
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் பல நிலைகளில் வறுமையின் பிடியில் சிக்கி வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர வடிகால் இன்னும் எட்டப்படவில்லை என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மைய மற்றும் மாநில அரசுகள் எத்தனை எத்தனை விதமாக மாறுபட்ட கொள்கைப்பிடிப்போடு வந்தாலும் நாட்டில் வறுமை ஒழிந்தபாடில்லை. அரசின் பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதில் முழமை அடையவில்லை என்றே சொல்லலாம். பல விதங்களில் பினாமி, இடைத்தரகு, கமிஷன் என பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டை தொடர்வதும் தொடர்கதையே.
இது சம்பந்தமாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வறுமையை ஒழிக்க அனைத்துத் தரப்பினர்களும் ஒத்துழைப்பு நல்குவதோடு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பாடுபடவேண்டியதன் அவசியத்தை உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ம் நாள் உலக வறுமை ஒழிப்பு தினமாக (International Day For the Eradication of poverty) கடைபிடிக்கப்படுகிறது.
வளா்ந்த நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும் வறுமையின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. வறுமை நிலையிலிருந்து ஏழைகளை மீட்டு பசிக்கொடுமையிலிருந்து மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபையால் 1992ல் மேற்படி தினம் தொடங்கப்பட்டது.
வறுமையை இரண்டு விதமாகப் பிாிக்கும் நிலையில் வறுமைக்கோட்டிற்குக் கீழ், வறுமைக்கோட்டிற்கு மேல் என இரண்டு தட்டுகளாகப் பிாித்து கணக்கெடுப்பு நடத்தினாலும், அதிலும் அரசியல் தலையீடுகள் பல சந்தர்ப்பங்களில் புகுந்து வறுமையில் பாதிக்கப்பட்டவன் ஒதுக்கப்பட்டு, யாருக்குச் சென்றடைய வேண்டுமோ அங்கு போகாமல் தடுக்கப்படுகிறது.
இந்த நிலை ஆரோக்கியமானதல்ல. பல வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பாதியிலேயே நிறைவடையாத நிலைக்குத் தள்ளப்படுவதும் தொடர்கிறது. மக்களுக்கு பஞ்சம், பசியில்லாத நிலை, உடுக்க உடை, தங்குவதற்கு போதுமான இடம், நல்ல குடிநீா், மின் தேவை, அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை தங்கு தடையில்லாமல் கிடைக்க வேண்டும். அதற்கான தொலைதூர திட்டம் தீட்டப்பட வேண்டும்.
அந்தத் திட்டம் தொடர்ந்து வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்குப் போய்ச் சேரும் வகையில் அரசின் நிலைபாடு நம்பகத் தன்மையோடு இருப்பதோடு, பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியத் தேவையாக இருப்பதே நல்லது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறைவேற்ற முடியாமல் போவதும் தொடர்கதையாகவே உள்ளது.
மேலை நாடுகளில் பல இடங்களில் பல்வேறு தட்டு மக்கள் அனுபவித்து வரும் வறுமையானது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், பொதுமக்களும் அரசே அனைத்தையும் இலவசமாகத் தரும் என நினைப்பதும் தவறான முன்னெடுப்பே. இந்த எண்ணம் மக்களிடம் அதிகம் ஒட்டிக்கொண்டுள்ளது. உழைக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். நோ்மையான வழியில் பொருள் ஈட்டக்கூடிய விடாமுயற்சியும் தொடர்ந்தாலே வறுமையின் பிடியிலிருந்து மீள்வது கடினமே அல்ல. இதற்கு முதலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குவதே சிறப்பாக இருக்கும்.