

நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு முதல் சாதாரண வீட்டுப் பொருட்கள் வரை அனைத்தும் விரைவில் மாசு ஏற்பட்டு ஆரோக்கியத்தை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற வாழ்க்கை முறை காரணிகளுடன், சுற்றுச்சூழல் காரணிகளும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. உலகில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது உணவுப் பழக்கங்கள்தான். உணவுப் பழக்கங்களில் கவனமாக இருப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை மூன்றில் ஒரு பங்காக குறைத்து விடலாம் என்கிறார்கள் அமெரிக்க புற்றுநோய் ஆய்வுக் கழக ஆராய்ச்சியாளர்கள்.
உடல் வளர்சிதை மாற்றத்தின்போது பிரி ரேடிக்கல்ஸ் வெளியாகின்றன. இவை உடல் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த பாதிப்பை தவிர்க்க ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் உதவுகின்றன. வைட்டமின் சி ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். ஆரஞ்சு பழங்களிலும், எலுமிச்சை பழங்களிலும் உள்ள வைட்டமின் சி புற்றுநோயை உருவாக்கும் பிரி ரேடிக்கல்லை எதிர்த்துப் போராடும் திறன் பெற்றவை. பப்பாளி பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கும் ‘நைட்ரோஸமைனஸ்’ என்ற பொருள் உடலில் ஏற்படுவதைத் தடுக்கிறது. புற்றுநோய் ஏற்பட பெரிதும் காரணமான கார்சினோஜென்களின் விளைவுகளைக் கட்டுப்படுத்தும் போலிசின் என்ற பொருளும் பப்பாளியில் உள்ளது.
புற்றுநோயை வராமல் தடுக்க உதவும் மற்றும் ஒரு உணவுப்பொருள் வெள்ளைப் பூண்டு. இதில், ‘அல்லியம்’ என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது கார்சினோஜென்கள், செல்களுக்குள் நுழைய விடாமல் தடுக்க உதவுகின்றன. இந்த, ‘அல்லியம்’ என்ற கூட்டுப்பொருள் வெங்காயத்திலும் உள்ளது. புற்றுநோய் என்பதே செல்களின் அனாவசியமான பெருக்கத்தையே குறிக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களிலும் உள்ள ‘மானோ டெர்பென்ஸ்’ என்ற பொருள் உள்ளது. இது அபரிமிதமான கார்சினோஜென்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. மேலும், இவற்றில் புற்றுநோய் செல்களை அழிக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் பினாவானாய்ட்ஸ் ஆகியவையும் உள்ளன.
பீட்டா கரோட்டின் சத்து நிறைந்த கேரட், காலிபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நுரையீரல் மற்றும் குடல் பாதைகளின் சவ்வு படலத்தை பாதுகாத்து கேன்சர் வராமல் தடுக்கும் என்கிறார்கள் சர்வதேச இம்யூனாலஜி விஞ்ஞானிகள். சோயாவில் உள்ள சில பொருட்கள் உடலில் தோன்றும் இனம் தெரியாத செல்கள் திடீரென பெருகுவதைத் தடுக்க உதவுகின்றன. எனவே, சோயா உணவுகள் பெண்களின் மார்பக புற்றுநோய்யை வராமல் தடுக்க உதவுகிறது என்கிறார்கள்.
நாம் அன்றாடம் உட்கொள்ளும் தேநீரை தயாரிக்க உதவும் தேயிலையில் மாங்கனீசு தாதுக்கள் அதிகமுள்ளது. இது புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். உணவில் அடிக்கடி காளான் சேர்த்துக்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோயை தாமதப்படுத்தும் என்கிறார்கள் கலிபோர்னியாவின் ‘சிட்டி ஆப் ஹோப்’ புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காளானில் உள்ள பாலி சாட்சுரைடு எனும் கார்போஹைட்ரேட்தான் காரணம் என்கிறார்கள். சிறுநீரக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் மீன் உணவுகளில் உள்ளதாக சுவீடன் மருத்துவ ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
தினமும் ஒரு கையளவு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பலர் நம்புகின்றனர். அதிலும் குறிப்பாக, புற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாப்பதாக நம்பிக்கை கொடுக்கும் பல்வேறு சப்ளிமெண்டுகள் இன்று எளிமையாகவே கிடைக்கின்றன. ஆனால், ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பழமொழிக்கு ஏற்ப அனைத்து சப்ளிமெண்ட்டுகளும் நமக்கு நன்மை செய்வது கிடையாது. அவற்றில் பல நல்லதை விட, அதிக தீங்கை ஏற்படுத்துகின்றன.
எனவே, சப்ளிமெண்ட்டுகளை சாப்பிடுவதற்கு முன்பு எச்சரிக்கையை கையாளுவது மிகவும் அவசியம். சொல்லப்போனால், சுகாதார வல்லுனர்கள் மக்களை உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை எடுக்கவே ஊக்குவிக்கின்றனரே தவிர, சப்ளிமெண்ட்களில் இருந்து அல்ல. மேலும், அதிக அளவு சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது நமக்கே தீங்காகி விடும்.
சப்ளிமெண்ட்டுகள் சில சமயங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம் அல்லது அதன் சிகிச்சையுடன் குறுக்கிடலாம் என்று புற்றுநோய் உணவு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில் புற்றுநோயை தடுப்பதாக சொல்லப்படும், பிரபலமான 5 சப்ளிமெண்ட்கள் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் இ, செலினியம், போலிக் அமிலம் போன்ற சப்ளிமெண்ட்களின் அதிகப்படியான உபயோகம் புற்றுநோயை உருவாக்கும் என்கிறார்கள்.