ஒட்டகச்சிவிங்கியும் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை மாறுபடும் என்றாலும், கடந்த கால இடம்பெயர்வுகளில் 1.5 மில்லியன் காட்டு மாடுகள், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வரிக்குதிரை மற்றும் ஏராளமான பிற விலங்குகள் பல வாரங்கள் நீடிக்கும் நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றன.