
ஒரு நாளைக்கு சுமார் 90 ரூபாய் கூட செலவழிக்க முடியாத ஒருவர் மிகவும் வறுமையில் இருப்பவர் என சர்வதேச மதிப்பீடு கூறுகிறது. ஆனால், சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் என அடிப்படை வசதிகள் கிடைக்காதவர்கள் கூட வறுமை நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறார்கள். உலகளவில் 1.1 பில்லியன் மக்கள் வறுமை நிலையில் வாழ்கின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். அதாவது 584 மில்லியன் சிறார்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறாமல் வளர்கிறார்கள்,
இந்தியாவில் 234 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அதேபோல, பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய இந்த ஐந்து நாடுகளும் சேர்ந்து, உலகின் ஏழைகளில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளன. இந்தியாவில் 32 சதவீதம் பேர் சர்வதேச வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர் என்கிறது உலக வங்கி ஆய்வு.
வசதி படைத்தோர் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. வளராத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு. உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்குக் கிடைப்பது வெறும் 14 சதவீதம் மட்டுமே.
சிறு வயதிலேயே வறுமைக்கு எதிராகப் போராடினார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ரெசின்கி. ‘உலகில் ஏதாவது ஒரு இடத்தில் வறுமையால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது’ என்றார் இவர். இவரது முயற்சியால்தான் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா. சபையால் இந்த தினம் அங்கீகரிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1987ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பசி, வறுமை, வன்முறை, பயம் போன்றவற்றால் பலியானவர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு லட்சம் பேர் டொர்கேட்ரோ நகரில் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்று கூடினர். இந்நாளை வறுமை ஒழிப்பு நாளாக கடைப்பிடித்தார்கள். இதை ஐ.நா. கவனத்திற்குக் கொண்டு சென்றார் ஜோசப் ரெசின்கி.
ஐ.நா. சபை 1992 முதல் இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பிறகு வறுமையை ஒழிப்பதற்கான நாளாக அக்டோபர் 17ல் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச மதிப்பீடுபடி இந்தியாவில் 100ல் 42 பேர் வறுமையில் உள்ளனர். உலகின் மொத்த ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர்.
மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவதற்கு கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது, அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றைத் தவிர்க்க பல தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால் மட்டுமே வரும் சந்ததியினரும் வறுமையில் தள்ளப்படுவது தவிர்க்கப்படும்.
ராணுவத்திற்காக உலக நாடுகள் செய்யும் செலவுத் தொகையில் ஒரு சதவீதத்தை வறுமை ஒழிப்புக்காக செலவிட்டாலே போதும், உலகில் பட்டினி சாவுகள் குறையும். நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப் புறங்களில் ஏழ்மை வளர்ந்து வருகிறது. காரணம், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப முதலீடு இல்லாமை, கல்வியறிவு இல்லாமை, பொது விநியோகத் திட்டத்தின் மோசமான செயல்பாடு போன்றவை.
சிறு விவசாயிகள் வளர்ச்சித் திட்டம், வறட்சிப்பகுதி வளர்ச்சி திட்டம், வேலைக்கு உணவு திட்டம், குறைந்தபட்ச தேவை திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம் போன்றவற்றை அரசும் நடைமுறைப்படுத்தி வறுமையை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2030ம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றம், பேரிடர் தாக்கங்களினால் உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் உலகெங்கிலும் உள்ள நாடுகள் வருடத்துக்கு 560 பேரிடர்களை சந்திக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஒற்றுமையின் மூலமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்கிறது ஐ.நா. சபை.